‘பிரஜைகளைப் பலவீனப்படுத்தி, ஜனாதிபதியைப் பலப்படுத்தும் 20’- இம்தியாஸ் பாக்கிர் மாக்கர்

பொது மக்கள் ஆதரவுடனும் அனைத்து தரப்பினரது அங்கீகாரத்துடனும் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம், பிரஜைகளை பலப்படுத்தியதாகவும், தற்போது கொண்டுவரப்படவுள்ள 20ஆம் திருத்தம் பிரஜைகளைப் பலவீனப்படுத்தி, ஜனாதிபதியைப் பலப்படுத்துவதாக அமையுமென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் தெரிவித்தார்.

medialk.com உடன் மேற்கொண்ட விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது முழுமையான நேர்காணலை வாசகர்களுக்காகத் தருகின்றோம்.

கேள்வி: உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வகையில் பயன்படுத்த எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து வாழ்வதிலேயே இந்த நாட்டின் ஒற்றுமையும் சமாதானமும் தங்கியுள்ளது. ஒற்றுமையும் அமைதியும் இருந்தால் மாத்திரமே பொருளாதார ரீதியாக எமக்கு முன்னேக்கிச் செல்ல முடியுமாகும்.

சரியான இலக்கை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு செல்வதற்கு, என்னால் மேற்கொள்ள முடியுமான அனைத்தையும் செய்ய எதிர்பார்க்கின்றேன். நான் 1981ஆம் ஆண்டு முதன்முதலாக அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிடும் போது, ‘அனைவருக்கும் நலன்’ என்ற தொனிப்பொருளையே பயன்படுத்தினேன். அதனை எனது அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்கும் நலன் என்ற நோக்கில் பணியாற்றவே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த உங்களது அவதானம் என்ன? 

பதில்: நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதென்பது குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட முடியுமானதொன்றல்ல. அரசியலமைப்பின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பலப்படுத்தப்படுவதோடு, ஜனநாயக வட்டத்திற்கு வெளியே செல்ல முடியாத விதத்தில் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றது.

19ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்கவே 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படும் போது, அது நாட்டில் பேசுபொருளாக மாறியது. இடதுசாரித் தலைவரொருவரான லால் விஜேநாயக்க தலைமையில் அரசியலமைப்புக்கான கருத்துத் திரட்டும் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்கள் நாடு பூராகவும் சென்று, பொது மக்கள் கருத்துக்களைத் திரட்டினர். அதனடிப்படையில், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்த திருத்தங்களே 19இன் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

20ஆவது திருத்தத்தை வியாழக்கிழமை அமைச்சரவைக்கு முன்வைப்பதாயின், புதன்கிழமை தெரிவுசெய்யப்பட்ட சில அமைச்சர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. அங்குதான் அவர்கள் திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதன்பின்னர், அமைச்சரவையில் முன்வைத்து, 2 அல்லது 3 மணிநேரங்களில் அனுமதியைப் பெற்றுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடி, கொண்டுவரப்பட்ட திருத்தமொன்றா இது? என்ற கேள்வி எழுகின்றது. வெறும் சில மணிநேரங்களில் ஒரு நாட்டின் அரசியலமைப்பை மாற்ற, அங்கீகரிப்பது பயங்கரமான நிலையாகும்.
20இன் மூலம் வரும் மாற்றங்களைப் பார்க்கின்றபோது, அரசியலமைப்பு சபை கலைக்கப்படுகின்றது. அதற்குப் பதிலாக பாராளுமன்ற கவுன்சிலொன்று நியமிக்கப்படுகின்றது. அது பலவீனமான ஒன்றாகும். பாராளுமன்ற கவுன்சிலில் வழங்கப்படும் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லை. அடுத்து, ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு, பிரதமர் பொம்மை போன்றாக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தை ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதியால் கலைத்துவிட முடியும். இது மக்கள் பிரதிநிதிகளின் பலத்தை பலவீனப்படுத்தும் மிகப் பயங்கரமான மாற்றமாகும். பாராளுமன்றம் இறப்பர் முத்திரையொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும் நிலைமை உருவாகக்கூடும்.

அடிப்படை மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதிக்கு எதிராக வழக்கொன்றேனும் தாக்கல் செய்ய முடியாது. கணக்காய்வாளர் நாயகம் பதவி இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் சாதாரண அரச ஊழியரின் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளார். பிணைமுறி போன்ற விடயங்கள் குறித்து கணக்காய்வாளர் நாயகம் நீதியாக நடந்துகொண்டார். சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு ரத்துச் செய்யப்படுவது பயங்கரமான நிலைமையாகும்.

பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற பதவிகளை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே வழங்கப்படுகின்றது.

19இன் ஊடாக கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் 20இன் ஊடாக நீக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். பொலிஸாரின் சுயாதீனத்தன்மை இல்லாமல் சென்று, அரசியல்வாதிகளுக்குத் தேவையான விதத்தில் பொலிஸார் இயங்கும் நிலைமை ஏற்படும். சர்வாதிகார போக்கொன்றுக்கு வழியமைத்தால், உலகம் இலங்கையை எவ்வாறு நோக்கும்? கணக்காய்வு ஆணைக்குழு இல்லாமல் செய்யப்பட்டதும், ஜனாதிபதி, பிரதமர் எவ்வாறு பொது மக்கள் நிதியைச் செலவிடுகின்றனர் என்பதைப் பார்க்க முடியாது செல்கின்றது. மக்கள் நிதி முறைகேடாகப் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

19ஆவது திருத்தம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதும், சரத் வீரசேகர என்ற ஒருவர் மாத்திரமே அதனை எதிர்த்தார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலமான திருத்தமாகவே 19 கொண்டுவரப்பட்டது. அது பிரஜைகளைப் பலப்படுத்தியது. 20 பிரஜைகளைப் பலவீனப்படுத்தி, ஜனாதிபதியைப் பலப்படுத்துகின்றது.

கேள்வி: 20ஆம் திருத்தத்தின் பாரதூரங்களை மக்களுக்கு உணர்த்துவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது? 

பதில்: உண்மையில், இது மக்களுக்குச் சென்றடைய முன்னர் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசியலமைப்பு மாற்றமொன்றைச் செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் 20ஆவது திருத்தத்தை அவசரமாகக் கொண்டுவருகின்றனர்?

அரசியல் கட்சிகள், பல்கலைக்கழுக விரிவுரையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கருத்துக்களுடன் நீண்ட, நிலையான அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்படுவதே நாட்டின் தேவை.
முடியுமானவரை மக்களுக்கு 20ன் பாரதூரங்கள் குறித்து விழிப்பூட்டவுள்ளோம். எதேச்சாதிகார பயணம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்குமென்ற செய்தியையும் நாட்டு மக்களுக்குக் கூறுகின்றோம்.

கேள்வி: கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜனயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமை குறித்து… 

பதில்: சட்ட விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நடைமுறை ரீதியாக இதனைப் பார்ப்போம். என்னிடம் கேள்வி கேட்கும் உங்கள் தாய், தந்தை அல்லது குழந்தையொன்றை யாராவது கொலை செய்தால், கொலை செய்தவரை நீங்கள் பட்டாசு கொழுத்தி, பூ மாலை அணிவித்து வரவேற்று விருந்து பரிமாற முடியுமா?

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்ட ஒருவரைக் கொலை செய்துள்ளதாக, சந்தேகமின்றி நீதிமன்றத்தில் நிரூபனமாகியுள்ளது. இன்று கொலைக் கைதியொருவரை இந்த அரசாங்கமும் சபாநாயகரும் நடத்தும் விதம் தவறானது.

படம்: Ceylon today

 

 

Previous article‘பொதுமக்கள் தினம் திங்களுக்கு மாற்றப்பட்டமை கொழும்பின் நெரிசலை இருமடங்காக்கும்’- பஸ் பயணிகள்
Next article22 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழு நியமனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here