ஆயுதக் கடத்தலுக்கு உதவி வழங்கப்பட்டதா என்பதைக் கண்டறிய ஊடகவியலாளரைத் தடுத்துவைத்து விசாரணை

ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ஹோமாகம பிடிபன பிரதேசத்துக்கு ஒரு தொகை சட்ட விரோத துப்பாக்கிகளைக் கடத்திச் செல்ல உதவி வழங்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சந்தேகத்தின் பேரில் ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் குறித்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையில், பாதுகாப்புத் துறையினரைத் திசை திருப்பிவிட்டு, தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒருவரின் வாகனத்தில் ‘ஊடகம்’ என்ற அட்டையைக் காட்சிப்படுத்தி, ஒரு தொகைத் துப்பாக்கிகளை ஹோமாகம பிடிபன பிரதேசத்துக்குக் கொண்டு செல்லவும், அவற்றை குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கு வழங்குவதற்கும் உதவியதாகவே குறித்த ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வாகனத்தின் முன் ஆசனத்தில் இந்த ஊடகவியலாளர் சென்றுள்ளதாகவும், அவர் ஊடக அடையாள அட்டையை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர் அடிக்கடி ஐந்து ஊடக நிறுவனங்களில் சேவையாற்றியுள்ளதாகவும், கைதுசெய்யப்படும் போது மவ்பிம பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளராகச் செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அறிக்கையிடுபவர் என்பதால், அதற்கு எதிரானவர்கள் வழங்கியுள்ள போலித் தகவல்களை மையமாக வைத்தே ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளரின் பக்க தரப்பினர் கூறுகின்றனர்.

ஊடகவியலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத காரணத்தினால், பொலிஸ் தரப்புத் தகவல்கள் மாத்திரமே வெளியிடப்படுகின்றதோடு, ஊடகவியலாளர் பக்க தகவல்கள், உண்மைத் தன்மைகள் சரிவர தெரிந்துகொள்ள முடியாத நிலைமை தொடர்கின்றது.

Previous articleவிக்னேஷ்வரனின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு: ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை
Next articleநாட்டில் பாதுகாப்பு அமைச்சரொருவர் இல்லை- கலாநிதி நிஹால் ஜயவிக்ரம

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here