அசாத் சாலி விடுவித்து விடுதலை; கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு; முசம்மில், ஜயநந்த, நிமலுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல்

ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும், அவரை விடுவித்து விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (2) தீர்ப்பறிவித்தது.

கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி அமல் ரணராஜா, 15 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பிணை அறிவித்து அசாத் சாலியை இவ்வாறு விடுதலை செய்தார். அசாத் சாலியின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, குற்றவியல் சட்டத்தின் 200 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலேயே பிரதிவாதி அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என முன் வைத்திருந்த வாதங்களுக்கு அமைய, நேற்று (2) தீர்ப்பினை அறிவித்தே நீதிபதி அமல் ரணராஜா அசாத் சாலியை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து, விடுதலை செய்தார். அதனூடாக அசாத் சாலியின் 261 நாள் சிறைவாசம் நிறைவுக்கு வந்தது.

மேல் நீதிமன்ற வழக்கு:

அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் கடந்த ஜூன் 25 அம் திகதி வழக்குத் தொடுத்தார். அதில் அசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

குற்றச்சாட்டுக்கள் :

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 சாட்சியாளர்கள் :

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் பட்டியலிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை :

மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள், கடந்த நவம்பர் 2,9 ,11,19ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதுடன், அசாத் சாலிக்காக மன்றில் அசான் நாணயக்கார, சரித்த குணரத்ன ஆகிய சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் அச்சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.

பிரதிவாதி தரப்பின் கோரிக்கை:

இந் நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணை நிறைவு செய்யப்பட்ட நிலையில், பிரதிவாதி தரப்பின் சாட்சியங்களை ஆராயாமலேயே குற்றவியல் சட்டத்தின் 200 ஆவது அத்தியாயத்தின் கீழ் அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என மன்றில் வாதம் முன் வைக்கப்பட்டது.
அதற்கமைய, தீர்ப்புக்காக இந்த வழக்கு நேற்று (2) வரை ஒத்தி வைக்கப்ப்ட்ட நிலையில், விசாரணைக்கு வந்தது.

சக்கர நாட்காலியில் வந்த அசாத் சாலி :

நேற்று தீர்ப்புக்காக இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான அசாத் சாலி சக்கர நாட்காலியில் மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். விளக்கமறியல் உத்தரவின் கீழ், சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிறை அதிகாரிகள் ஊடாக இவ்வாறு மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டிருந்தார்.

நீதிபதியின் தீர்ப்பு:

இந் நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பானது நேற்று முற்பகல் 10.30 மணிக்கு நீதிபதி அமல் ரணராஜாவால் அறிவிக்கப்பட்டது.

15 பக்கங்கலைக் கொண்ட இவ்வழக்கின் தீர்ப்பில் முக்கிய பகுதிகளை நீதிபதி அமல் ரணராஜா, நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஊடாக திறந்த மன்றில் அறிவித்தார்.

இவ்வழக்கில், இரு தனியார் தொலைக்காட்சிகளின் 52 செக்கன்கள், 1.36 நிமிடங்கள் நீளம் கொண்ட இரு செய்தி காணொளிகள் தொடர்பிலும், பிரதிவாதி கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடாத்திய ஊடக சந்திப்பின் முழுமையான வடிவமும் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்காக சாட்சியாளர்கள் அளித்த சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
செம்மைப்படுத்தப்பட்டு, செய்தி கனதி கொண்டது என தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டிருந்த செய்தி காணொளிகள் ஊடாக தமது உணர்வுகள் தூண்டப்பட்டதாகவும், பகை உணர்வு , இனங்களுக்கு இடையேயான வன்மம் ஆகியவற்றை தூண்ட அது அழைப்புவிடுப்பதாக அமைந்திருந்ததாக சாட்சியாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.

எனினும் முழுமையான ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளியை ஆராயும் போது, கொவிட் 19 நிலைமையின் போது முஸ்லிம்களின் சடலங்களை முதலில் அடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்துவிட்டு, பின்னர் அடக்கம் செய்ய அனுமதியளித்தமையை மையப்படுத்தி பிரதிவாதி தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அதனைவிட, தனது அரசியல் கருத்துக்கு உட்பட்டு, பிரதிவாதி ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கொள்கையை விமர்சித்துள்ளார். அத்துடன் பிரதிவாதி அவரது அரசியல் கொள்கையிலிருந்தவாறே, தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றமை, அரசியலுக்காக அவர்கள் பயன்படுத்தும் உக்திகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இதனைவிட பயங்கரவாதம் அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

அனைவரும் பேதங்களை மறந்து நாட்டின் முன்னேற்றுத்துகாக ஒன்று சேர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

அசாத் சாலி ஏதேனும் ஒன்றினை கூறுவார், அதனை மையப்படுத்தி அவரை சிறையில் அடைக்கலாம் என அரசாங்கம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அதற்கு தான் அச்சப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சஹ்ரானுக்கு எதிராக , கோத்தாபய ராஜபக்ஷ முதல் இருந்த அனைத்து பாதுகாப்பு செயலர்களுக்கும் தான் முறையிட்டதாகவும், ஒரு படி மேலே சென்று ஜம் இய்யதுல் உலமா சபையினரையும் அழைத்து சென்று முறையிட்டதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

நாட்டில் அமுலிலுள்ள தனியார் சட்டங்கள் தொடர்பில் அவர் பேசியுள்ளார். தேச வழமை சட்டம், கண்டியன் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் பேசியுள்ளார்.

அச்சட்டங்கள் குறித்த அவரது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
நாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், முஸ்லிம்களின் சொத்துக்கள் குறித்து சட்டம் அமுலில் உள்ளன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள். அந்த சட்டங்கள் புனித அல் குர் ஆன், ஹதீசை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்டுள்ளன..

இந் நிலையில் அச்சட்டங்களை சுயமாக எவரேனும் திருத்த முற்பட்டால் அவற்றை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், அவற்றை திருத்தம் செய்ய தமது கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தப்படும் விதமகவும் பிரதிவாதி கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதிவாதியின் சிங்கள மொழி கையாள்கை தொடர்பில் அவதானம் செலுத்தும் போது, அவர் அதில் பூரண சிறப்பு தேர்ச்சி உள்ளவராக கருதமுடியாத நிலையில், ‘ ஏனைய சட்டங்களையே’ அவர் நாட்டின் சட்டம் என குறிப்பிட்டுள்ளதாக தோன்றுகிறது.

இந் நிலையில், குறித்த ஊடக சந்திப்பின் ஊடாக மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் கருத்துக்களை பிரதிவாதி வெளியிடவில்லை என புலனாகிறது.

வழக்குத் தொடுநர் தரப்பு, பிரதிவாதி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகத்துக்கு இடமின்று நிரூபிக்க தவறியுள்ளது.

எனவே அந்த சந்தேகத்தின் பிரதிபலனை பிரதிவாதிக்கு அளித்து, அவரை சுமத்தப்பட்டுள்ள 1,2 ( அனைத்து) குற்ற்ச்சாட்டுக்களில் இருந்தும் இந்த நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்கிறது. என தீர்ப்பறிவிக்கப்பட்டது.
நீதி சாகவில்லை : பிரதிவாதியின் சட்டத்தரணி
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அசாத் சாலிக்கக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் விஷேடமாக கருத்துக்களை பதிவு செய்தார்.

இந்த தீர்ப்புக்கு நீதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த தீர்ப்பு ஊடாக நீதி சாகவில்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மக்களுக்கு நீதிமன்றம் மீதான நம்பிக்கை அதிகரிக்க வழியேற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்கள்த்தின் அரச சட்டவாதி வசந்த பெரேராவுக்கும், விசாரணை நடாத்திய சி.ஐ.டி.யின் அதிகாரிகளுக்கும் பக்கச்சார்பின்றி செயற்பட்டமைக்காக நன்றி தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல் :

இந் நிலையில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முசம்மில், ஜயநந்த வெல்லாவல, நிமல் பியதிஸ்ஸ ஆகியோருக்கே இந்த அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

அசாத் சலி நீதிமன்றால் நிரபராதி எனக் கூறி நேற்று ( 2) விடுவிக்கப்பட்ட பின்னர், அசாத் சாலியிக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குர்ரவியல் சட்டத்தின் 17 (2 ) ஆம் அத்தியாயத்துக்கு அமைய முன் வைத்த வாதத்தை அடுத்து இந்த அறிவித்தல் நீதிபதி அமல் ரணராஜாவால் பிறப்பிக்கப்பட்டது.

பொய்யான முறைப்பாட்டை வேண்டுமென்றே முறைப்பாட்டாளர்கள் முன் வைத்து, அதனூடாக அசாத் சாலியை சுமார் 9 மாதங்கள் சிறைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் குறிப்பிட்டார். சட்டம் இயற்றும் உயர் சபையின் அங்கத்தவர்களான இவர்கள் துவேஷமாக நடந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

இவ்வாறு பொய் முறைப்பாடுகளைச் செய்வோருக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும், அதனால் இந்த 9 மாதங்களில் அசாத் சாலிக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக இந்த நீதிமன்றம் இழப்பீட்டு தொகை ஒன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் கோரினர்.

குற்றவியல் சட்டத்தின் 17 ( 2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

இதன்போது நீதிபதி அமல் ரணராஜா, குற்றவியல் சட்டத்தின் 17 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய கூறப்பட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் வாதங்கள் தொடர்பில் ஆட்சேபனை உள்ளதா என சட்ட மா அதிபர் தரப்பிடம் வினவினார். அதற்கு பதிலளித்த சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் முறைப்பாட்டாளர்களிடம் வினவுவது சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே அது தொடர்பில் வினவ, அசாத் சாலி விடுவிக்கப்பட்ட வழக்கின் 1,2,3 ஆம் சட்சியாளர்களாக பெயரிடப்பட்டிருந்த அவருக்கு எதிராக முறைப்பாடளித்த ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முசம்மில், ஜயநந்த வெல்லாவல, நிமல் பியதிஸ்ஸ ஆகியோரை எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி மன்றில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி:

அசாத் சாலி பிரதானமாக இரு விடயங்களை மையப்படுத்தி கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஒன்று கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தியதாகும். மற்றையது மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார சந்தேக நபர்களுக்கு உதவியளித்தமை தொடர்பிலான விவகார விசாரணையாகும்.

இந் நிலையில் அசாத் சாலிக்கு எதிராக கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜரத்னம் இது குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரிகையை முன் வைத்துள்ளார்.

எனினும் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்பதே நீதிமன்றின் முடிவு என கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலகடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

‘ இந்த விடயத்தில் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில், அக்குற்றப் பத்திரிகையுடன் தொடர்புடைய பிரதிவாதியை, கீழ் நிலை நீதிமன்றமான நீதிவான் நீதிமன்றின் ஊடாக விடுவிக்க, எந்த நீதிமன்ற அதிகாரமும் இல்லை.’ என அதன் போது குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மாவனெல்லை புத்தர் சிலை விவகாரத்தில், அசாத் சாலிக்கு எதிராக குற்றம் சுமத்த எந்த ஆதாரங்கலும் இல்லை என சி.ஐ.டி.யே நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.

அத்துடன் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அசாத் சாலி சார்பில் கைது மற்றும், தடுப்புக் காவலை சவாலுக்கு உட்படுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்ப்ட்டது.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸா,( அப்போதைய பணிப்பாளர்) சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குறித்த அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் அம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் தொடர்ச்சியாக சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்த அசாத் சாலி, கடந்த மே 18 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக சி.ஐ.டி.யினரால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டிருந்தார். இதன்போதே அவருக்கு இருதய கோளாறுக்கான சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அசாத் சாலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில், அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் கடந்த மே 21 அறிவித்தது.

அதன்படி இதுவரை, தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையில் சிகிச்சைப் பெற்று வரும் அசத் சாலி, தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலைக்கே மேலதிக சிகிச்சைகளுக்காக அழைத்து செல்லப்பட்டார்.

Previous articleபொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கினார்- பளை பிரதேசவாசிகள்: முகக் கவசம் அணியாததால் தாக்கப்பட்டனர் – பொலிஸ் !
Next article3 ஆவது பிணை முறி மோசாடி : 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து ரவி , அர்ஜுன மகேந்ரன் உட்பட 10 பேர் விடுதலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here