கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு உணவகத்திற்குள் நுழைந்த குழுவினர், உணவகத்திற்குள் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடாத்திய குழுவில் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் (ஓ.ஐ.சி) இருந்ததாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில்குற்றம் சாட்டப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்குதல் நடாத்துவதை ஒத்த சி.சி.டி.வி. காட்சிகள் மீடியா.எல்கே.வுக்கு கிடைத்துள்ளது.
குறித்த சி.சி.டி.வி . காட்சிகள் அடங்கிய வீடியோவில், கடந்த 24ஆம் திகதி இரவு உணவகத்திற்குள் புகுந்த இந்த கும்பல் தடியை ஒத்த பொருளைக் கொண்டு உணவகத்தின் காசாளர் மற்றும் மற்றையவர்களையும் தாக்குகின்றமை பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் மீடியா.எல்கே வினவியது,
முகக் கவசங்கள் அணியாமையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு இதுவரை எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், முகக் கவசத்துடன் உணவகத்தில் சாப்பிட முடியாது என்றும், சாப்பிடுவதற்கு முகக் கவசங்களை கலைய வேண்டும் என்றும், முகக் கவசம் அணியாமை தாக்குதலுக்கு காரணம் இல்லை என்றும் குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் அழுத்தமே முறைப்பாடு செய்யப்படாததற்கு காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் குலரத்னவிடம் மீடியா.எல்கே வினவிய போது, ‘வாகனத்தில் பயணித்துக்கொண்டிருப்பதால் காற்றின் சத்தம் காரணமாக தனக்கு எதுவும் கேட்பதாக இல்லை’ என தெரிவித்தார்.
அண்மைக் காலமாக வடமாகாணத்தில் இவ்வாறான வர்த்தகர்கர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மதுபான போத்தல்களை கோரும் குரல் பதிவொன்றும் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.