‘ஒரே நாடு ஒரே சட்டம்’: மனித உரிமைகள் விடயத்திற்கு எதிரானதாகும்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த ஜனாதிபதி செயலணி குறித்தும் அதன் சட்ட திட்டங்கள் தொடர்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டத்துறை பொறுப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் அவர்களிடம் வினவியபோது,
கேள்வி: தற்போது நியமிக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணி எந்த சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது?
பதில்:   ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற இந்த ஜனாதிபதி செயலணியானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற சட்டப்பூர்வ அதிகாரத்தின் கீழ் அதாவது அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரிமையின் பிரகாரம் இந்த செயலணியை நியமித்துள்ளார்.
இதில் 13 உறுப்பினர்களை உள்ளடக்கி நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த செயலணியின் ஊடாக ஜனாதிபதி இரண்டு விடயங்களை எதிர்ப்பார்க்கின்றார்.
அதாவது முதலாவதாக ஒரு ஆணைக்குழு அல்லது செயலணியை நியமித்ததன் ஊடாக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை என்ன என்பதை அடையாளம் கண்டு அதனை ஆவணப்படுத்தி அதற்கான ஒரு சட்ட வரைபை கையளிப்பதைத்தான் ஜனாதிபதி எதிர்ப்பார்க்கும் முதலாவது விடயமாகும்.
இரண்டாவது குறித்த சட்டவரைபுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் என்ன என்பதை இரண்டாவது கட்டமாக எதிர்ப்பார்க்கப்படும் விடயங்களாகும்.
அதன் பிரகாரம் இந்தக்குழு இதுவரை நீதி அமைச்சால் மேற்கொண்டிருக்கின்ற சட்ட சீர்த்திருத்தங்கள் அதாவது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தில் இருக்கின்ற சட்டங்களில் அவர்கள் செய்திருக்கின்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக கண்காணித்து அதிலுள்ள நிறைகள், குறைபாடுகளை அமைச்சுக்கு சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவது தான் இந்த வர்த்தமானி பத்திரத்தின் ஊடாக இந்த செயலணிக்கு வழிகாட்டப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
கேள்வி: இந்த செயலணியின் ஊடாக செயற்படுத்தப்படும் நடைமுறைகள், வேலைத்திட்டங்கள் என்ன?
பதில்:  வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பார்த்தோமானால் இரண்டு விடயங்கள் தொடர்பாக இந்த செயலணிக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
ஒன்று இலங்கைக்குள் இருக்கின்ற சட்டங்களை அதாவது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்திற்கு முரணாக இருக்கின்ற விடயங்களை அடையாளம் கண்டு அவற்றை சீர்திருத்தம் செய்வதற்காக ஒரு வரைவை ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும்.
இரண்டாவது நீதி அமைச்சு ஏற்கனவே ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான விடயத்தில் செயற்படுத்தியுள்ள விடயங்கள் அதேபோல சட்ட வரைவுகள் சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பாக அதன் தோதான தன்மை பற்றியும் ஏற்புடைமை பற்றியும் ஆராய்ந்து அது சம்பந்தமாகவும் ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும்.
அதேபோல ஒரேநாடு ஓரே சட்டம் என்ற விடயத்தில் நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய விடயங்களை ஜனாதிபதிக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட காலத்திற்குள் கையளிப்பதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி இவர்களுக்கு ஆணை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தேரர் இந்த செயலணிக்கு தலைவராக்க முடியுமா? சட்டத்தில் இடமுள்ளதா?
பதில்: உண்மையில் இந்த மாதிரியான ஜனாதிபதி செயலணிகளுக்கு தகைமைகள் என்ன? என்பது தொடர்பில் எந்தவொரு சட்டத்திலும் உள்ளடக்கப்படவில்லை.
அதாவது ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனைக்குட்படுத்தப்பட்ட ஒருவர் கடந்த காலங்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பொதுமன்னிப்பில் விடுதலைப்பெற்ற ஒருவர் இந்த மாதிரியான செயலணியில் அங்கத்துவம் வகிக்கலாமா அல்லது தலைமைத்துவம் வகிக்கலமா? வகிக்கக்கூடாதென்பதற்கும் அவர்களுக்கு தகைமை இழப்பு செய்வதற்கு எந்தவொரு சட்டத்திலும் ஏற்பாடுகள் இல்லை.
ஆகவே என்னைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி இவ்வாறான செயலணிக்கு தலைவர் ஒருவரை நியமித்தமையானது, சட்டப்பூர்வ தன்மை கேள்விக்குட்பவதை விட இதில் ஒரு தரர்மீக பொறுப்பை மீறியிருப்பதாகவே பரவலாக உள்ளது.
கேள்வி: இந்த செயலணியில் பெண்கள்  உள்ளீர்க்காதது தொடர்பான கருத்து என்ன?
பதில்: ஆம் கண்டிப்பாக இவ்வாறான தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் செயலணிகளில் சகலரையும் உள்வாங்குகின்ற பால்நிலை சமத்துவம் பேணுகின்ற அதேபோன்று வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற புத்திஜீவிகள் உள்வாங்கப்படுவது மிகவும் தேவையான ஒரு விடயமாகும்.
இதில் பெண்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை என்பதோடு தமிழ், கிறிஸ்வர்கள் எவரையும் நியமிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
கேள்வி: இந்த ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் சிறுபான்மையினருக்கான சாதக பாதக விடயங்கள் ஏதும் உள்ளனவா?
பதில்: வெளிப்படையான கூறவேண்டுமானால் குறிப்பாக தேர்தல் காலங்களில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதில் முக்கியமாக முஸ்லிம் தனியார் சட்டம் அதாவது இந்த நாட்டில் சமூகம் சார்ந்த மிக முக்கியமான விடயம் தான் முஸ்லிம் தனியார் சட்டம்.
இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முஸ்தீபுகளில் ஒன்றுதான் இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’  உண்மையில் ஒரே நாடு ஒரே சட்டம் எதுவாக இருக்க வேண்டும் என்றால், இருக்கின்ற புதிய சட்டங்களை பொதுவாகவும் சமத்துவமாகவும் நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பலம் வாய்ந்தவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்தாமலிருப்பது பலமற்ற ஒருவருக்கு சட்டத்தை செயற்படுத்துவது அதிகாரமற்ற ஒருவருக்கு சட்டத்தை செயற்படுத்துவது அரசாங்கத்தில் மிக நெருக்கமான ஒருவருக்கு சட்டம் செயற்படாமலிருப்பது சாதாரண மக்களுக்கு மட்டும் சட்டம் செயற்படுவது போன்ற விடயங்களுக்குத்தான் நாங்கள் சொல்வது சட்டங்கள் அனைவருக்கும் சமமாக பயன்பெற வேண்டும் என்று.

ஆனால் குறிப்பாக முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இலக்கு வைப்பதற்குத் தான் இந்த ஒரேநாடு ஒரே சட்டம் என்ற அரசியல் கோசம் உருவெடுத்து அது ஒரு தேர்தல் வாக்குறுதியாக வந்து அதனை தற்போது சட்டப்பூர்வமாக்கிக் கொள்வதற்காகத்தான்.

இவ்வாறான செயலணியினூடாக பாராளுமன்றத்திற்கு இருக்கின்ற சட்டவாக்க அதிகாரத்தையும் நீதி அமைச்சருக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் பகுதியளவதிகாரத்தையும் இவ்வாறான சட்டத்தை மீறி நடந்து நீதிமன்றங்களினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட  தண்டனை விதிக்கப்பட்ட, தண்டனை அனுபவித்து விடுதலையான ஒருவரை சட்டத்தை கையிலெடுத்து அராஜகம் மற்றும் சட்டமீறல்கள் புரிகின்ற ஜனாதிபதி விசேட ஆனைக்குழுவின் ஊடாக இவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பரிந்துரைப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று ஞானசார தேரர் அவர்கள் அளுத்கமை சம்பவத்திற்கு மிகவும் நேரடியாக தொடர்புபட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி ஆனைக்குழுவில் இறுதி அறிக்கையில் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஈஸ்டர்  தாக்குதலுக்கும் அவர் ஒரு உந்து சக்தியாகவும் முக்கிய காரணியாகவும் இருந்திருக்கின்றார் என விசாரணையின் போதும் அறிக்கையிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையிலும் இவருக்கு எதிராகவும் இவரது பொதுபலசேனா அமைப்பபையும் தடை செய்யவேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட ஒருவரைத் தான் ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் நியமனம் செய்துள்ளார். அது உண்மையில் அரசியல் துஷ்பிரயோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக முஸ்லிம்களின் மீது இனவாத மதவாத கருத்துக்களை கூறுவதோடும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சிப்பவராகவும்  தீவிரவாத போக்குக்கு இட்டும் செல்லும் ஒருவராகவுமே காணப்படுகிறார்.
அவ்வாறான ஒருவரை தேசிய பொதுப்படையான பொதுவிடயத்திற்கு தiலைமைப் பொறுப்பை வழங்கி ஆலோசனைக்குட்படுத்தி நியாயமானதும் சுதந்திரதுமானதுமான ஒரு நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்தும் விடயத்தை பக்கச்சார்பானதாகவே உள்ளது.
அதுட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதே இந்த விடயம். ஆகவே இவ்வாறான நியமனத்தின் ஊடாக அங்கீகாரம் பெறக்கூடிய அல்லது அங்கீகரிக்கப்பட்ட தார்மீகமான ஒரு அறிக்கையை அல்லது சுயாதீனமாக பார்க்கின்ற ஒரு அறிக்கையை நாம் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி: இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைப்பது தீர்வாகுமா?
பதில்: இவ்வாறான தேசிய மட்ட கொள்கை சம்பந்தப்பட்ட ஜனாதிபதி செயலணியை நியமிக்கும் போது, ஏற்கனவே குறிப்பிட்டது போல சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுக்கின்ற விடயம். சமன் நிலைப்படுத்தப்பட்ட சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு பிரதிபலிப்பு தெரிகின்ற ஒரு நியமனமாக இடம்பெற்றிருக்க வேண்டும் .
இது மிகப்பெரிய குறை தமிழ் மக்கள் யாரும் நியமிக்கப்படாததை ஏற்றுக்கொள்ளமுடியாது, குறித்த ஜனாதிபதி செயலணியானது திருத்தப்பட வேண்டும்.  ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டிருந்த செந்தில் தொண்டமான் ஆகியோர் தமிழ் பிரதிநிதிகள் அந்தச் செயலணியில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
கேள்வி: இந்த செயலணி தொடர்பான உங்கள் யோசனைகள் அல்லது கருத்து என்ன?
பதில்: இந்த செயலணி ஒரு அவசியமற்ற விடயம். ஏற்கனவே சட்டமறுசீரமைப்பு தொடர்பாக பாராளுமன்றில்,  அமைச்சரவையில் உபகுழுக்கள் இருக்கின்றது. அந்தந்த அமைச்சுக்களினூடாக அமைச்சு செயலணி உள்ளது.
பாராளுமன்றத்தில் சட்டவரைபுக்குழுக்கள் இருக்கின்றது. சட்ட ஆணைக்குழு இருக்கின்றது. இவற்றுக்கு மேலாக ஜனாதிபதி இவ்வாறான செயலணி நியமிக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக இவ்வாறாக நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்களை நியமிப்பது பிழையான செய்தியை மக்களுக்கு வழங்குவதாகும்.
இந்த செயலணிக்கூட ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரு இனவாத கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒரு அடிப்படைவாத விடயம் தான் இந்த ஒரேநாடு ஒரேசட்டம் என்ற விடயமாகும்.
சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக கலாசார உரிமைகள், மத ரீதியான உரிமைகள் என்பது அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பிலும் உள்வாங்கப்பட்ட விடயம். அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திலும் அதே போன்று 16 ஆவது உறுப்புரிமையில் இருக்கின்ற விடயமாகும்.
கலாசார உரிமைகள், மொழி உரிமைகள் மக்கள் பின்பற்றக்கூடிய பிரதான உரிமைகளாகும்.
கவே இவற்றை மாற்றியமைத்து சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்களது மத ரீதியான அடையாளங்களையும் அதேபோல அவர்களது முஸ்லிம் தனியார் சட்டங்களில் இருக்கும் விடயங்களை மாற்றியமைத்து அதனை பொதுச் சட்டத்தின் கீழ் வருவதற்காகத்தான் இவ்வாறான விடயத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தங்களது அரசியல் தேர்தல் காலங்களில் மதவாதிகளுக்கு இனவாதிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். அதனை செயற்படுத்த எத்தணிப்பதன் மூலம் உண்மையாக அவர்கள் அடைய நினைப்பது அரசியலில் மதவாதத்தை பயன்படுத்தி எதிர்கால தேர்தல்கள் வெற்றியடையும் நோக்கமாகும்.
எனினும் சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதோடு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கின்ற கீர்த்தியும் இவவாறான விடயங்களினூடாக இல்லாமல் போகக்கூடிய நிலைமை ஏற்படும்.
நியமனம் சட்டப்பூர்வமாக இருந்தாலும் நியமிக்கப்பட்ட விடயங்கள் முழுக்க முழுக்க மனித உரிமைகள் விடயத்திற்கு எதிரானதாகும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
எவ்வாறாயினும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்று செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் உறுப்பினர்களின் நியமனத்தில் சிக்கல் இருப்பதாகவும் குறித்த நியமனங்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எந்தவொரு மதம் அல்லது இனக் குழுவைத் சேர்ந்திருந்தாலும் தேசத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஞானசார தேரர் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(செ.தர்ஷிகா)
Previous articleகரன்னாகொடவுக்கு எதிரான குற்ற பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெறக் காரணமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் இரகசிய அறிக்கை
Next article‘ஒரே நாடு ஒரே சட்டம்’; பௌத்தமயமாக்கலுக்கு வழிசெய்யும்: ஞானசார தேரரின் கருத்துக்கு அருட்தந்தை சக்திவேல் பதிலடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here