மொழிப் புலமைக்கான சலுகைக் காலம் நீடிக்கப்படாததால் அரச ஊழியர்கள் பாதிப்பு

இரண்டாம் மொழி நிபுணத்துவத்துக்கான சலுகைக் காலம் நீடிக்கப்படாததால் அரச ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியில் இருந்து மேற்படி சலுகைக் காலம் நீடிக்கப்படாதிருப்பதாக தேசிய தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

2007ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்டவர்கள் இரண்டாம் மொழிப் புலமையைப் பூரணப்படுத்த வேண்டும் என்பதோடு, சிங்கள மொழியில் அரச சேவையில் இணைந்துகொண்டவர்கள் தமிழ் மொழிப் புலமைத் தரத்தையும், தமிழ் மொழியின் ஊடாக அரச சேவையில் இணைந்துகொண்டவர்கள் சிங்கள மொழிப் புலமைத் தரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் மொழிப் புலமைத் தரத்தைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் அரச ஊழியர்களுக்கு சிக்கல்கள் இருப்பதால், தொழிற்சங்கங்களுக்கும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும், அதற்கமைய ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய சுற்றுநிரூபம் வெளியாகும் வரையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை அரச பரிபாலன சுற்றறிக்கை மூலம் சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி சலுகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையிலும், ஊழியர் பிரச்சினைகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்படவில்லை என்றும் தேசிய தொழிற்சங்க முன்னணி குற்றம்சாட்டுகின்றது.

அரச சுற்றறிக்கையின் தாமதத்தால் ஊழியர்களின் பதவியுயர்வு மற்றும் ஊதிய அதிகரிப்பு என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அமைச்சரிடம் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டும் தீர்வுகள் எட்டவில்லை என்றும் தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

Previous articleபுதிய அரசியலமைப்பின் திருத்த வரைபைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழு நியமனம்
Next articleஅரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் மூலம் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here