காதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப்

( தர்ஷிகா)
இலங்கையில் காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்குவதற்கு பரிந்துரைக்குமாறு ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிடம் மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர், கோரிக்கை முன்வைத்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி கண்டி மாவட்ட செயலகத்தில் பொதுமக்களின் ஆலோசனையை பெறுவதற்கான கூட்டத்தை நடாத்திய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நேரில் பார்த்தே இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் தனது 40 வருடகால நீதித்துறை சேவையில் அவதானித்த துரதிஷ்டமான சம்பவங்களை நினைவு கூர்ந்து இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் சுபைர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் பலதார திருமணம், ஒரு மதத்தின் பல்வேறு பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை ஸ்தாபிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காதி நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் தொழிலில் முறை வழக்கறிஞர் அல்லாத ஒரு காதியால் நடத்தப்படுகின்றது. ஒரு காதி சட்ட ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமற்ற ஆவணங்களை சரியாக அடையாளம் காண முடியாத சில சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, உரிய கவனத்துடனும், நடுநிலையோடும் சரியான தீர்ப்பு வழங்கப்படாத சந்தர்ப்பங்களும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளன..
இந்த நீதிமன்ற முறையை ரத்து செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் பெற்றோருக்கு பராமரிப்பு வழக்குகளில் நீதி கிடைக்கும் என்று சுபைர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குர்ஆன் மதத்தை பிரிவுகளாகப் பிரிக்கக் கூடாது என்று கூறுவதாகக் தெரிவித்துள்ள சுபைர், இதுபோன்ற வாய்ப்புகளை அனுமதிப்பது பல்வேறு தீவிரவாத அமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இவரது இந்த கருத்து தொடர்பில் அரசியல் ஆய்வாளர் கலாநிதி ரவூப் செய்ன் மீடியா எல்கேவுக்கு கருத்து வெளியிட்டார்.
‘காதி நீதிமன்றங்கள் பிரித்தானியா காலத்தில் இருந்து இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றன. பல தாசாப்த காலமாக உள்ள இந்த காதி நீதிமன்ற முறைமைகள் தொடர்பில் சட்டத்திட்டங்களில் கூறப்படவில்லை. ஆனால் நியமனங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளன.
எனினும் இந்த நீதிமன்றங்களினூடாக பதிவாகும் ஊழல், மோசடிகள் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளன.
அதேநேரம் பெரும்பான்மையாக சமூகத்தில் இருக்கின்ற கருத்து என்னவெனில் ஊழல் போன்ற விடயங்கள் நடந்தால் அதனை விசாரித்து அதற்கேற்ற பரிகாரங்களை காண வேண்டுமே ஒழிய முஸ்லிம் சமூகத்திற்கு நீண்ட காலமாக இருக்கின்ற இந்த நீதிமன்ற முறைமையை முற்றாக நீக்குவதென்பது எமது மனித உரிமைகளுக்கும் மத அடையாளங்களிலும் அடிப்படை சுதந்திரத்தை மீறுகின்ற விடயமாகும் என்பதே.
எனவே இந்த காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு காரணமாக சில விடயங்கள் முன் வைக்கப்ப்ட்டாலும், காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு நான் உடன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் மௌலவி கூறுகையில்,
காதி நீதிமன்றங்களின் சில சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு பரவலான விடயமாகும்.
நீதிபதியாக நியமிக்கப்படக் கூடிய காதிகள் தகுதியாக இருக்க வேண்டும் என்பதுடன் கல்வித் தகுதியுடையவர்கள் அனுபவசாலியாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இருக்கின்ற காதி நீதிமன்றங்களில் தகைமைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சமூக செல்வாக்கு இருந்தாலோ அரசியல் செல்வாக்கு இருந்தாலோ நியமனங்களை மேற்கொள்கின்றார்கள்.
அதற்கமைய இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால் காதி நீதிமன்ற முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியம்.
அதேபோல காதிமார்களாக பெண்களை நியமிக்க வேண்டும் என்ற விடயமும் இதில் உள்ளடங்குகிறது. ஒரு சிலர் இதற்கு எதிராக இருந்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பெண்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
அதேபோல காதி நீதிமன்றங்களினூடாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறுவது மிக மோசமான விடயம் என்பதுடன் அப்பட்டமான ஒரு பொய்யாகும்.
காதிநீதிமன்றங்களால் அநீதி இழைக்கப்படுவதில்லை, ஆனால் தகைமை இல்லாத காதிகளின் காரணமாக அநியாயங்களும் முறைகேடனா விடயங்களும் நடக்கின்றன.
அதற்கு காதிகள் செய்யும் தவறுக்கு காதி நீதிமன்றங்களை குறைக் கூறுவது முறையல்ல, அவர்களினூடாக இலஞ்சம், பெற்றும் பிழையான தீர்ப்பு கொடுத்திருப்பது உண்மையே அதனால் அனைவரையும் குறை கூற முடியாது.
காதிநீதிமன்றங்களை இல்லாமலாக்குவதென்பது அநியாயமாகும். அப்படி காதி நீதிமன்றங்களை இல்லாமலாக்கினால் இதைவிட சிறப்பான நீதிமன்ற முறைமையை உருவாக்க வேண்டும்.
இந்த நீதிமன்றங்களினூடாக குறுகிய காலத்தில் விவகாரத்து சம்பந்தமான பிரச்சினைகளை சாதாரணமாக 3, அல்லது 5 மாத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் பொதுவாக இருக்கின்ற ஏனைய நீதிமன்றங்களினூடாக இவை சாத்தியமாகாது.
குறிப்பாக பெண்கள் ஏனைய நீதிமன்றங்களினூடாக விரைவில் ஒரு விவகாரத்து பிரச்சினைக்கு ஒரு, இரண்டு வருட காலத்திற்குள் தீர்வு காணமுடியாது.
அதுபோல முஸ்லிம் பெண்களுக்கு சிங்களம் பேச தெரியாது அப்படியிருக்கையில் அந்த நீதிமன்றங்களில் மிகவும் கஷ்டங்களுக்குள்ளாவதுடன் இந்த பெண்கள் வேறு திருமணம் செய்துகொள்வதிலும் வாய்ப்பு இருக்காது.
ஆகவே காதி நீதிமன்றகளை இல்லாதொழித்தால் அதை விட சிறந்ததொரு நீதிமன்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
காதி நீதிமன்றங்கள் நிறைய நன்மைகளே உள்ளன. பெண்களுக்கான உரிமைகளை தாராளமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் காதி நீதிமன்றத்தில் உள்ளன.
ஞானசார தேரரோ அல்லது அவரது செயலணியிடம் முஸ்லிம் ஒருவரால் முன்வைக்கப்படும் காதி நீதிமன்றங்களை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை எம்மால் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
ஏனென்றால் அவ்வாறான முஸ்லிம்களுக்கு இவ்வாறான உண்மைகள், சட்டங்கள் பற்றி தெரியாது. அதுமட்டுமல்லாது அவர்களுக்கு பின்னால் ஏதாவது தூண்டுதல் இருக்கலாம். அல்லது அநீதி நடந்திருக்கும் என்றே கூறலாம்.
எனவே மனித உரிமைகளின் பெயராலோ அல்லது நாகரிகம் என்ற பெயராலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்த காதி நீதிமன்ற சட்டங்களை இல்லாமலாக்கினால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் இந்த மேல்நாட்டு கலாசாரத்தை இலகுவாக கொண்டுவரலாம் எனவும் முஜீப் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பிரதான தொனிப் பொருளாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியான ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக் கருவை நடை முறைபப்டுத்தும் முகமாக ஜனாதிபதி செயலணி கடந்த ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரை உள்ளடக்கியதாக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வெளியிட்டுள்ள அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி திகதியிடப்பட்ட 2251/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த செயலணி நியமிக்கப்பட்டது.
செயலணியின் தலைமை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள அதே நேரம் செயலணியின் செயலராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் கீழ் இந்த செயலணி உருவாக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous article‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின் முழு விபரம்
Next articleஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here