மியான்மார் நாட்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட முடியாது – தியாகராஜா வரதாஷ்

தென்கிழக்காசிய நாடான மியான்மாரில் அரங்கேறியிருக்கின்ற இராணுவக் கிளர்ச்சியானது உலகையே அதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இவ்வாறு மக்களாட்சி மலரமுடியாமல் வரலாற்றில் அதிகளவில்  இராணுவப் பிடிக்குள் விழுந்து கிடக்கும் மியான்மாரின் நிகழ்வுகளை இலங்கை சர்வதேச அரசியல் துறை நிபுணர் ஒருவரிடம் கலந்துரையாடுவதற்கு நாம் விரும்பினோம்.
இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தியாகராஜா வரதாஷ் அவர்களை கடந்தவாரம் தொடர்பு கொண்டோம்.
அதனுடைய முக்கியமான அம்சங்களை சுருக்கமாக இங்கு தருகிறோம்.
வினா : பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமற் செய்யப்பட்டு இராணுவ ஆட்சி நிறுவப்பட்டிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : மியன்மார் நாட்டு மக்களைப்  பொறுத்தவரை இது அவர்களுக்கு ஒரு புதிதான விடயமல்ல. கிட்டத்தட்ட சுதந்திரத்திலிருந்து அதிக வருடங்களாக இராணுவத்தினரின்  ஆட்சியின் கீழ்தான் அம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.பன்னெடுங்காலமாக இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்த பர்மா, மக்களாட்சியை திடீரென கண்டு கொள்வதும் அதனை அவர்கள்  தக்கவைத்துக் கொள்வதும் சிரமமான ஒரு விடயமாகும்.
குறிப்பாக வலுவான ஜனநாயக கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அல்லது பலத்தை மியான்மார் இன்னும் அடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
வினா : இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான அரசியல் உறவு பற்றி சொல்ல முடியுமா?
பதில்: இலங்கை மற்றும் மியான்மாரை இணைக்கின்ற பாலமாக கலாச்சாரமே தொழிற்படுகின்றது. இங்கு அரசியல் உறவு என்பதனை விடவும்  பெளத்த மதத்தின்  செல்வாக்குகளின் மூலம் ஏற்பட்ட கலாச்சார இணைப்புக்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
குறிப்பாக மியான்மார் நாட்டிலிருந்து வருகை தருகின்ற பல பிக்குகள் எமது பல்கலைக்கழகங்களில் கல்வியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.இதனூடாக இலகுவான கலாச்சார ஏற்றுமதி பரிமாற்றம் இடம்பெறுகின்றது.
மியான்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் த சில்வா அவர்களின் நியமனத்தை இரு நாடுகளுக்கிடையிலான பெளத்த கலாச்சாரத்தின் உச்சகட்டமாகக் கூறலாம்.
மியான்மாரில் பிக்குகளினால் எடுத்துரைக்கப்படுகின்ற  அடிப்படைவாத கருத்துக்களும் சிந்தனைகளும் அந்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இழையோடியிருப்பதனைதான் இன்று நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.
வினா : மியன்மாரின் நிகழ்வுகளுடன் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்த வகையிலாவது ஒத்து செல்கின்றனவா? அது பற்றி விளக்க முடியுமா?
பதில் : மிகத் தெளிவாக ஒன்றை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வேறு. மியான்மாரின் அரசியல் கலாச்சாரம் வேறு. எனவே மியான்மார் நாட்டு நிகழ்வுகளுடன் எமது நாட்டின் செயற்பாடுகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
இதனை இன்னும் தெளிவாக சொல்வதென்றால் இராணுவத்தினரால் ஆளப்பட்டு பல தசாப்தங்களாக இராணுவச் செல்வாக்கு மிகைத்திருந்த மியான்மார் சமூகச் சூழலும், ஜனநாயக கலாச்சாரத்தில் ஊறிப்போன, சிவில் சமூகங்களின் வகிபாகம் அதிகம் கொண்ட இலங்கைச் சூழலும் மிக வித்தியாசமானது.
இலங்கை வரலாற்றில் இது வரை ஒரே ஒரு தடவைதான் இராணுவ கிளர்ச்சிக்கான முயற்சி (1962 ஆம் ஆண்டு) இடம்பெற்றிருக்கின்றது.
மியான்மாரின் அரசியல் கட்டமைப்பும், நிர்வாகக் கட்டமைப்பும் இராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அது சிவில் கட்டமைப்பில் ஆதிக்கம் கொண்டது. எனவே சிவில் கட்டமைப்பின் ஆதரவில்லாமல் ஒரு போதும் இராணுவ ஆட்சியொன்றை இலங்கையில் தக்கவைக்க முடியாது.
வினா : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல துறைகளிலும் இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி சிறிது விளக்க  முடியுமா? இதனை பர்மாவினுடைய அரசியலுடன் இணைத்து பார்க்க முடியுமா?
பதில் : நேரடியாகச் சொல்வதாயின், சிவில் கட்டமைப்பிற்குள் இராணுவ வீரர்கள் உள்வாங்கப்படுவதானது அதற்கான அடித்தளமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதனை உடனடி அச்சுறுத்தலாக சொல்ல முடியாது.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றமை போன்றவையே இவ்வாறான ஒரு அச்சத் தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியுள்ளது.
மியான்மாரைப் பொறுத்தவரை அங்கு மலரத் தொடங்கிய சிவில் ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதனை கிளர்ச்சியினூடாக தற்போது பிடித்து வைத்திருக்கின்றது.
ஆனால் இலங்கையினைப் பொறுத்தவரை அவ்வாறானதோர் அச்ச சூழல் இல்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். இதற்குக் காரணம் இலங்கை அடிப்படையில் சிவில் கட்டமைப்பை பலமாகக் கொண்ட நாடாகும்.
வினா : ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற , விரும்புகின்ற மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பர்மாவின் நிகழ்விலிருந்து எதனை செய்தியாக சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில் : ஜனநாயக சக்திகளை ஊக்குவிப்பு செய்யுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். குறிப்பாக பயம் என்ற பண்பினை இல்லாமற் செய்வதற்கு அவர்கள் பாடுபட வேண்டும். சிவில் நிர்வாகக் கட்டமைப்பை எல்லா வகையிலும் பலப்படுத்துவதுடன், அதனுடைய அனைத்து நகர்வுகளும் சுதந்திரமானவை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இலங்கையில் ஜனநாயக கலாச்சார கட்டமைப்பு வலுவிழந்து  போகக் கூடிய ஒரு சூழல் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
Previous articleசீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி
Next article300 மெகாவாட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்திக்கு ஒப்புதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here