“நாம் 200” நிகழ்வு; ஜீவனின் அமைச்சுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Indian Finance Minister arrives to participate in NAAM200

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற “நாம் – 200” நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை ஜூலை 03ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டுமென, தகவலறியும் ஆணைக்குழுவு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு உத்தரவிட்டது.

இந்திய வம்சாவளிகளான மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் வகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் “நாம் 200” என்கிற நிகழ்வொன்றை கடந்த வருடம் நவம்பர் 02ஆம் திகதி நடாத்தியிருந்தார்.

ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் தினேஸ் குணவர்தன,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

“நாம் 200” நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர் பா.நிரோஸ்குமார், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் நவம்பர் 06ஆம் திகதி பல்வேறு தகவல்களை கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.

தகவல் கோரிக்கையில் கோரப்பட்டிருந்த சில தகவல்களை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு வழங்கியிருந்தபோதிலும் முக்கியமான பல தகவல்கள் வழங்கப்படாமையில், தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 24ஆம் திகதி செய்யப்பட்ட மேன்முறையீடு நேற்று (15.05.2024) தகவலறியும் ஆணைக்குழு முன்பாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது.

இந்த விசாரணையின்போது ஜீவன் தொண்டமானின் அமைச்சின் சார்பாக அமைச்சின் மேலதிக செயலாளர் (திட்டமிடல்) எம்.என்.டி.குணரத்ன, அமைச்சின் தகவல் அதிகாரி மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி என நால்வர் ஆணைக்குழு முன்பாக பிரசன்னமாகியிருந்தனர்.

RTI ஊடாகக் கேட்கப்பட்ட 19 கேள்விகளில் 4 கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் பா.நிரோஸ்குமார் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

“நாம் 200” நிகழ்வுக்கு யாருடைய நிதி செலவிடப்பட்டது என தகவலறியும் ஆணைக்குழு ஜீவனின் அமைச்சின் அதிகாரிகளிடம் வினவியபோது, “ “நாம் 200” நிகழ்வுக்காக திரைசேரியிடமிருந்து நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், GOPIO என்கிற அரச சார்பற்ற நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.” என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.

“அப்படியாயின் ஏன் அந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் (GOPIO) தகவல் அதிகாரிக்கு இந்த தகவல் கோரிக்கையை அனுப்பி வைக்காது, நீங்கள் (நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு) பதிலளித்தீர்கள்? இது பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தானே?” என ஆணைக்குழு வினவியது.

சிறிது நேரம் மௌனமாக இருந்த ஜீவன் தொண்டமானின் அமைச்சின் அதிகாரிகள், “GOPIOவின் தகவல் அதிகாரிக்கு இந்த தகவல் கோரிக்கையை இப்போது அனுப்பி வைக்கிறோம்.” என்றார்கள்.

“தகவல் கோரிக்கை மேன்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுவிட்டது. இனி எவ்வாறு அனுப்ப முடியும்?” என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

தகவல் கோரிக்கையில் கோரப்பட்டிருக்கும் பற்றுச்சீட்டுக்கள் மற்றும் நிதி செலவழிக்கப்பட்டமைக்கான ஆவணங்கள், காசோலை பிரதிகளை GOPIO நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தருவதாக ஆணைக்குழு முன்பாக அமைச்சின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

மேற்குறித்த நிகழ்வுக்கான தகவல்களை பெற்றுக்கொள்ள கடந்த 06 மாதங்களாக போராடி வருவதாக ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் பா.நிரோஸ்குமார், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு கால அவகாசத்தை வழங்காது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, ஜூலை 03ஆம் திகதி முன்னர் தகவல் கோரிக்கையில் விடப்பட்டுள்ள (பதில் வழங்காத) அனைத்து கோரிக்கைகளுக்குமான தகவல்களை வழங்க வேண்டும் என தகவலறியும் ஆணைக்குழு ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு உத்தரவிட்டது.

Previous articleபொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்கள்
Next articleரதுபஸ்வல இராணுவ படுகொலை; சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here