சீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி

சீனாவுடன் இணைந்து கூட்டு வலுசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
யாழ். பாக்கு நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் நெடுந்தீவு, நைனா தீவு மற்றும் அனலை தீவு ஆகிய 3 தீவுகளை சீனாவுக்கு வழங்குவதற்கான அங்கீகாரத்தை கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை வழங்கியிருந்தது.
இந்த திட்டம் தொடர்பான தகவலை இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை வெளியிட்டிருந்தது. டென்டர் நடைமுறை மூலம் இதனைப் பெறுவதற்கு இந்தியாவும் முயற்சி செய்திருந்த  போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குறித்த திட்டத்திற்கு அவசியமான தொகையை நன்கொடையாக தருவதற்கும் இந்தியா தயார் என்ற விருப்பு நிலையையும் அது வெளியிட்டது.
இந்தியாவில் இருந்து பதில்கள்
இது தொடர்பாக இந்தியா இராஜதந்திர ரீதியில் பதிலளித்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகேயை தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சித்த போதும் அது தோல்வியடைந்தது. மேலும் இந்த திட்டத்திற்கு இந்தியா இன்னும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை என்பதாக அமைச்சின் மேலதிக செயலாளரும் கருத்து தெரிவித்தார்.  
இந்தத் திட்டமானது இலங்கை-இந்தியா உறவுகளில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள முடியுமானது  என்றும் இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை  என்பதாகவும் இந்தியாவின் முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகரும், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளருமான ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் இது தொடர்பாக அறிந்திருக்கவில்லை
குறித்த திட்டம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைகளிடமிருந்து எதுவித அங்கீகாரமும் பெறாத நிலையில் இது தொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவித்தல்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வகையான திட்டங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கட்டாயமானதாகும். குறித்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி  நிதியுதவி வழங்குவதுடன், சீனாவின் எடெக்வின் மற்றும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து நிதியுதவி செய்கிறது
12 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்திற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இந்த திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையின் கொள்முதல் முறைமைகள்/ நியமங்களுக்கேற்ப  மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய எடுத்துக்காட்டுகள்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தைப் பொறுத்தவரை அது தமக்குக் கிடைக்கும் என இறுதி வரை நம்பியிருந்து ஏமாற்றமடைந்த இந்தியா, அது தொடர்பாகவும் பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது. இந்தியாவுக்கு நெருக்கமான ஒரு பகுதியில் சீன திட்டத்தை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரமானது கடுமையான இராஜதந்திர பிரச்சினைகளை எழுப்பும் என்றும் பல துறைசார்  வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  
நெடுந் தீவு இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  முன்னதாக, வடக்கில் ஒரு வீட்டுத் திட்டத்தில் சீனா ஈடுபடுவதையும், கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் வருவதையும் இந்தியா அதிகாரப்பூர்வமாக எதிர்த்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சரின் மறுமொழி
இது தொடர்பாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,  வட பகுதி தீவுகளில் நிலவும் மின்சார நெருக்கடிக்கான நிரந்தர தீர்வாக அமைய இருக்கும் இந்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி  நிதியுதவி வழங்க இருப்பதாகவும், சீனா டென்டர் முறை மூலமாகவே தகுதி பெற்றதாகவும் தெரிவித்தார்.
முதல் சுற்றில் டென்டர் நடைமுறையில் இந்தியாவும் பங்குபற்றியிருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக நெருக்கமான ஒரு பகுதியில் சீனாவுடன் இணைந்து இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக நாம் அவரைக் கேட்ட போது, இந்தியா இந்த திட்டத்திற்கான செலவை நன்கொடையாக வழங்குவதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் இது குறித்து மேலதிக விடயங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Previous article“யாழ். கலாசார மண்டபத்தை நாங்களே நிர்வகிப்போம்”
Next articleமியான்மார் நாட்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட முடியாது – தியாகராஜா வரதாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here