பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்

Young Journalist

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்திருப்பது சட்டவிரோதமானது, தர்க்கமற்றது மற்றும் தன்னிச்சையானது மட்டுமல்லாது அரசியலமைப்பை மீறும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதால், தேசபந்து தென்னகோனின் நியமனத்தை இரத்து செய்ய உத்தரவிடக்கோரி, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, செயலாளர் எம்.எப்.எம்.பஸீர், ஏற்பாட்டாளர் ஷாலிக விமலசேன, பொருளாளர் நிரோஷ் மைத்திரி, செயற்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர, உபதலைவர் பா.நிரோஸ்குமார் மற்றும் உறுப்பினர் ரேகா நிலுக்ஷி ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி மனுஷிகா குரே ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் தகுதியற்ற நபர் எனவும், அதனைக் கருத்திற்கொள்ளாது அரசியலமைப்பை மீறி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக இளம் ஊடகவியலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவையின் தலைவரும் சபாநாயகருமான மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அரசிலயமைப்புப் பேரவையின் ஒன்பது உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஜனாதிபதிக்குப் பதிலாக ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தேசபந்துவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரையில், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியால் 2023 நொவம்பர் 29ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனத்துக்கு அரசியலமைப்புப் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியிருக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்திருந்தார்.

மேலும், தேசபந்து தென்னகோன் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினரல்ல. ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடக்கப்போவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய தேசபந்துவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஈஸ்டர் தாக்குதல்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

ஆனாலும், தேசபந்துவுக்கு எதிராக எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்தபோது, கோட்டாகோகம போராட்ட இடத்தில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க தவறியிருந்தார்.

அடிப்படை உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி 5 இலட்ச ரூபாய் தண்டப் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தேசபந்துவுக்கு 2023ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேற்குறித்த காரணங்கள் மற்றும் மேலும் பல காரணங்களை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.” என்று உயர்நீதிமன்றிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Previous article“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here