அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இரு வாரங்களில் முடிவு

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில்  அடுத்த இரு வாரங்களில் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும் என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  குறித்த மனுவை அவசர அவசியம் கருதிய மனுவாக கருதி எதிர்வரும் 28 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது..
இது குறித்த மனு  நேற்று  உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர மற்ரும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது,  சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், அசாத் சலி  ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்துக்கள் குறித்த விசாரணை  நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
‘ அந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அது குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளது. விசாரணை கோவையை ஆராய்ந்த பின்னர் குற்றப் பத்திரிகை தாக்கல்ச் எய்வதா இல்லையா, அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். அடுத்து வரும் ஒரு வாரத்துக்குள் அது சாத்தியமாகும்.’ என  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய,   மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலான விசாரணைகள்  தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளதுடன். அதற்கு பதிலளித்துள்ள அவர்  அவ்விசாரணைகள், இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் அதனை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய,  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா,சந்ரகேஷ் பிருந்தா உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்தனர்.
தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்த சந்தேக நபருக்கு உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிப்பதாக அசாத் சாலி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை தடுத்து வைக்க  ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு அவரை தடுத்து வைக்க அனுமதிப்பதாக ஜனாதிபதி குறித்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சி.ஐ.டி.யினர்  கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் தாக்கல் செய்த பி அறிக்கையில்,  மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியமை, அவர்களை பாதுகாத்து அவர்களுக்காக  செயற்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் அசாத் சாலியிடம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றி கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
Previous articleபிணை தீர்மானம் நாளை; ஒரு வாக்கு மூலத்துக்காக விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது : ஷானியின் சட்டத்தரணிகள்
Next articleசாட்சிகளின் சுருக்கத்தை மன்றில் சமர்ப்பிக்குக;  அஹ்னாப் விவகாரத்தில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க சி.ரி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here