“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவராக உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக மற்றும் அமைதிக்கான மையம் (CSR), சமூக மற்றும் அமைதிக்கான மையத்தின் பணிப்பாளர் அருட் தந்தை ரொஹான் சில்வா,டி.டி. சுராஜ் நிலங்க (இவரது 20 வயது மகன் ஷங்ரில்லா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்) ஆகியோரே இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சமூக மற்றும் அமைதிக்கான மையம் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், இதனை மையப்ப‌டுத்திய உயர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிரான மேல்நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கடமை தவறியமை தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

அதேபோல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவிலும் நிலந்த ஜயவர்தன தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

ஈஸ்டர் தாக்குதல்களை முன்னெடுத்த சஹ்ரான் ஹஷீம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் நீண்ட நாட்களாக தெரிந்திருந்தும், அவர்கள் தாக்குதல் நடாத்தப்போவதாக 2019 ஏப்ரல் மாதம் வெளிநாட்டு தகவலாளிகள் இருவர் ஊடாக கிடைத்த உளவுத் தகவல்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காது நடந்துகொண்டமையால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று 237 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும், 400இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அதனால், இந்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவுக்கு குற்றவியல் பொறுப்பு இருக்கும் நிலையில், அது தொடர்பில் அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி சாட்சிகளுடன் பொலிஸ் தலைமையகத்துக்கு இரு முறைப்பாடுகள் அளிக்கப்பட்ட போதும் அது தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

முறைப்பாட்டை விசாரணை செய்யாமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு கேள்விக் கடிதம் ஒன்றினை அனுப்பிய போதும் அதற்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால், நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்ய இந்த ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்தது யார் என தற்போது சமூகத்தின் மத்தியில் பரவலான ஒரு கதையாடல் உள்ளது. அவ்வாறான பின்னணியில் தாக்குதலை தடுக்கத் தவறியமையானது தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர்களின் அழுத்தம் காரணமாக நடந்ததா? அல்லது தாக்குதலை நடாத்த உதவி செய்யும் விதமாக நடந்ததா? என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலை நாட்டுவதற்காக மட்டுமன்றி, இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மீள நடப்பதை தடுப்பதற்காகவும் சட்டத்தை சரிவர அமுல் செய்து நிலந்த ஜயவர்தன உள்ளிட்டோருக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அத்தியவசியமானதாகும்.

இது அமைப்புக்கள் மற்றும் நபர்களின் அழுத்தங்களுக்காக முன்னெடுக்கப்படக்கூடாதது. இலங்கை பொலிஸ் மற்றும் சட்டத்தை அமுல் செய்யும் தரப்பினர் சுயமாக முன்னெடுக்க வேண்டிய விசாரணையாகும். பொலிஸார் இந்த பொறுப்பினை சரிவர நிறைவேற்றாமை காரணமாக பொலிஸாருக்கு எதிராக உத்தரவொன்றினை பெற்றுக்கொள்ள நீதிமன்றின் தயவை நாம் நாட வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதியை நிலை நாட்ட இந்த வழக்கு நடவடிக்கை தொடர்பில் அமைதியாக காத்திருக்கின்றோம்.” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
Next articleபொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here