பிணை தீர்மானம் நாளை; ஒரு வாக்கு மூலத்துக்காக விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது : ஷானியின் சட்டத்தரணிகள்

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின்  மீளாய்வு மனு மீதான  தீர்ப்பு நாளை (16) அறிவிக்கப்படவுள்ளது. நாளைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு இம்மனு மீதான தீர்ப்பினை அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று  அறிவித்துள்ளது.
இரு மனுக்கள்:
ஷானி அபேசேகர சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுவும் அதே விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள சி.ஐ.டி. முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுவும்  இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரர்
ஷானி அபேசேகர சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா ஆஜரானார். பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆஜரானார்.
சட்ட ம அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார்.
ஷானிக்கு பிணையளிக்க முடியும்:
 ஷானி அபேசேகரவுக்கு பிணை கோரி வாதங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயா பிணை சட்டத்துக்கு அமைய பிணை வழங்க அதிகாரம் இருந்தும்,   கம்பஹா மேல் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டை விட்டு ஓடப்போவதில்லை:
‘ பொலிஸ்  பரிசோதகர் நிசாந்த சில்வாவைப் போன்று நாட்டை விட்டு சென்று விடலாம் என கூறி பிணைக்கு எதிர்ப்பு முன் வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நிசாந்த சில்வா போன்றோர் நாட்டை விட்டு செல்லும் போதும் நாம் போகவில்லை. எதற்கும் முகம் கொடுக்க தயாராக நாம் இங்கேயே இருந்தோம். விசாரணையாளர்களின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினோம்.
எமது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நாம் பதவியில் கூட இல்லை. அதனால் இந்த விசாரணைகளில் கூட எமக்கு தலையீடு செய்ய முடியாது. எனவே  பிணையளிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.’ என சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதிட்டார்.

சிறைச்சாலை அதிகாரிகள் சமர்ப்பிக்காத வைத்திய அறிக்கை:

 கடந்த 4 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகரவின் உடல் நிலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அறிக்கை கோரியிருந்த போதும் இன்று வரை அது முன் வைக்கப்பட்டிருக்கவில்லை. இந் நிலையில் அதனை அவதானித்த நீதிமன்றம்  அவ்வறிக்கையை நாளை சமர்ப்பிக்க நீதிமன்ற பதில் பதிவாளர் ஊடாக அறிவித்தல் விடுத்தது.
விஷேட காரணி:
 இந் நிலையில் ஷானி அபேசேகரவின் உடல் நிலை தொடர்பில் சட்டத்தரணி விரான் கொரயா,   ஷானி அபேசேகரவுக்கு உள்ள இருதய கோளாறு மற்றும் கொவிட் 19 அச்சுறுத்தல் ஆகியவற்றை விஷேட காரணியாக   முன் வைத்து பிணை கோரினார். இதனையடுத்து  பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும் வாதங்களை முன் வைத்தார்.
சட்ட மா அதிபர் எதிர்ப்பு:
 எவ்வாறாயினும்  ஷானி அபேசேகர மற்றும் சுதத் மெண்டிஸுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் சார்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய, விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவர்களுக்கு பிணையளிப்பதை எதிர்ப்பதாக குறிப்பிட்டார். சஞ்ஜீவனீ எனும் பெண்ணின் வாக்கு மூலம் இவ்விசாரணைகளுக்கு அவசியமாவதாகவும், அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அதனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிறை வைப்பது அசாதாரணமானது:
 இந் நிலையில் ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொராயா, சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார். பிணை தொடர்பில் தீர்மானமெடுக்க விசாரணை நிறைவடைய வேண்டிய எந்த அவசியமும் சட்டத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டார். கடந்த 10 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள ஒருவரை ஒரு வாக்கு மூலத்தை காட்டி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பது அசாதாரணமானது என அவர் வாதிட்டார்.
 இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், பிணை குறித்த தீர்ப்பை நாளைய தினம் அறிவிப்பதாக அறிவித்தது.
பின்னணி:
பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, ஷானி அபேசேகர உட்பட மூன்று சி.ஐ.டி. அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சி.ஐ.டி. அதிகாரிகள் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு கடந்த 2020  டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி  நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றின் உத்தரவை மீளாய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷானி அபேசேகர உள்ளிட்ட இரு சி.ஐ.டி. அதிகாரிகள் சார்பில் இந்த மேன் முறையீட்டு  மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous articleஇளம் கவிஞர் அஹ்னாப் விளக்கமறியலில்; யாருக்கும் அறிவிக்காது நீதிமன்ன்றுக்கு அழைத்து சென்று சி.ரி.ஐ.டி. இரகசிய நடவடிக்கை
Next articleஅசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இரு வாரங்களில் முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here