கரன்னாகொடவுக்கு எதிரான குற்ற பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெறக் காரணமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் இரகசிய அறிக்கை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெற, சட்ட மா அதிபர் எடுத்த தீர்மானமானது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஒருவர் வழங்கிய இரகசிய அறிக்கை ஒன்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவாகும் தெரியவந்துள்ளது. நேற்று ( நவ.01) மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிட் மனு :
வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலியில் பரிசீலனைக்கு வந்த போதே இந்த விடயம் தெரியவந்தது.
அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இது குறித்த எழுத்தானை நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவுக்காக நேற்று இம்மனு பரிசீலனைக்கு வந்திருந்தது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே :
இதன்போது மனுவில் ஒரு பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குற்றப் பத்திரிகியை வாபஸ் பெறும் தீர்மானமானது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் அளித்த அறிக்கை ஒன்றினை மையப்படுத்தி சட்ட மா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அந்த அறிக்கை இரகசிய அறிக்கையாகும்.’ என தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என தீர்மானிக்க முன்னர், அந்த இரகசிய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று ( நவ.2) அந்த அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு மனு மீதான பரிசீலனைகளை அதுவரை ஒத்தி வைத்தது.
எழுத்து மூல சமர்ப்பணம் :
அத்துடன் இந்த ரிட் மனு தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை நாளை 3 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.
சட்டத்தரணிகளின் பிரசன்னம் :
மனு பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் ஆலோசனை பிரகாரம் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் ஆஜரானார்.
பிரதிவாதிகளில் வசந்த கரன்னாகொடவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், சட்ட மா அதிபருக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேவும் மன்றில் ஆஜராகினர்.
ரிட் மனுதாரர்கள் :
கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோரான, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா கோவிந்தசாமி நாகநாதன், மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன் ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
சி.ஏ. ரிட் 424/21 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி நுவன் போப்பகேயின் வாதம் :
முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானமானது நியாயமற்ற, பாரபட்சமான, சட்டவிரோதமான, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்மானம் என மனுதாரர்கள் சார்பில் கடந்த தவணையின் போது சட்டத்தரணி நுவன் போப்பகே வாதிட்டிருந்தார்.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித் உள்ளிட்ட 5 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் சார்பில் நுவன் போப்பகே குறிப்பிட்டிருந்தார்.

பிட்டு பம்பு மற்றும் கன்சைட் :
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளின் படி, மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்பு” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர் அவர்கள் முன்னாள் கடற்படைத் தளபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள கன்சைட் என்ற சட்டவிரோத நிலத்தடி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் கடற்படைத் தளபதியின் மீதான குற்றப்பத்திரிக்கையை வாபஸ் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானமானது சட்டத்தினால் வழங்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும், எனவே நீதி நிர்வாகத்தின் நோக்கத்திற்காக இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அந்த தீர்மானம் திருத்தப்பட வேண்டியதெனவும் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையிலேயே பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பி, 2 ஆம் பிரதிவாதிக்கு எதிரான மேல் நீதிமன்ற குற்ற பகிர்வுப் பத்திரிகையுடன் தொடர்புடைய ஆவணங்களை மேன் முறையீட்டு நீதிமன்ற பொறுப்பில் எடுத்து ஆராய தடைமாற்று நீதிப் பேராணை ஊடாக இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் மனுவை விசாரணை செய்து 2 ஆம் பிரதிவாதியான வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல முதல் பிரதிவாதி சட்ட மா அதிபருக்கு கட்டளைப் பேராணை ஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
காரணம் கூற சட்ட மா அதிபர் மறுப்பு :
முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்துக்கான காரணத்தை அறிய முன் வைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே மகனை இழந்த தாயின் விண்ணப்பம் :
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, தனது ஒரே மகனை இழந்துள்ள கொழும்பு – கொட்டாஞ்சேனையை சேர்ந்த சரோஜா நாகநதன் எனும் தாய் முன் வைத்த தகவல் அறியும் விண்ணப்பமே இவ்வாறு நிராகரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் தகவல் அதிகாரியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக கையெழுத்திட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி, ஆர்.ஐ./22/2021 எனும் பதிவிலக்கத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குறித்த விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 5 (1) (ஊ)
பிரிவின் கீழான விதிவிதானங்களுக்கு அமைய நிராகரிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறயினும், குறித்த நிராகரிப்பு தொடர்பில் அதிருப்திய்டைந்தால், தகவல் அறியும் சட்டத்தின் 31 (1) ஆம் பிரிவின் கீழ், மேன் முறையீட்டுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பாரிந்த ரணசிங்கவை 14 நாட்களுக்குள் தொடர்புகொள்ளுமாறு விபரங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னணி சம்பவமும் குற்றச்சாட்டும் :
முன்னதாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக காட்டிக்கொண்டு, எந்த பயங்கரவாத செயல்களுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத அப்பாவி சிவிலியன்களை கடத்திச் சென்று இரகசியமாக தடுத்து வைத்து, கப்பம் பெற முயற்சித்து இறுதியில் அந்த 11 பேரையும் கொலை செய்தமை தொடர்பில் மூவர் கொண்ட ட்ரயல் அட்பார் விஷேட மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொலை செய்ய சதி செய்தமை, அதற்காக கடத்தியமை, உடைமைகளை கொள்ளையிட்டமை, பலாத்காரமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை, காணாமல் ஆக்கியமை, அது தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 667 குற்றச்சாட்டுக்கள் இந்த 14 பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பிரதம நீதியரசரால் அமைக்கப்பட்டுள்ளது.
காணாமால் ஆக்கப்பட்டோர் விபரம் :
கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவை அணைத்தும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்கும் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபரின் குற்றப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர்ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த தற்போது ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, ஆகியோர் கைதாகி தற்போது பிணையில் உள்ளனர்.
கரன்னாகொடவை கைது செய்ய தடை :
முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவர் இந்த விவகாரத்தின் 16 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டார். 17 ஆவது சந்தேக நபராக கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார கைது செய்யப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அரச சாட்சியாளர்கள் :
17 ஆவது சந்தேக நபரான கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார உள்ளிட்ட மூவர் அரச சாட்சியாக மாற்றப்பட்டனர். அளுத் கெதர உபுல் பண்டாரவே கன்சைட் முகாமில் குறித்த கடத்தப்பட்டவர்கள் இருந்த போது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள உதவியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனைவிட லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக தர்மதாஸ ஆகிய இரு கடற்படை உளவுப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் அரச சாட்சியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டோர் :
அதன்படி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த கொமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனபப்டும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த சிறப்பு மேல் நீதிமன்ற வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே தற்போது வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்ட மா திபர் தீர்மானித்துள்ளார்.
Previous article18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு ஹிஜாஸுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை செய்யப்பட்ட சுல்தான்; நீதிவானிடம் முறைப்பாடு
Next article‘ஒரே நாடு ஒரே சட்டம்’: மனித உரிமைகள் விடயத்திற்கு எதிரானதாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here