‘கூட்டமைப்பின் பிளவைத் தடுப்பதற்காக முக்கிய பதவிகளில் மாற்றம்’ என்று வெளியாகியிருந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது

பிளவைத் தடுக்க டெலோ மற்றும் ப்லோட் கட்சிகளுக்கு இரு முக்கிய பதவிகளை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர், பேச்சாளர் மற்றும் முதற்கோலாசான் போன்ற பதவிகளுக்கு அடுத்த கூட்டத்திலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் எந்தப் பதவிகளிலும், எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறித்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தியில், கூட்டமைப்பின் பிளவைத் தடுப்பதற்காக டெலோ கட்சியின் தலைவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இராஜினாமாச் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று, ப்லோட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் த.தே.கூட்டமைப்பின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய தெரிவுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் மேற்படி செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here