‘சட்டத்தரணி ஹிஜாஸ் இன, மத அடையாளத்தின் அடிப்படையிலேயே குறிவைக்கப்பட்டிருக்கலாம்’- ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, வன்முறை மற்றும் பாகுபாடு போன்றன தொடர்பாக நடைபெற்று வரும் அடிப்படை உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான வழிமுறையாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்த விசேட அறிக்கையார், மனித உரிமைப் பாதுகாவலர்களின் நிலைமை குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர், சமகால இனவெறி, இனப் பாகுபாடு, இனவெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மை குறித்த விசேட அறிக்கையாளர், மத நம்பிக்கைச் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களை மேம்படுத்தலும் பாதுகாத்தலும் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஆகிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு இவ்விடயம் தொடர்பான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸின் சட்டப் பணிகள் மற்றும் மனித உரிமைகளுக்கான பரிந்து பேசும் செயற்பாடுகளுக்கான பழிவாங்கலாக இந்தக் கைது நடவடிக்கை இருக்கலாம் என்றும் அவர் இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மத மற்றும் இன அடையாளத்தின் அடிப்படையில் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது கடிதத்துக்கான பதிலை 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும், உரிமை மீறல்கள் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து இடைக்கால நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு விசேட அறிக்கையாளர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டுக்களின் துல்லியத்தன்மையை நாம் முன்கூட்டியே தீர்மானிக்க விரும்பாவிட்டாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்பை முழுமையாக புரிந்துகொள்கின்றோம். எனினும், ஹிஸ்புல்லாஹ்வை தன்னிச்சையாகக் கைதுசெய்து, நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பது குறித்து எமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றோம். ஏனெனின் இந்தக் கைதானது, இலங்கையின் அரசியலமைப்பு அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் சர்வதேச மனித உரிமைகளுக்கான கடமைகளுடன் ஒத்துப்போவதில்லை.

இதற்கு மேலதிகமாக, இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, வன்முறை மற்றும் பாகுபாடு போன்றன தொடர்பாக நடைபெற்றுவரும் அடிப்படை உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான வழிமுறையாக ஹிஜாஸின் கைது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு, அவரது சட்டப் பணிகள் மற்றும் மனித உரிமைகளுக்கான பரிந்துபேசும் செயற்பாடுகளுக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

ஒரு மனித உரிமைப் பாதுகாவலர் மற்றும் சட்டத்தரணி என்ற வகையில், கருத்துக்களை  வெளிப்படுத்துவதற்கும், பணியைச் சுயாதீனமாகச் செய்வதற்கும் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்கள் இன்றி, உரிமையுள்ள நிலையில், அவரது நியாயமான பணிகளைக் கொண்டு குற்றவாளியாக்குவது தொந்தரவாக உள்ளது.

மேலும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற மற்றும் தெளிவற்ற பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் உண்மையாக தொடர்புபட்டார் அல்லது சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்கான நிரூபணமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும், தற்கொலைத் தாக்குதல் நடத்தியவருக்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லாஹ் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையின உறுப்பினராக இருக்கின்றதால், அவரது மத மற்றும் இன அடையாளத்தின் காரணமாகவே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

 

 

Previous article‘கூட்டமைப்பின் பிளவைத் தடுப்பதற்காக முக்கிய பதவிகளில் மாற்றம்’ என்று வெளியாகியிருந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது
Next articleநிரந்தர நியமனம் வழங்கப்படாத உதவி ஆசிரியர்கள் நுவரெலியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here