தேசபந்துவின் நியமனம்; ரணிலின் தவறான, தன்னிச்சையான முடிவு என்கிறார் சாலிய பீரிஸ்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமை மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்துவின் பெயரை பரிந்துரைத்தமை ஆகியன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தன்னிச்சையான செயற்பாடு என உயர்நீதிமன்றிடம் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எடுத்துரைத்துள்ளார்.

தேசபந்து தென்னகோனின் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை இரத்துச் செய்யக்கோரி இளம் ஊடகவியலாளர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான நேற்றைய (09) பரிசீலனையின்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தேசபந்துவின் நியமனத்தை இரத்துச் செய்யக்கோரிய 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஷமில் பெரேரா, சாலிய பீரிஸ், விரான் கொரயா, சட்டத்தரணி மனீஷா குமாரசிங்க உள்ளிட்டோர் மனுதாரர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

மனுதாரர் தரப்பு வாதங்கள் நேற்றோடு (09) நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை (15) முதல் நாளாந்த அடிப்படையில் பிரதிவாதிகளின் வாதங்களை செவிமெடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதோடு, அந்த வாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்கிற உத்தரவை பிறப்பிப்பதற்கும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இளம் ஊடகவியலாளர் சங்கம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தேசபந்து தென்னகோன் மீது பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதோடு, தேசபந்துவை சித்திரவதை வழக்கு ஒன்றின் பொறுப்பாளியாக நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அவரது பெயரை பரிந்துரைத்தமை தவறு என்றும் ஜனாதிபதியின் தன்னிச்சையானச் செயற்பாடு இது என்றும் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தை சுட்டிக்காட்டி மனுதாரர் சார்பில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி மனீஷா குமாரசிங்க, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் தனது கடமைகளை நிறைவேற்ற தவறிய அதிகாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் தேசபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை தவறு என்றார்.

எனவே, இவ்வாறானக் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவது பிரச்சினைக்குரியதாகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Previous articleரதுபஸ்வல இராணுவ படுகொலை; சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here