நாட்டில் பாதுகாப்பு அமைச்சரொருவர் இல்லை- கலாநிதி நிஹால் ஜயவிக்ரம

தற்போதளவில் இலங்கையில் உத்தியோகப்பூர்வ பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லையென நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளரான கலாநிதி நிஹால் ஜயவிக்ரம தெரிவித்தார்.

நேர்காணலொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே, கலாநிதி நிஹால் ஜயவிக்ரம இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது எவ்வாறு கூறப்பட்டாலும், வர்த்தமானி அறிவித்தலின்படி தற்போது நாட்டில் பாதுகாப்பு அமைச்சரொருவர் இல்லை என்றும் வர்த்தமானி அறிவித்தலே ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நியமிக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் வைத்துக்கொள்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என்ற விடயம் பேசுபொருளானது. நான் அதுகுறித்து தேடிப்பார்த்தேன். நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவியொன்றை வகிக்க முடியாது. 19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார். அரசியலமைப்பு மாற்றமொன்றின் ஊடாகவே ஜனாதிபதி மீண்டும் அந்த அதிகாரத்தைப் பெறலாம்.

சிலர் அரசியலமைப்பின் நான்காவது பிரிவுக்கமைய, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகிக்கலாம் என்கின்றனர். அரசியலமைப்பின் நான்காவது பிரிவில் உள்ள ‘மக்களின்  நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கே உரியது’ என்ற பதத்தை சுட்டிக்காட்டியே அதனைக் குறிப்பிடுகின்றனர். அதிலே பாதுகாப்பு அதிகாரங்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பாதுகாப்பு அதிகாரம் என்பது நாட்டைப் பாதுகாப்பதாகும். யுத்தமொன்று அல்லது வேறு ஒரு நாட்டின் ஆதிக்கத்தின் போதுள்ள நிலைமைகளே இங்கு குறிப்பிடப்படுகின்றன. யுத்தம் அல்லது சமாதானத்தைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியது. அது சரியானதே.

எனினும், அமைச்சுப் பதவியென்பது இதனைவிட மாறுபட்டதாகும். அமைச்சர் பாராளுமன்றம் சென்று, அமரவேண்டும். கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு வேறு விதத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாட்டில் அரசரகால நிலைமைகளைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம். அதற்கு ஜனாதிபதி எவரது ஆலோசனையையும் பெறத் தேவையில்லை. எனினும், அமைச்சுப் பதவியென்பது வேறு வகையான பொறுப்பொன்றாகும். அதன்படி, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவியொன்றை வகிக்க முடியாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here