நிலத்தடி நீர் தொடர்பான ஆதாரமற்ற கருத்துக்களை பேராசிரியை தெரிவிப்பு ; உடல்களை புதைக்க கூடாது

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே வை MediaLK இன்று (23)  தொடர்பு கொண்ட போது, அண்மையில் டென்மார்க்கில் கொரோனா தொற்றின் காரணமாக கொன்று புதைக்கப்பட்ட 15 மில்லியன் கீரிகள் காரணமாக நிலத்தடி நீரினூடாக வைரஸ் பரவியதா என்று தனக்குத் தெரியாது என்றும் ஆனால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது  என்பது தான் தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதற்கு மாற்றமான கருத்துக்களையே அவர் தெரிவித்திருந்தாக ஊடகங்கள் பலவற்றில் சொல்லப்படடிருந்தன.

அதாவது கொரோனா தொற்றின் காரணமாக  புதைக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் கீரிகளினால்   நிலத்தடி நீர் மாசடைந்து இருப்பதாகவும்,  அந்த கீரிகளின் உடல்களில் இருந்த வைரஸ்கள் நீருடன் கலந்திருப்பதாகவும் டென்மார்க்கில் அமைந்திருக்கும் புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் டென்மார்க் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்திருப்பதாக அந்த செய்திகள் வெளிவந்திருந்தன.

MediaLK: இன்று இடம்பெற்ற சந்திப்பில் கீரிகள் சம்பந்தமாக நீங்கள் கூறிய விடயங்களை , சர்வதேச வளைதளங்களில்  தேடிப் பார்த்தோம், ஆனால் நிலத்தடி  நீரில் வைரஸ் கலந்தது தொடர்பான ஒரு தகவலை எங்களால் காணமுடியவில்லை,அவ்வாறான ஒரு தகவல் இருக்கின்றதா? நிலத்தடி நீருடன் வைரஸ் கலந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றதா??

மெத்திகா விதானகே : நிலத்தடி நீர் மாசடைந்தால் அதில் வைரஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நிலத்தடி நீரை எவ்வாறேனும் நாங்கள் பாதுகாக்க வேண்டும்

MediaLK: உண்மை, அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். எங்கு சரி சொல்லப்பட்டிருந்ததா நிலத்தடி நீரில் வைரஸ் கலந்திருப்பதாக?

மெத்திகா விதானகே: வைரஸ் கலந்துள்ளதா என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது. அதைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய ஆதாரபூர்வமான பகுதிக்குச் சென்று.

MediaLK: நாங்கள் அது தொடர்பாக தேடி  பார்த்தோம் எங்களுக்கு அவ்வாறான ஒரு தகவல் கிடைக்கவில்லை.அதன் காரணமாகவே அது  சொல்லப்பட்ட இணைய பகுதியினை (லின்க்)  உங்களிடம் உள்ளதா என கேட்கிறோம்..

மெத்திகா விதானகே: கொஞ்சம் தேடிப் பார்க்க வேண்டும்

இன்று (23) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையின் உரை பின்வருமாறு.

கொரோனாவினால் மரணித்தவர்களை புதைப்பது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எனது கருத்தை வெளியிட விரும்புகின்றேன்.வைரஸ் உடன் விளையாடுவது சிரமமான விடயமாகும். இந்த கொரோனா வைரஸ் ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையை இப்போது நாம் அடைந்திருக்கின்றோம்.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இறந்தவர்களின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தாமல், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பாதுகாப்பு பற்றியே சிந்திக்க வேண்டும். டென்மார்க்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் சிறந்ததோர் உதாரணமாகும். டென்மார்க் மக்கள் கீரிகளை வளர்ப்பது அவற்றின் உரோமங்களைப் பெற்றுக் கொள்வதற்காகும். கோவிட் 19 பரவலின் காரணமாக15 மில்லியன் கீரிகள் கொன்றொழிக்கப்பட்டது. இதற்கு காரணம் மக்களை வைரஸ் சென்றடைந்து விடக் கூடாது என்பதாகும்.. அதன் பின்னர்  டென்மார்க்கில் அமைந்திருக்கும் புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் டென்மார்க் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சிக் குழுவினரின்  குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இதன் போது பாரியளவிலான வைரஸ்கள் நிலத்தடி நீருடன் கலந்திருப்பதையும், மாசடைந்திருப்பதையும் கண்டுபிடித்த அவர்கள் புதைக்கப்பட்ட அனைத்து உடல்களையும் மீண்டும் தோண்டியெடுத்து பற்ற வைத்தார்கள்.

இப்போது வித்தியாசமான முறையில் எரிப்பதா, புதைப்பதா என்று பேசி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில்  மிகச் சிறந்த உதாரணமாக டென்மார்க் நிகழ்வைக் குறிப்பிட முடியும்.

இந்த வைரஸ் உடைய தெளிவற்ற உருமாற்றமானது பெருகிக் கொண்டே செல்வதனால் இதனூடாக யாருக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.

எனவே இந்த வைரஸை இன்றிருக்கின்ற மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக பயன்படுத்த கூடாது.

Previous articleஎதிர்பாராத தீர்மானங்களினால் மின் வலு துறை பாதிப்பு. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆபத்தில்
Next articleஜனாஸாக்களை தகனம் செய்வது நியாயமில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here