கோப்ரல் எண் 01009 ; விநாசித்தம்பி வேல்நாயகத்திற்கு நடந்தது என்ன?

(சாலிகா விமலசேன)

இலங்கைத் தரைப் படைக் கோப்ரல் விநாசித்தம்பி வேல்நாயகத்தைக் காணாமல்போய்விட்டார். 2006ஆம் ஆண்டு வைகாசி (மே) மாதம் 2ஆம் நாள் மாலைக்குப் பின்னர் அவர் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

வேல்நாயகம் காணாமற்போய் ஒருவருடமாகிவிட்டதனால் அவர் இறந்துவிட்டார் எனக் குறிப்பிட்டு தெரிவித்து அவரது குடும்பத்தினரிடம் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் எப்படியிறந்தார், எங்கே இறந்தார், அவரது இறப்புக்கு எது அல்லது யார் காரணம் போன்ற விவரங்கள் எவையும் அதிலில்லை. காணாமற்போய் ஒரு வருடமாகிவிட்டதனாலேயே அவர் இறந்துவிட்டார் என்று கருதப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அவிசாவளையிலிருந்து சிறது தூரத்தில் உள்ள ஆனந்தகம என்கிற ஊரைச் சேர்ந்தவர் வேல்நாயகம். தரைப்படை ஆயுதக் களஞ்சியம் ஒன்று வெடித்துச் சிதறித் தீப்பற்றி எறிந்தன் பின்னர் உலகம் முழுவதும் அண்மையில் அறியப்பட்ட ஓரிடம் அவிசாவளை.

இலங்கைத் தரைப் படைத் தலைமையகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பயணியாற்றிய வேல்நாயகம், அவிசாவளையில் இருந்து ”லிபேர்ட்டி” பேருந்து எடுத்து பணியகத்திற்குச் சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை 7 மணிக்கு நெருக்கமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவது அவரது வழமை. சம்பவ தினமான வைகாசி 2ஆம் நாள் அன்று அப்படி அவர் வீடு வந்து சேரவில்லை. ஆனால், அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்திற்கு வீடு நோக்கிப் புறப்பட்டிருக்கின்றார்.

அன்று அவரது மகனது பிறந்தநாள். அலுவலகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அலுவலகத் தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்துத் தனது மகளிடம் பேசிய அவர், தம்பியின் பிறந்த நாளுக்காக கேக் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவார் என்று கூறியிருக்கின்றார். எனவே அவர் அலுவலகத்தில் இருந்து நேராக வீட்டுக்குச் செல்லும் திட்டத்துடன்தான் இருந்தார் என்பது தெரிகிறது. இருப்பினும் அவர் வீடு வந்து சேரவில்லை.

அவர் காணாமற்போன பின்னர் படைகளை விட்டுத் தப்பியோடியவர் என்கிற வகையில் அவரைத் தேடத்தொடங்கிய தரைப் படை, தப்பியோடியோர் பட்டியலில் இவரை இணைத்தது. ஆனால், அவர் தப்பியோடிவிட்டார் என்பதை படைத் தரப்பால் உறுதிப்படுத்த முடியவில்லை. படை ஆள் ஒருவர் தப்பியோடிவிட்டால் அவருக்குரிய எந்தவொரு கொடுப்பனவும் அதாவது சம்பளம், ஊக்கத் தொகை, ஓய்வூதியம் என்று எதுவுமே குடும்பத்தினருக்குக் கிடைக்காது. எனவே அவரது சம்பளம் உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டன.

குடும்பத்தின் அவலம்

திடுதிப்பென கணவனைக் காணவில்லை, அவரது சம்பளமும் கிடைக்கவில்லை என்கிற நிலையில் கோப்ரலின் மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்துப்போனார். அந்த நிலையிலும்கூட தமது பெருமளவு நேரத்தையும் பணத்தையும் கோப்ரலைத் தேடுவதற்கே செலவிட்டது அவரது குடும்பம். காவல்துறையிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்வது, தரைப் படைத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் நாட்டின் அதிபருக்கும் கடிதங்களை எழுத்துவது என்று காலங்கள் கடந்தன. ஆனால், எங்கிருந்தும் உருப்படியான தகவல்கள் ஏதுமில்லை.

கணவனைக் காணோம், குடும்பத்தை நடத்த வருமானமில்லை, கணவனைத் தேடுவதிலேயே காலங்கள் கரைதோடுகின்றது என்கிற இந்த இக்கட்டான நிலைக்கு மத்தியில் ஊரவர்களும் அவர்களை அந்நியர்களாகவே நடத்தத் தொடங்கிவிட்டார்கள். படையை விட்டோடிய ஒருவரின் குடும்பமாக அவர்கள் முத்திரை குத்தப்பட்டார்கள். முன்னர் உதவியவர்களும்கூட விலகி ஓடத் தொடங்கினார்கள். கேட்டதற்கு, உங்களுடன் சேர்ந்தால் எமக்கும் பிரச்சினைகள் வரும், நாங்களும் காவல்துறை விசாரணைகளுக்குப் போக வேண்டியிருக்கும் என்றார்கள்.

ஒரு வருமானமும் இன்றி குடும்பம் பெரும் இக்கட்டுக்குள் தவித்தது. மறுபுறத்தில் கோப்ரல் காணாமற்போனமை தொடர்பில் காவல்துறையிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மீது சரியான விசாரணைகளும் நடத்தப்படவில்லை. கோப்ரலைக் கண்டுபிடிப்பதற்குச் செயற்பபட்ட அனைத்து முயற்சிகளும் வீண் என்ற முடிவிற்குக் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.

ஆனால், அவர்களின் தொடர்ச்சியான முயற்சி அவர்களுக்குச் சிறிய பயனைத் தந்திருந்தது. 2010 ஆவணி (ஓகஸ்ட்) 17ஆம் நாள் முதல் தரைப்படையினால் ஒரு தொகுதிக் கொடுப்பனவு குடும்பத்தினருக்குக் வழங்கப்பட்டது. அத்தோடு, 1990 முதல் கோப்ரல் தரைப் படையில் சேவையாற்றியிருப்பதைக் கருத்தில்கொண்டு மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்றும் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.

அதாவது, கோப்ரல் காணாமற்போய் 4 வருடங்களின் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால் கோப்ரல் காணாமற்போனது முதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டது வரையான 4 வருடங்களையும் கோப்ரலின் சேவைக் காலத்தில் தரைப் படை சேர்த்துக்கொள்ளவில்லை. கோப்ரலின் பெயர் படைவிட்டோடிகள் பட்டியலிலேயே இருந்ததனாலேயே அவரது குடும்பத்தினருக்கு அவரது சம்பளத்தைக் கொடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

4 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத் தொடர்ந்து குடும்பத்தினர் கோப்ரலைக் கண்டுபிடிக்கும் தமது முயற்சியைக் கைவிடவில்லை.

இன்னும் 7 வருடங்கள் கழித்துத் தரைப் படைத் தலைமையகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் படைத்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடிப்படை விசாரணைகளில் இருந்து, காணாமற்போன கோப்ரல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

”கோப்ரலின் சகாக்கள் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர், அவரும்கூட புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017 வைகாசி 2ஆம் நாள் தரைப்படை இந்தக் கடிதத்தை எழுதியிருந்தது.

படைத்துறை நீதிமன்றம் கோப்ரல் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டால், கோப்ரல் ஒரு படைவிட்டோடி என்ற அடிப்படையில் அவரது சம்பளத்தை நிறுத்தி வைத்திருப்பது முறையற்றது. கோப்ரல் கொல்லப்பட்டது உண்மையானால், கொல்லப்பட்ட மற்றைய படையினரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகளும் சலுகைகளும் ஏன் கோப்ரல் வேல்நாயகத்தின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை? அதுவும் 11 வருடங்கள் கடந்தும் ஏன் இன்னும் அவை கொடுக்கப்படவில்லை என்பதற்குத் தரைப் படையிடம் காரணங்கள் ஏதுமில்லை. 

கோப்ரல் வேல்நாயகம் அலுவலகத்தில் இருந்து பணியை முடித்து வெளியேறும்போது அலுவலகப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கின்றார் என்றும் லிபேர்ட்டி தரிப்பு நிலையத்தில் இருந்து பேருந்து ஏறி சலாவ தரிப்பில் இறங்கியிருக்கின்றார் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 11 வருடங்களின் பின்னர் தெரிவித்திருக்கின்றது தரைப்படை.

அதேநேரம் கொஸ்கம காவல் நிலையத்தின் றுபதிகாரியால் 2017 மாசி 19ஆம் நாள் வழங்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையில் கொஸ்கம காவல் நிலையத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கோப்ரல் காணாமற்போனார் என்பதற்கான எந்த ஆதாரமும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

மிக அண்மையில் கோப்ரல் காணாமற்போயிருக்கிறார் என்று – அதாவது படை விட்டோடியாக இன்றி காணாமற்போயிருக்கிறார் என்று – ஏற்றுக்கொள்வதாகத் தரைப் படைத் தலைமையகம் குடும்பத்தினருக்கு அறிவித்திருக்கின்றது. அதனடிப்படையில் கோப்ரலின் சம்பள நிலுவைகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றுவரையில் அவை எவையும் வழங்கப்படவில்லை. கேட்டால், அந்தக் கோவைகளில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திடவேண்டும் அதற்காக உரிய தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எப்படி மறைந்தார்?

கோப்ரல் வசித்த ஆனந்தகமவுக்கும் சலாவ சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும் மக்களைப் பொறுத்தவரையில் வேல்நாயகம் ஒரு தங்கமான மனிதன். யாரோடு வேண்டுமானாலும் சிரித்துப் பேசிப் பழகக்கூடியவர். ஒவ்வொரு நாளும் கிட்டத்ததட்ட மாலை 6.50 மணியளவில் அவர் லிபேர்ட்டியிலிருந்து வரும் பேருந்திலிருந்து சலாவ சந்தியில் இறங்குவார்.

வேல்நாயகம் வேலைக்குச் செல்லும் நேரமும் வரும் நேரமும் அந்தச் சந்தி சன சந்தடி மிகுந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்து வேறிடங்களுக்குப் வேலைக்குச் செல்பவர்களும் வேலையிலிருந்து திரும்பி வருபவர்களும் சந்தியில் சந்தித்துக்கொண்டு குசலம் விசாரித்துக்கொள்ளுவார்கள். கோப்ரலும் இதே பழக்கமுடையவர் என்பதால் அவருக்கு இத்தகைய பயண நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது சம்பவ தினமான வைகாசி 2ஆம் நாள் கோப்ரல் சரலாவ சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கிச் சென்றதை எப்படி எந்தவொருவரும் காணாமற்போயிருக்க முடியும்?

கோப்ரல் காணாமற்போய் 11 வருடங்களின் பின்னர் தரைப் படைத் தலைமையகம் சொல்கிறது கோப்ரல் தரைப்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்டு சலாவ சந்தியில் வந்திறங்கியிருக்கிறார் என்று. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தலைமையகம் எழுதிய கடிதத்தில் கோப்ரல் பயணம் செய்த பேருந்தின் சாரதியைச் சாட்சியமாகக் காட்டி இதனைத் தெரிவித்துள்ளது.

தரைப் படைத் தலைமையகம் சொல்வதைப்போன்று கோப்ரல் சலாவ சந்தியில் வந்திறங்கியிருந்தால், அவர் யாருடைய கண்களிலும் அகப்படாமல் எப்படிக் காணாமற்போயிருக்க முடியும்? அதுவும் அவர் வந்திறங்கும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்து செல்லும் பல நண்பர்களை அவர் கொண்டிருந்தபோதும் ஒருவர்கூட அவர் சலாவவில் வந்திறங்கியதை எப்படிக் கவனிக்காமல் விட்டிருக்கமுடியும்?

இன்னொரு வகையில் பார்த்தால், கோப்ரல் பேருந்திலிருந்து இறங்கியதன் பின்னர் கடத்தப்பட்டிருந்தால் சலாவ சந்தியில் எவருக்கும் தெரியாமல் எப்படி அது நிகழ்ந்திருக்கும். கொஸ்கம காவல் நிலையத்தின் அறிக்கைப்படி அன்றைய தினத்தில் அந்தச் சந்தியிலோ அதையொட்டிய பகுதிகளிலோ அப்படிப்பட்ட பலவந்தக் கடத்தல் சம்பவம் ஏதும் நிகழந்ததாக இல்லை.

அங்கிள் மகேந்திரன் கதை

கோப்ரல் காணாமற்போன கதைக்குள் மற்றொரு கதையும் இருக்கின்றது. அது அங்கிள் மகேந்திரன் தொடர்பானது. அவர் கோப்ரல் வேல்நாயகத்தின் பழைய நண்பர் என்று சொல்லப்படுகின்றது. அவர் கோப்ரலின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். கோப்ரல் காணாமற்போனதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அங்கிள் மகேந்திரன் கோப்ரலின் விட்டிற்கு வந்து அங்கிருந்த தனது ஓரிரு உடுப்புகளையும்கூட எடுத்துச் சென்றிருக்கின்றார்.

அங்கிள் மகேந்திரன் வழக்கமாகத் தனியாகவே கோப்ரல் வீட்டிற்கு வருவார். ஆனால், தனது ஆடைகளை எடுக்க அவர் வந்தபோது வெள்ளை நிறக் காரில் அவருடன் மேலும் மூன்று பேரும் வந்திருந்ததற்குச் சாட்சிகள் உண்டு. கோப்ரல் காணாமற்போனதன் பின்னர் அங்கிள் மகேந்திரன் அந்த வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.

அங்கிள் மகேந்திரன் என அழைக்கப்படும் செந்திவேல் மகேந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாட்டாளர். 1983 கறுப்பு ஜூலை சம்பவங்களின் பின்னர் அவர் புளொட் ஆயுத இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர். புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகப் பின்னர் இந்தியாவிற்குத் தப்பியோடி இருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த பின்னர் இந்தியாவில் இருந்து திரும்பிய அங்கிள் மகேந்திரன் கருணாவுடன் பொது வெளியில் அடிக்கடி காணப்பட்டார்.

2004ஆம் ஆண்டு புலிகளின் உடைவின் பின்னர் அங்கிள் மகேந்திரன் கருணாவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக மாறிவிட்டார் என்று சொல்லப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ராஜபக்சக்களுடன் கருணா நெருக்கமான தொடர்புகளைப் பேணத் தொடங்கியதற்குப் பின்னர் அங்கிள் மகேந்திரன் கொழும்பிலேயே தங்கிவிட்டார்.

அங்கிள் மகேந்திரனின் பின்னணி என்பது வெறுமனே புளொட் இயக்கத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. அவர் இன்ரர்போல் எனப்படும் சர்வதேசக் காவல்துறையினால் தேடப்படுவோர் பட்டியில் இருப்பவர். உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவித்த குற்றவாளிகள் பிரிவுப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றைத் துன்புறுத்திக் கொலை செய்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து இலங்கைக் காவல்துறையினருக்கும் இன்ரர்போல் அறிவித்திருக்கின்றது. ஆனாலும் அங்கிள் மகேந்திரனுக்கு இலங்கையில் இதுவரையில் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. அவரது நடமாட்டம் கட்டுப்பாடுகளற்றதாகவே இருந்திருக்கிறது.

கோப்ரல் காணாமற்போனமைக்கு யார் காரணமாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினரைக் கேட்டால், அவர்கள் அங்கிள் மகேந்திரன் மீதுதான் சந்தேகம் என்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கின்றது. அங்கிள் மகேந்திரன் வேறு மூன்று பேருடன் கடைசியாக வீட்டுக்கு வந்துவிட்டுச் சென்ற பின்னர், தான் யாராலோ துரத்தப்படுகின்றார் என்கிற சந்தேகம் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கோப்ரல் வேல்நாயகம் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார்? இந்தக் கேள்விக்கான விடையில் அவர் காணாமற்போனதற்கான விடையும் கிடைக்கக்கூடும்.

அங்கிள் மகேந்திரன் குறித்தும் அவர் மீதான தமது சந்தேகம் குறித்தும் குடும்பத்தினர் காவல்துறையினரிடமும் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு காவல்துறை வழங்கிய அறிக்கையில் அங்கிள் மகேந்திரனுக்கும் கோப்ரல் காணாமற்போனமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றது.

உண்மை அதுதானா?

Previous articleCOVID-19 தொற்றுக்குள்ளானோரை ஊடகங்கள் குற்றவாளிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்- YJA
Next articleஊடகத்துறையானது திரிபிடகம், அல் குர்ஆன் போன்று இருந்திருக்க வேண்டும் என முன்பு நம்பினோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here