எதிர்பாராத தீர்மானங்களினால் மின் வலு துறை பாதிப்பு. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆபத்தில்

அநாவசிய மற்றும் மின்சார சட்டத்தை மீறும் வகையில் இடம்பெறும் அவசரகால மற்றும் நீண்டகாலம் அல்லாத மின்சார கொள்வனவுகளுக்காக ஒப்புதல் வழங்காத காரணத்தினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 571 மில்லியன் ரூபாய்களை மக்களுக்கு சேமித்து கொடுத்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்போர் யார்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். இந்த அமைப்பானது இலங்கையின் மின்சாரத் துறையின் பொருளாதார, பாதுகாப்பு, மற்றும் தொழிநுட்ப அம்சங்களை ஒழுங்குறுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தால் 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொழிற்பாடு ஏன் அவசியம்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தனது மக்கள் சார்பாக பாரிய பங்கினை ஆற்றி வருகிறது. இது நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதுடன், பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் சேவை தரங்களைப் பற்றி பேசுகிறது. விஷேடமாக மின்சார நுகர்வோரின் புகார்களைக் கையாண்டு வருவதுடன் ஊழல் நிறைந்த, மின்சார சட்டத்தை மீறிய மின் வலு திட்டங்களையும் நிராகரிக்கிறது. இதனூடாக வருடந்தோறும் பெருமளவான பொதுப் பணத்தை சேமிப்பதற்கும் ஆதரவை வழங்குகிறது. மின்சாரத்துறையின் பாதுகாப்புக்காகவும் மின்சார நுகர்வோரது பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களையும் இந்த ஆணைக்குழு செயல்படுத்தி வருகின்றது.

ஆணைக்குழுவை மூடுவதற்கான நகர்வுகள்

ஜனாதிபதி செயளாலர் பி.பி.ஜெயசுந்தர அவர்களினால் டிசம்பர் 1ஆந் திகதி,  நிதியமைச்சின் செயளாலர் எஸ்.ஆர்.அட்டிகல்ல விற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதே போன்ற மற்றுமொரு பாராளுமன்ற சட்டத்தினாலேயே இல்லாமலாக்க முடியும் என்பது தெளிவான விடயமாகும்.
ஜனாதிபதி செயலரின் மேற்படி கடிதத்தைத் தொடர்ந்து ஆணைக்குழு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் சமூகமயமானதுடன் ஆணைக்குழுவை பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் பலரும் ஈடுபடத் தொடங்கினர். ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களினதும் திடீர் பதவி விலகலானது இதன் பிண்ணனியில் யாரோ செயற்படுகிறார்கள் என்ற ஐயத்தையும் தற்போது ஏற்படுத்தி இருக்கின்றது.
இலங்கை மின்சார சபையானது மின்வலுப் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பங்களில், 2013ம் ஆண்டு 31ம் இலக்க, இலங்கை மின்சார திருத்தச் சட்டம் பிரிவு 43ன் கீழ்  மேலதிக மின்சாரத்தைப் பெறுவதற்கான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும். குறித்த முன்மொழிவுகள் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மின் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திட்டங்கள் மற்றும் மின்சார கொள்முதல் கோரிக்கையை அங்ககரித்தல்  போன்ற செயற்பாடுகளை ஆணைக்குழு மேற்கொள்ளும்.

அவசரகால மின்சார கொள்முதலுக்கான முயற்சி இடம்பெறுகிறதா?

2016-2020 வரையான காலப்பகுதியில் அவசரகால மற்றும் நீண்டகாலம் அல்லாத மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதல் கோரி 16 முன்மொழிவுகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. ஆனால் அவசர மின்சார கொள்வனவிற்கான தேவையின்மை மற்றும் இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவை மீறி முன்வைக்கப்பட்டிருந்தமை போன்ற காரணங்களினால் அவற்றில் 14 முன்மொழிவுகளுக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனூடாக 571 மில்லியன் ரூபாய் பொதுப்பணமும் சேமிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இலங்கை மின்சார சபை  அவசரகால மின்சார கொள்வனவிற்காக ஒப்புதல் கோரியுதுடன், அது நிராகரிக்கப்படுமாயின் பாரியளவில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனைக் கருத்திற்கொண்டு  துருக்கிய கப்பல் மின்நிலைய ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இந்த மேலதிக மின்சார கொள்வனவிற்கான நியாயம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் இலங்கை மின்சார சட்டத்தை மீறியது என்றும் குறித்த முன்மொழிவு  ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் இத்தீர்மானம் சரியானது என அந்த ஆண்டு முதல் இதுவரை எவ்வித மின்வெட்டும் இடம்பெறாததன் மூலம் தெளிவாகிறது.
கீழ்வரும் நிகழ்வுகள் நவம்பர் மாதத்தின் ஆரம்பித்திலிருந்து  இடம்பெறத் தொடங்கியவையாகும்
கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை மின்சார சபையானது அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது. அதன் நோக்கம், திட்டமிடப்பட்ட பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படும் வரை 2021-2023 வரையான காலப்பகுதியிற்கு அவசியமான மேலதிக மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதாகும்.  (1)
பரிந்துரைகளுக்கான பகுதியில் இலக்கம் 2ல் கீழ்வரும் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஏப்ரில் மாதத்திற்கு அப்பால் 2023 டிசம்பர் வரை ஒப்பந்த காலப்பகுதியை நீடிப்பதற்கு மொத்தமாக 170 மெகாவாட் திறன் கொண்ட உலை எண்ணையில் எரியும் சுயாதீன மின்சக்தி உற்பத்தியாளர்களுடன் ( ஏஸ் பவர் எம்பிலிபிட்டிய, ஏஸ் பவர் மாத்தறை மற்றும் ஆசியா பவர் ) பேச்சு வார்த்தைகளை நடாத்துதல். அதேநேரம் பொருத்தமான வணிக செயற்பாட்டு முறையை குறித்த பேச்சு வார்த்தையின் போது தீர்மானித்தல். உதாரணமாக, (அ) அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அல்லது சிலவற்றை இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமாக்கி அவற்றை இயக்குதல் (ஆ) உரிமத்தைப் பெற்றுக் கொண்டு தற்போதைய இயக்குனரின் கீழ் தொடர்ந்து இயக்குதல் (இ) உலை எண்ணையில் எரியும் சுயாதீன 3 மின்சக்தி உற்பத்தி நிலையங்களையும் சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களின் கீழ் தொடர்ந்து கொண்டு செல்லல்.  (2)
மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும யினால் கடந்த ஒக்டோபர் மாதம் 19ம் திகதி, தற்போதைய மின்னுற்பத்தித் திட்டங்களும் மற்றும் ஏற்படக்க கூடிய  குறைபாடுகளை தணிப்பதற்கு முன் மொழியப்பட்ட நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போதைய பாரிய மின்னுற்பத்தி நிலையங்களை நடைமுறைப்படுத்தும் வரை,நாட்டில் ஏற்படக்கூடிய மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நன்கு ஒருங்கிணைந்த, வினைத்திறனான மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தித் திறன் வாய்ந்த மின் வழங்கல் முறைமையொன்றை திட்டமிடல் வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  (3)
இலங்கை மின்சார சபை கொள்திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நிறுத்தல் இடைவெளி ஏற்பாடாக நடுத்தர மற்றும் குறுகிய கால முன்னேற்பாடாக  2021 ஏப்ரில் மாதத்திற்கு அப்பால் 2023 டிசம்பர் வரை ஒப்பந்த காலப்பகுதியை நீடிப்பதற்கு உலை எண்ணையில் எரியும் சுயாதீன மின்சக்தி உற்பத்தியாளர்களுடன் ( ஏஸ் பவர் எம்பிலிபிட்டிய, ஏஸ் பவர் மாத்தறை மற்றும் ஆசியா பவர் ) பேச்சு வார்த்தைகளை நடாத்துதல் என்ற முன்மொழிவும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. (4)
இதற்கிடையில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட கம்பனியான எம்/எஸ் நிவ் போட்ரஸ் எனர்ஜி உடன் ஜெனரல் எலக்ட்ரிக் உம் இணைந்து இந்த அவசர தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு திரவ இயற்கை எரிவாயு தீர்வொன்றை இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கா தூதுவரான எலினா தெல்பிஸ்  மின்வலு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த திட்டத்தின் மதிப்பீடுகள் இன்னும் நிறைவடையாத நிலையில் தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுச் சூழலுக்கு சாத்தியமானது என்ற அடிப்படையிலும் குறித்த முன்மொழிவிற்கு நிதி அமைச்சினால் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.  (5)
மேற்குறிப்பிடப்பட்ட முதலாவது முன்மொழிவிற்கு பரிந்துரையாக, 2023 வரை மூன்று உலை எண்ணையில் எரியும் சுயாதீன மின்சக்தி உற்பத்தியாளர்களின் ( ஏஸ் பவர் எம்பிலிபிட்டிய, ஏஸ் பவர் மாத்தறை மற்றும் ஆசியா பவர்) மின் நிலையங்களின் மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கைகளின் ஒப்பந்த காலப்பகுதியை நீடிப்பதற்கு முதலில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கும், பின்னர் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்துதலும் வழங்கப்பட்டுள்ளது.  (6)
இரண்டாவது முன்மொழிவிற்கு பரிந்துரையாக, அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட எம்/எஸ் நிவ் போட்ரஸ் எனர்ஜி மற்றும்  ஜெனரல் எலக்ட்ரிக் கம்பனியைப் பொருத்த வரை, தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளருடன் மின்சக்தியைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையொன்றையும், அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்றையும் மற்றும் ஏனைய தொடர்புடைய உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடுவதற்கும் இலங்கை மின்சார சபைக்கும் மற்றும் திறைசேரி க்கும் அதிகாரம் வழங்குவதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்மொழிவுகளை கணிப்பீடு செய்வதற்கான கருத்திட்டக் குழுவொன்றையும் , மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சு வார்த்தைக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் திறைசேரியின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  (7)
இவற்றைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் 23ம் திகதி நிதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில், உலை எண்ணையில் எரியும் 3 சுயாதீன மின்சக்தி உற்பத்தியாளர்களுடன் உடன்பாடில்லை என்றும் எம்/எஸ் நிவ் போட்ரஸ் எனர்ஜி மற்றும்  ஜெனரல் எலக்ட்ரிக் கம்பனியுடன் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
நவம்பர் 2ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை மாநாட்டில் எம்/எஸ் நிவ் போட்ரஸ் எனர்ஜி மற்றும்  ஜெனரல் எலக்ட்ரிக் கம்பனியின் முன்மொழிவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான தகவல்கள் நவம்பர் 10ம் திகதி அமைச்சரவை செயளாலர் டபிள்யூ.எம்.டி.ஜே.பெர்னான்டோ யினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த முன்மொழிவிற்கான ஒப்புதலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் வழங்கினால் மாத்திரமே அடுத்த கட்ட செயற்பாடுகளை நோக்கி நகர முடியும். இதற்கு முன்னரும் இவ்வாறான அவசரகால மற்றும் நீண்டகாலம் அல்லாத மின்சார கொள்வனவுகளுக்காக ஒப்புதல் கோரி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டாலும் அநாவசிய மற்றும் மின்சார சட்டத்தை மீறும் வகையிலான கொள்வனவு முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றமை  குறிப்பிட்டுக் கூற வேண்டிய அம்சமாகும்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுவதானது மற்றுமொரு அவசரகால மின்சார கொள்முதலுக்கான சதியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
எது எவ்வாறாயினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பவர் மாஃபியாக்களுடன் இணைந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத செயலாளர்களுக்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிவில் சமூக அமைப்புக்களும் கூறி வருகின்றன.
Previous article45 ஆயிரம் மின்னியலாளர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன – இலங்கை மின்னியளாளர்கள் சங்கம் தெரிவிப்பு
Next articleநிலத்தடி நீர் தொடர்பான ஆதாரமற்ற கருத்துக்களை பேராசிரியை தெரிவிப்பு ; உடல்களை புதைக்க கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here