ரதுபஸ்வல இராணுவ படுகொலை; சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சுத்தமான குடிநீருக்காக வெலிவேரிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய வேண்டுமென, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரதுபஸ்வல சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சாட்சிகளை மறைத்து விசாரணைகளை முன்னெடுத்ததால், இந்த விசாரணைகளை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்குமாறு அப்போதிருந்த பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் இளம் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து சி.ஐ.டியினருக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் பல்வேறு விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்ததையும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்காக பிரிகேடியர் தேஷபிரிய குணவர்தனவின் தலைமையிலான இராணுவக் குழு தடிகளுடன் அங்கு வந்திருந்தமை, அமைதியாக போராட்டங்களை முன்னெடுத்த மக்களை கலைந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டமை, கலைந்து செல்வதற்கு சில நிமிட கால அவகாசம் வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்திருந்தும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதலை நடத்தி மூவரை இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தமை, தேவாலயத்துக்குள் சென்ற கிறிஸ்தவ மத குருமார்கள் உள்ளிட்டோர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதலை மேற்கொண்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது சாட்சியங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதையும் சட்டமா அதிபருக்கு எழுதியக் கடிதத்தில் இளம் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது நீண்ட நேரம் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொண்டிருந்தபோதிலும், அதனை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவொன்றை பிரிகேடியர் தேஷபிரிய பிறப்பிக்கவில்லை என இராணுவம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருந்ததோடு, அது தொடர்பில் நீதிமன்றுக்கும் அறிக்கையிடப்பட்டிருந்தது.

இதன்படி, ரதுபஸ்வல வழக்கில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous article“நாம் 200” நிகழ்வு; ஜீவனின் அமைச்சுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
Next articleதேசபந்துவின் நியமனம்; ரணிலின் தவறான, தன்னிச்சையான முடிவு என்கிறார் சாலிய பீரிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here