‘தெற்கின் பெரும்பான்மை இனத்தவர்கள் மாகாண சபை முறைமை வேண்டாம் என்பதற்காக வட- கிழக்கு மாகாண சபைகள் ஒழிக்கப்படக் கூடாது’- ஹஸன் அலி

“ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தும் நோக்கோடு புதிய அரசியலமைப்பு  மாற்றத்தைப் பார்க்கக்கூடாது” – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார்.

அண்மைய அரசியல் அவதானம் குறித்த நேர்காணல் ஒன்றில் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் மாகாண சபை முறைமை வேண்டாம் என்பதற்காக வடக்கு- கிழக்கில் உள்ள மாகாண சபைகள் ஒழிக்கப்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.

அவரது முழுமையான நேர்காணலை இங்கே தருகின்றோம்.

கேள்வி: உங்களது தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து விளக்க முடியுமா?

பதில்: ஆம், நாம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையே ஒன்றுகூடினோம். அதாவது, கட்சியின் உயர்பீடமும் தலைமைத்துவ சபையும் கூடினோம். அதன்படி, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். இவ்விடயத்தில் கூட்டணிகள் அமைப்பதா என்பது குறித்து நாம் இன்னும் சிந்திக்கவில்லை. வடகிழக்கின் எல்லா இடங்களிலும், கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் போட்டியிடுவதாகத் தீர்மானித்துள்ளோம்.

கேள்வி: பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் குறித்த உங்களது அவதானம்?

பதில்: பெரும்பான்மை சமூகம் ஓர் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி, வந்த ஒரு தற்காலிக எழுச்சியாகவே இதனை நான் கருதுகின்றேன். இன ரீதியாக சிந்தித்து ஒரு யாப்பு மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அப்படியான முடிவு, இலங்கையை நிரந்தரமான பிரச்சினைக்குரிய பூமியாக மாற்றிவிடும். அதன் பின்விளைவாக வெளிநாட்டு சக்திகள் ஊடுறுவுவதற்கும் அதிகமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடும்.
இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மைச் சமூகம் வாக்களித்தது என்பது சிறுபான்மைச் சமூகங்களை நசுக்குவதற்காகத்தான் என்ற பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறானதொரு மனோபாவம் பெரும்பான்மை சமூகத்தினரிடையே ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது.

பெரும்பான்மைச் சமூகம் ஒற்றுமைப்பட்டு, நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களையும் இணைத்துக்கொண்டு செல்லக்கூடிய வகையிலான தீர்வொன்றைக் கொண்டுவருவதே பெரும்பான்மைச் சமூகம் வழங்கிய வெற்றிக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கும். இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை மக்கள் வழங்கிய வெற்றியைக்கொண்டு அனைவருமே நன்மையடையலாம்.

கேள்வி: நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, சிறுபான்மையினருக்கு இருந்த பேரம் பேசும் வாய்ப்புகள் இனியும் இல்லையெனத் தெரிகின்றது. இதுகுறித்து…

பதில்: பேரம் பேசும் பலத்தை கடந்த 20 வருடங்களில் எந்தவொரு கட்டத்திலும் ஒழுங்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றே கூறவேண்டும். தேர்தல் காலங்களில் முஸ்லிம், தமிழ் தரப்புகள் ‘பேரம் பேசும் பலத்தை வைத்து நாம் விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம்’ என்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தாலும், பெரிதாக எதுவும் சாதித்ததாக இல்லை.
தமிழ் சமூகத்தைப் பற்றி என்னால் கருத்துக்கூற முடியாது. எனினும், அவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் அதனைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதேபோன்று, அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, காத்திரமான அரசியலொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் தரப்பினர் ஆட்சியில் இருந்தபோதுகூட செய்யாதவைகளை எதிர்க்கட்சியில் இருந்து செய்யப்போவதாகக் கூறிவருகின்றனர். பேரம் பேசும் பலம் இருந்தாலும், அதனைக் கொண்டு இந்த மூன்றில் இரண்டு பெற்றுள்ள அரசாங்கத்தில் எதுவுமே செய்ய முடியாது. ஜனாஸா எரிப்பு விடயத்திற்கு ஒவ்வொரு காரணங்கள் கூறப்பட்டாலும், அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி, அழுத்தமொன்றை வழங்க முடியாத கட்டத்திலேயே இருக்கின்றோம்.

கேள்வி: நாட்டில் அரசியலமைப்பு மாற்றமொன்று குறித்து பேசப்படுகின்றது. புதிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்படுமாயின், அது எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்: நாட்டில் அரசியல் யாப்புத் திருத்தமொன்று குறித்துப் பேசப்படுகின்றமை உண்மையே. வட- கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் வேறுபட்டதாகவும், வட- கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் வேறுபட்டதாகவும் காணப்படுகின்றது. அதேபோன்று, மொத்தமாக சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாகவும் பார்க்கப்பட வேண்டும்.

அதற்காக, இந்நாட்டு முஸ்லிம்களை இரண்டு பிரிவினராகக் கூறுபோடுவதல்ல. வட- கிழக்கைப் பொருத்தவரையில், அவை தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகும்.

உதாரணமாக, தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வேறொரு திசையில் பயணித்தாலும், நான் கட்சியை ஆரம்பித்தவர்களுள் ஒருவன் என்றவகையில் இதனைக் கூறலாம். ஆரம்பத்தில் வட- கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார நடவடிக்கைகளில் நாம் கூறியதும் எமது கொள்கைகளாக இருந்ததும், ‘வட-கிழக்கு மாநிலம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம். அதிலே தமிழர்களும் முஸ்லிம்களும் தமது சுயநிர்ணய உரிமையுடன் செயற்படக்கூடிய இரண்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டு, தமிழ்- முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதே ஆகும்.

அதன் பின்னர் யுத்த சூழ்நிலைகள், அதனைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களுக்கிடையேயும் சில கருத்து முரண்பாடுகள் தோன்றின. அவ்வாறான கருத்தொற்றுமையில்லாத தன்மையை வட- கிழக்குக்கு வெளியே இருந்த பெரும்பான்மை சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, இரண்டு சமூகங்களையும் பிரிப்பதற்கும், அதனை மையமாக வைத்து அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கும் முயன்றனர். இவை அனைத்துமே எமக்குத் தெரிந்த விடயங்களாகும்.
இந்த விடயங்கள் புதிய அரசியலமைப்பில் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். அந்த பிரதிபலிப்பின் ஊடாக சரியான தீர்வுகள் வரும் வேளை, நாம் எமது கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால், ‘வட- கிழக்கு மாநிலம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்’ என்பதே அடிப்படையாகும்.

ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தை அடிமைப்படுத்தும் நோக்கோடு யாப்பு மாற்றத்தைப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்ப்பது பிழையான அணுகுமுறையாகும். உதாரணமாக, புதிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் ஓரிரு உரைகளை மையமாகக் கொண்டு, இன்னுமின்னும் இனத்துவேச, பிரிவுகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு செல்வதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம், யாரும் நன்மையடையப் போவதில்லை. இவ்வாறான பேச்சுக்களால் எல்லா சமூகங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளே நன்மையடையப் போகின்றனர்.

பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் உள்ள கட்சிகள் என எல்லோரும் தூரநோக்கோடு, யாப்பு மாற்ற விடயத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான பொறிமுறையொன்றையும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி: 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பதில்: 19ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதில் கட்சி எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பாக நாம் இன்னும் கலந்தாலோசிக்கவில்லை. அதனால் எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கூறுகின்றேன். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். ஆணைக்குழுக்கள் அரசியல் ரீதியாக இயங்குவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மட்டுப்படுத்துவதும் சிறந்த விடயமே.

இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தைப் பார்க்கின்றபோது, இன்று பசில் ராஜபக்ஷவை உள்வாங்கிக் கொள்வதற்கான வழிமுறையாகவே அதனைக் கொண்டுவருவதாகக் கூறுகின்றனர். அதனை அப்படி மாத்திரம் நோக்காது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்பி, நேரடி அரசியலில் பங்களிப்புச் செய்வதற்கான வசதியாக இது அமையும் என்ற கோணத்திலேயே பார்க்கப்பட வேண்டும். பசில் ராஜபக்ஷ என்ற தனிமனிதரை விட, வெளிநாடுகளில் எவ்வளவோ முஸ்லிம், தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இலங்கை சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள், உரிமைகளுக்காக சர்வதேச அளவில் குரல்கொடுத்து வருகின்றனர்.

அவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையின் கீழ் அரசியலில் பங்குகொள்ளலாம். அதில் உள்ள நல்ல பக்கம் என்னவெனில், அவர்களிடம் உள்நாட்டில் உள்ள தமிழ்வாதமோ, சிங்களவாதமோ, முஸ்லிம் என்ற இனவாதமோ காணப்படாது. அவர்கள் வெளிநாடுகளில் பன்மைத்துவ பின்னணியில் வாழ்ந்து வந்தவர்கள். இதனால், இன ரீதியான பாகுபாட்டு அரசியல் நிலைமை தனிந்து போகக்கூடிய நிலையேற்படும். வெளிநாட்டுப் பாராளுமன்றங்களில் இந்நிலையே காணப்படுகின்றது.

கேள்வி: மாகாண சபை முறை ஒழிக்கப்படுவது குறித்தும் பேசப்படுகின்றது. இது முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரை எவ்வாறு பாதிக்கும்?

பதில்: மாகாண சபை முறைமைகளை ஒழிக்கும் விடயங்களில் நாம் உடன்பட மாட்டோம். மாகாண சபைகளை ஒழிப்பதென்றால், வடகிழக்குக்கு வெளியேயுள்ள மாகாண சபைகள் குறித்து அந்தந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தற்காலிக தீர்வாகவே வட- கிழக்கு இணைப்பு என்பது இந்தியாவின் தலையீட்டோடு வந்தது.
வட- கிழக்குக்கு வெளியே உள்ள பெரும்பான்மை சமூகம் மாகாண சபை முறைமை வேண்டாம் என்று சொல்வதற்காக, வட- கிழக்குப் பகுதியில் உள்ள மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்படக் கூடாது. அது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கின்ற செயலாகத்தான் அமையும். தமக்கு மாகாண சபை முறைமை வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்த மக்களுக்குரியதே.

ஏனெனின், வட- கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு, உடனடியாக சில முன்னெடுப்புகளை மேற்கொள்ளாவிட்டால், இந்தப் பிளவைப் பயன்படுத்தி, பெரும்பான்மைச் சமூகம் தமது காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு செல்லும் சூழ்நிலையே இப்போது உருவாகியுள்ளது. எனவே, வட- கிழக்கில் உள்ள இரண்டு சமூகங்களும் நிதானமாகவும், சிந்தித்தும் செயற்பட வேண்டியதொரு கட்டமாகும்.

கேள்வி: மாகாண சபைத் தேர்தலிலும் முஸ்லிம் தரப்பினர் பிளவுபட்டு களமிறங்குவதால், வாக்குகள் சிதறக்கூடிய அவதானம் காணப்படுகின்றதல்லவா? 

பதில்: இது மிக முக்கியமான கேள்வியாகும். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், மாகாண மட்டத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரே சின்னத்தில் போட்டியிட முடியுமாயின், கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் வெற்றியீட்டலாம். பிரிந்து அல்லது பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றிணைந்து போட்டியிட்டால், பெருந்தேசிய கட்சிகளுக்கு எமது மாகாணத் தேர்தலைக் காவுகொடுத்ததாகத்தான் போய்விடும்.

அவ்வாறானதொரு நிலைமையை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து போட்டியிடும் ஒரு நிலைமை வரவேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் கவனமெடுக்க வேண்டும். மாகாண மட்டத்திலும் பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்களாக மாறுவதில் எவ்விதப் பயனும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை முஸ்லிம், தமிழ் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்து கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். இதன் மூலமே எமது சுயநிர்ணய உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். முஸ்லிம்- தமிழ்த் தரப்புகளைப் பிரித்தாள பெரும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அவ்விடயங்களில் இரு சமூகத்தினரும் மாட்டிக்கொள்ளக் கூடாது.

படம்: இணையம்

Previous article‘20க்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதில்லை’- விஜித ஹேரத்
Next articleபிரேமலால் ஜயசேகரவுக்குப் பாராளுமன்றம் செல்ல அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here