‘முன்மொழியப்பட்டுள்ள 20ஆம் திருத்தத்தின் மூலம் கருத்து மற்றும் ஊடகச் சுதந்திரம் மீறப்படும் அபாயம்’ -சுதந்திர ஊடக இயக்கம்

செப்டம்பர் 02 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள கட்டற்ற வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை உறுதிப்படுத்தியவாறு கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்டுள்ள 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கருத்து வெளியிடும் உரிமை மற்றும் ஊடக உரிமைக்கு விடுக்கப்படும் பாரிய சவால்கள் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் தனது கடுமையான கவலையைத் தெரிவிக்கின்றது.

19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்த ஜனநாயக அடையாளங்கள் மற்றும் கட்டமைப்புக்களை நீக்கியுள்ள 20 ஆம் திருத்தத்தின்படி கருத்து வெளியிடும் உரிமை மற்றும் ஊடக உரிமைக்கு கடுமையான சவால்கள் ஏற்படக்கூடிய ஒரு பிரதானமான விடயமாக, சுயாதீன ஆணைக்குழுக்கள் இனி சுயாதீனமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமை அமைகின்றது. இவற்றுக்கான உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையினாலேயே நியமிக்கப்பட்டனர். 20 ஆம் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு சபை இரத்துச் செய்யப்பட்டு பாராளுமன்ற சபையொன்று நியமிக்கப்படவுள்ளது.

மேலும், அதில் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதும் இல்லை. ஜனாதிபதியால் ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் அவதானங்களை முன்வைப்பது மாத்திரமே, அரசியல் பிரதிநிதிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள அச்சபைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபை ஆணைக்குழுக்களுக்கு முன்மொழியும் நபர்களை ஜனாதிபதி நியமிக்கும் நடைமுறையே 19 ஆம் திருத்தத்தில் காணப்பட்டது. எவ்வாறாயினும், இனி நியமிக்கப்படுபவர்கள் ஜனாதிபதியின் விருப்பை விரும்புபவர்களேயன்றி சுயாதீன நபர்கள் அல்ல என்பது கருத்து வெளியிடும் மற்றும் ஊடக உரிமைக்கு சவாலாக அமையும். இவர்களை நியமிக்கும் அதிகாரம் போன்றே, அவர்களை நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உண்டு.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசுக்கு நெருக்கமான நபர்களை நியமிப்பதனால், நடாத்தப்படும் தேர்தல்கள் சுயாதீனமான மற்றும் சுதந்திரமான வடிவத்தைப் பெறுமா என்பது சிக்கலுக்குரிய ஒரு விடயமாகும். தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பில் வெளியிடப்படும் ஊடக ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கேற்ப செயல்படுகின்றனவா என்பதைத் தேடிப்பார்க்கும் நடைமுறை சுயாதீனமற்ற ஓர் ஆணைக்குழுவால் இனியும் மேற்கொள்ளப்படுமா என்பதும் சிக்கலுக்குரிய ஒரு விடயமாகும். இதன் மூலம் மக்களின் கருத்து வெளியீடுகள் சுதந்திரமாக அமையுமா, ஊடக செயற்பாடு நியாயமாக அமையுமா என்பதும் சிக்கலக்குரிய விடயங்களாகும்.

தேர்தல் ஆணைக்குழு போன்றே அரச சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்களுக்கும் ஜனாதிபதி விரும்பும் நபர்கள் நியமிக்கப்படுவதனால், அவை இனி சுயாதீனமாக இயங்குமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. அவை சுயாதீனமாக இயங்காவிடின், மக்களின் கருத்து சரியாக வெளியிடப்படாது. ஊடகங்களுக்கும் சுதந்திரமாக இயங்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். பொலிஸ் பிரதானிகள் அரசியல் நியமனங்களைக் கொண்டவர்களாயின், மக்களின் கருத்து வெளியீடு, சுதந்திரமாகக் கூடுதல், போக்குவரத்து போன்ற மனித உரிமைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அறிக்கையிடும்போது ஊடகங்கள் இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்.

19 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை 20 ஆம் திருத்தத்தில் மாற்றப்படாதபோதும், தகவல் ஆணைக்குழுவுக்கு எவ்வாறு நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தெளிவுபடுத்தப்படாதமையும் சிக்கலுக்குரிய ஒரு விடயமாகும். ஏனைய ஆணைக்குழுக்கள் போன்றே ஜனாதிபதியின் முன்மொழிவுகளின்படிதான் இதுவும் இடம்பெறுவதாயின், அதன் செயற்பாடு தொடர்பிலும் சந்தேகங்களை எழுப்ப வேண்டியேற்பட்டுள்ளது. தகவல் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட வெளிப்படுத்தல்கள் மூலம் மக்களுக்கு கிடைத்த வெற்றிகளும் தடைப்படும். 

பிரதம நீதியரசர் பதவி உட்பட நீதிபதிகளை நியமித்தல் மற்றும் நாட்டின் உயர் பதவிகளுக்கான அனைத்து நியமனங்களும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் அரசியல் நியமனங்களாக மாறும்போது, கருத்து வெளியிடும் உரிமை உட்பட மனித உரிமைகளுக்கு மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு பிரச்சினைகள் எழுவது பற்றி சந்தேகங்கள் எழுவது தற்செயலானது அல்ல என்பது தொடர்பில் போதியளவு அனுபவங்கள் உள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் குற்றங்கள் தொடர்பில் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் சிலதும்கூட, இந்நிலையில் குற்றுயிர் ஆகிவிடும் என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.

மக்கள் அறிவூட்டப்படாமல், 24 மணிநேரத்தில் அவசர சட்டங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருப்பது ஜனநாயகத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஆபத்தில் வீழ்த்திவிடும் என்பதை புதிதாக் கூற வேண்டியதில்லை. எனவே, 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்துக்கு, கருத்து வெளியிடும் உரிமைக்கு மற்றும் ஊடக உரிமைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய ஆபத்து தொடர்பில் கவனத்தை செலுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் ஊடக சமூகத்திடம் கோருகின்றது. ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள 20 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடுமையான ஜனநாயக விரோத விடயங்கள் தொடர்பில் மிகவும் விமர்சனநோக்கில் மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு பொறுப்புடைய அனைத்து தரப்புக்களிடமும் வேண்டிக்கொள்கின்றோம். 

Previous article161 நாட்களின் பின்னர் ரம்ஸி ராசிக்கிற்குப் பிணை
Next article‘தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் எமது அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டது’- 10ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் உடரெதல்ல தொழிலாளர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here