விக்னேஷ்வரனின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு: ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை

புதிய சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட உரை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (20) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட உரையில் சில பகுதிகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபாநாயகரிடம் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட கருத்துக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் குரலெழுப்பியுள்ளார்.

அனைவரும் ஒரே நாட்டின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென பேசப்படும் காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் மேற்கொள்ளப்படுவதை அங்கீகரிக்க முடியாதென்றும், அது நேற்றைய சத்தியப் பிரமாணத்துக்கு விரோதமானதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்தை நீங்குவதா இல்லையா என்ற விடயம் குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பதிலளித்துள்ளார்.

நேற்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,

‘சபாநாயகர் அவர்களே, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் எனது வாழ்த்துக்களை எனது தாய் மொழியான, இவ்வுலகத்தின் தொன்மையான மொழி மற்றும் இந்த நாட்டின் முதன்மை சுதேச மொழியில் ஆரம்பித்தேன். மேலும், இணைப்பு மொழியில் எனது உரையைத் தொடர்கின்றேன்.

பாராளுமன்றத்தின் உயர் பதவியை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் நீண்ட அரசியல் அனுபவம் காரணமாக இந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இப்போது ஒரு பலமான அரசாங்கம் உள்ளது. இது 1977ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தன அமைத்ததற்கு ஒத்த ஒரு அரசாங்கமாகும். அந்த ஆட்சியிலேயே 1983 இனப் படுகொலைகள் இடம்பெற்றன. அந்த அரசாங்கத்தின் பாதையைத் தொடர்ந்த யானைக் கட்சி, எதிர்கால பாராளுமன்றில் ஒரு ஆசனத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த அரசாங்கமும் அவ்வாறு இருக்காதென்று நான் நம்புகின்றேன். அவர்கள் கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்றும் நான் நம்புகின்றேன். எல்லா சமூகங்களும் சமமானவர்கள் என்று உணரும் காலம் உருவாகுமென்று நினைக்கின்றேன். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களின் மரபுரிமைகளும் கலாச்சார உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தப் பாராளுமன்றில் ஒவ்வொருவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதையும் நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். நீங்கள் எங்களை பக்கச்சார்பின்றி வழிநடத்துவீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாட்டில், மேலாதிக்க அதிகாரப் பிரயோகத்தை நாம் எவரிடமிருந்தும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. சிங்கள கிராம மக்கள் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உள்ளது என்பதைக் குறிப்பிட ‘ கல கல தே, பல பல வே’ என்ற பிரயோகத்தைக் குறிப்பிடுவார்கள். நன்றி சபாநாயகர் அவர்களே.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here