‘பொதுமக்கள் தினம் திங்களுக்கு மாற்றப்பட்டமை கொழும்பின் நெரிசலை இருமடங்காக்கும்’- பஸ் பயணிகள்

பொதுமக்கள் பிரச்சினைகளை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கான ‘பொது மக்கள்’ தினம் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதால் கொழும்பின் வாகன நெரிசல் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் பயணிகள் அதிகமான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

60 வருட காலமாக புதன்கிழமைகளில் நடைபெற்று வந்த ‘பொது மக்கள்’ தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்ற அமைச்சரவை தீர்மானித்ததையடுத்தே, அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் இவ்விடயம் தொடர்பாக தமது அவதானத்தை வெளியிட்டுள்ளது.

புதன்கிழமைகளில் பாராளுமன்றத்துக்கு அமைச்சர்கள் வருகைதரவேண்டிய காரணத்தினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றத் தீர்மானித்துள்ளமை குறித்து அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘கொழும்பு நகரில் சாதாரணமாகவே திங்கட்கிழமைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படும். இம்முடிவானது அதனை இரு மடங்காக அதிகரிக்கும். நெரிசல் காரணமாக கொழும்பு நகரில் பொதுப் போக்குவரத்து பஸ் வண்டிகள் பயணிக்கும் வேகம் ஒரு மணித்தியாலத்திற்கு 12கி.மி வரை குறைவடைந்துள்ளது. இது மேல் மாகாண மொத்த தேசிய உற்பத்தியின் 12 வீதத்தை இழக்கச் செய்துள்ளது. பொதுப் போக்குவரத்துப் பயணிகளை சிரமத்துக்குட்படுத்தும் இந்தத் தீர்மானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here