ஷானி ஜனாதிபதி ஆணைக் குழுவில் கூறியதென்ன?

தாக்குதல் இடம்பெறப் போவதாக உளவுப் பிரிவுக்கு கிடைத்த வெளிநாட்டுத் தகவலை அப்போதைய ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என்பதை நம்ப முடியாமல் உள்ளது என முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.
அத்துடன் மாவனெல்லை மற்றும் வனாத்துவில்லு சம்பவங்களைத் தொடர்ந்து, 2019 பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தானும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவும் ஒரே உணவு மேசையில் வைத்து எச்சரித்ததாகவும் அவர் தகவல்களை வெளிப்படுத்தினார்.
2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் முதன் முறையாக  கடந்த 25 ஆம் திகதி திங்களன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42 ஆம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் சாட்சிமளிக்கையில், 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் கடந்த 2018 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விடயம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர்,   குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ தினமே விசாரணைகளை சி.ஐ.டி. பொறுப்பேற்றதாகவும் இதன்போது இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்ட பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.
குறித்த சம்பவம் நடந்து 5 நாட்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு அருகே இருந்து ஒரு பாடசாலை பை, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டதாகவும்,  குறித்த பை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருடையது என நம்பத்தக்க ஜெகட், காற்சட்டை என்பன இருந்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.
அத்துடன் நவம்பர் 26 ஆம் திகதி வவுண தீவு பகுதியில் மா வீரர் நினைவு தின நிகழ்வுகளை குறித்த சந்தேக நபர் ஏற்பாடுச் செய்திருந்த நிலையில், அதனை வவுணதீவு பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான பின்னணியில், சம்பவத்தின் பின்னர் தேசிய உளவுச் சேவையும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் தொடர்ச்சியாக தகவல்களை பகிர்ந்துகொண்டதாக கூறிய ஷானி அபேசேகர, அவ்வாறு பகிரப்பட்ட 6 அறிக்கைகளையும் அடையாளம் காட்டி அவை அனைத்திலும் குறித்த சம்பவம் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களால் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வந்ததாக கூறிய அவர், எந்தவொரு உளவுத் துறை அறிக்கையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கூட எழுப்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந் நிலையிலேயே,  ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர், சி.ஐ.டி. விசாரணையில் அந்த இரட்டை கொலை சஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட அடிப்படைவாத குழு முன்னெடுத்த குற்றச் செயல் என்பது  சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்டதாக ஷானி அபேசேகர கூறினார்.
இதனைத் தொடர்ந்து 2018 டிசம்பர் 23 ஆம் திகதிக்கும் 26 ஆம் திகதிக்குமிடையில் கேகாலை பொலிஸ் வலயத்தின் மாவனெல்லை பகுதியில் பதிவான புத்தர் சிலை தகர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலோட்டமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது அச்சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவுக்கு சாட்சியாளர்களின்  சாட்சியங்களை, பொலிஸ் சாட்சிப் பதிவு புத்தகத்தில் பதிய வேண்டாம் என தாங்கள் ஆலோசனை வழங்கியிருந்தீர்களா என அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர, ஒருவரின் வாக்கு மூலத்தை சாட்சிப் பதிவு புத்தகத்தை தவிர வேறு எங்கும் பதிய முடியாது. ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்தார் என்பதை அப்புத்தகத்தை பார்த்தே அறிய முடியும். அப்படி இருக்கையில் அதில் பதிய வேண்டாம் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
அவ்வாறு நான் ஆலோசனை வழங்கியிருந்தால் கூட, மாரசிங்க, அதனை பின்பற்றாது செயற்பட்டிருக்க வேண்டும். அது தான் பொலிஸாரின் பொறுப்பு. அல்லது அது குறித்து மேலதிகாரிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். தான் கடமையிலிருந்து தவறியதை மறைக்க இன்னொருவர் மீது பழி சுமத்துவது சாதரணமானது என குறிப்பிட்டார்.
இதன்போது, இந்த சிலை உடைப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருந்ததாகவும் அதனை கண்டறிய  இன்டர் போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யிடம் கேகாலை பொலிஸ் அத்தியட்சராக இருந்த சாமிக பிரேமசிறி கோரிய போதும் அதற்கான  சரியான ஒத்துழைப்பை சி.ஐ.டி. வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது அது குறித்து பரிமாற்றப்பட்ட கடிதங்களையும் முன்னிறுத்தி ஷானி அபேசேகர சாட்சியமளித்தார்.
‘ சிலை உடைப்பு விவகாரத்தில், பின்னணியில் சர்வதேச சதி உள்ளதாகவும் சர்வதேச அமைப்பொன்றுக்கு தொடர்புள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறி இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடி கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமிக பிரேமசிறி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். நான் அதனை சி.ஐ.டி.யில் உள்ள சர்வதேச பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்கவுக்கு அனுப்பினேன். அவரும் பின்னர் எனக்கு பதிலளித்தார். அதில் தெளிவாக, சர்வதேச சதி இருப்பின் எந்த நாட்டிலிருந்து, எவ்வாறு யாரூடாக அந்த சதி இடம்பெற்றுள்ளது என்பதை அறியத் தருமாறும் அப்போதே சர்வதேச பொலிசாரால் மேலதிக தகவல்களை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த பதிலை நான் பொலிஸ் அத்தியட்சர் சாமிக பிரேமசிறிக்கும் அறிவித்தேன். எனினும் அதன் பின்னர் அது குறித்து எதுவும் மீள எங்களிடம் கோரப்படவில்லை.
ஏபரல் 21 தாக்குதல்களின் பின்னர் கூட, சர்வதேச சதி மற்றும் சில அமைப்புக்கள் தொடர்பில் சில தகவல்கள் எமக்கு கிடைத்தன. எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட காலப்பகுதி வரையில் அவற்றை உறுதி செய்ய சாட்சிகள் இருக்கவில்லை. தாக்குதல்களின் பின்னர் சர்வதேச விசாரணை அமைப்புக்கள், உளவுச் சேவைகளும் இங்கு வந்து விசாரணை நடாத்தின. அவர்களாலும் அவ்வாறானதொரு விடயத்தை உறுதி செய்ய முடியவில்லை.’ என குறிப்பிட்டார்.
இதனையடுத்து,  2019 ஏபரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாக கிடைத்த  வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை எனக் கூறுவது நம்பும் படியாக இல்லை எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கூறினார்.
‘‘நிலந்த ஜயவர்தன எப்போதும் ஆர்ப்பாட்டங்கள், ஏனைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை ஜனாதிபதிக்கு அறிவித்துக்கொண்டிருப்பவர். அப்படி இருக்கையில் இந்த தகவலை மட்டும் கூறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் ஊடாகவே தகவல்களை அறிந்துகொள்வார். இதுவே இதுவரை காலமும் நடந்து வந்தது’’ என ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.
இதன்போது ஆணைக்குழுவுக்கு அப்போது தலைமை தாங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன, அப்படியானால் நிலந்த ஜயவர்தன தான் அறிவிக்கவில்லை என கூறுவது பொய்யா?, அதற்கான ஏதும் சான்றுகள் உங்களிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கடந்த 2019 ஜூன் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின்  நிறைவேற்று தர அதிகாரிகள் தமது பயணங்கள் குறித்து பதிவிடும் புத்தகத்தில்  பதிவிட்டுள்ள பதிவினையும் ஆதாரமாக கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர பதிலளித்தார்.
‘ ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட்டு அங்கு சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.  அதற்கு உளவுச் சேவை அதிகாரிகளும் சாட்சிக்காக அழைக்கப்பட்ட நிலையில், அச்செயற்பாட்டுக்கு உளவுச் சேவை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டனர். இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்தில்,  ஒரு கலந்துரையாடல் அது குறித்து நடந்தது. அதில் நிலந்த ஜயவர்தன தெரிவுக் குழு முன்னிலையில் உளவுச் சேவை அதிகாரிகள் அழைக்கப்படுவது அவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கை எனவும், அச்செயற்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தான் தனக்கு கிடைத்த உளவுத் தகவலை பாதுகாப்பு செயலருக்கும், தேசிய உளவுச் சேவை பிரதானிக்கும் அறிவித்ததாக கூறும் போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு, அந்த தகவலை எனக்கும், பிரதமருக்கும் அறிவிக்கவில்லை என குறிப்பிட்டார். எனினும் உண்மையில் ஜனாதிபதிக்கு அந்த தகவல் அறிவிக்கப்பட்டிருக்காவிட்டால், எல்லா தகவல்களையும் பகிர்ந்துகொண்ட போதும், ஏன் எனக்கு அந்த தகவலை தரவில்லை என்றே  முன்னாள் ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும். எனினும் தனக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றே அவர் குறிப்பிட்டார். அங்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது.’ என தெரிவித்தார்.
இதனிடையே, மாவனெல்லை சிலை உடைப்பு, வனாத்துவில்லு வெடிபொருள் மீட்பு சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் அவற்றின் பின்னணியில் சஹ்ரான் தலைமையிலான அடிப்படைவாதிகள் உள்ளமை வெளிப்படுத்தப்பட்ட பின்னர், அது குறித்து ஜனாதிபதியை அறிவுறுத்தியதாகவும், பாதுகாப்பு பேரவையில் அது குறித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அது குறித்து அறிவிக்க சி.ஐ.டி. பிரதானியை பாதுகாப்பு பேரவைக்கு அழைப்பதாக கூறியபோதும் இறுதி வரை அது நடக்கவில்லை என  அவர்  அரச சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு வெளிப்படுத்தினார்.
‘ கடந்த 2019 பெப்ரவரி 2 ஆம் திகதி நானும், சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவும் பெஜட் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்றோம். வேறு ஒரு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் வாக்கு மூலத்தைப் பெற நாம் அங்கு சென்றோம். அதன் பின்னர் நாம் அவருடன் கலந்துரையாடினோம். அப்போது இரவு உணவினை நாம் மூவரும் ஒன்றாக உட்கொண்டோம். அப்போது குறித்த உணவு மேசையில் வைத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, மாவனெல்லை, வனாத்துவில்லு சம்பவங்களின் பின்னணியில் ஒரே குழுவே உள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மிக ஆபத்தானதாக விளங்குவதால் அது தொடர்பில் பாதுகாப்பு பேரவையில் கூறி அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விளக்கினார்.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு, ‘ சரி ரவி… நான் உங்களை பாதுகாப்பு பேரவைக்கு ஒரு நாள் அழைக்கின்றேன். நீங்கள் இது குறித்து விளக்குங்கள்.’ என கூறினார். எனினும் இறுதி வரை அந்த அழைப்பு வரவே இல்லை என  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆணைக் குழுவில் குறிப்பிட்டார்.
இதன்போது  ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், அப்போது சஹ்ரானின் பெயரை நீங்கள் கூறினீர்களா என வினவினர். அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர,  அது ஞாபகத்தில் இல்லை. எனினும் இவ்வளவு பெரிய விடயத்தை கூறியே கணக்கில் கொள்ளாதவர், அப்போது சஹ்ரானின் பெயரை மட்டும் கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே என பதிலளித்தார்.
அத்துடன் வனாத்துவில்லு பகுதியில், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது. அங்கு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்த போது 2019 மே மாதம் இலங்கையில் பல இடங்களில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்தமை தெரியவந்தது.
ஹிக்கடுவை,உனவட்டுன,  நுவரெலியா, கண்டி போன்ற இடங்களில் அதற்கான உளவு பார்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தன. அப்படி இருக்கையில் அந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டமை மிக வெற்றிகரமான விசாரணை. ஒருவேளை சஹ்ரான், சி.ஐ.டி. அவரை நெருங்குவதை அறிந்து கூட ஏப்ரல் மாதத்தில் இவ்வாறான திடீர் தாக்குதல் ஒன்றினை நடாத்தியிருக்கலாம் என ஷானி அபேசேகர சுட்டிக்காட்டினார்.
அப்படியானால், மாவனெல்லை,  வனாத்துவில்லு சம்பவங்களின் பின்னால் சஹ்ரான் குழு இருப்பதை தெரிந்தும் ஏன் அவரைக் கைது செய்ய முடியாமல் போனது என ஆணைக் குழு கேள்வி எழுப்பியது..
அதற்கு பதிலளித்த சி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சஹ்ரானை கைது செய்ய பல இடங்களில் நாம் தேடுதல் நடாத்தினோம். கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய கெக்குனுகொல்ல, காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தேடுதல் நடாத்தப்பட்டது. எனினும் அவர் அப்பகுதிகளுக்கு நாம் செல்லும் போதும் அங்கு இருக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்றார்.
இதன்போது,  சி.ஐ.டி. பல குற்றவாளிகளை சூட்சுமமாக  மிக திட்டமிட்டு கைது செய்யும் போதும், ஏன் சஹ்ரானை மட்டும் கைது செய்ய முடியாமல் போனது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர, ‘ பொதுவாக சி.ஐ.டி.யினர் ஒரு சந்தேக நபரின் இருப்பிடத்தை கண்டறிய தொலைபேசி கோபுரத் தகவல்கள், உளவுத் தகவல்கள், அவரின் நடமாட்டம் குறித்த அவதானிப்புக்களை பயன்படுத்துவர். எனினும் இங்கு சஹ்ரான், அவரது சகாக்களுடன்  உரையாட ‘ திரிமா’ எனும் தொலைபேசி செயலியை பயன்படுத்தியுள்ளார். அதனால் அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை. அச்செயலியை அவர் தான் இருக்குமிடத்தை காண்பிக்காமல் இருக்க சூட்சுமமாக பயன்படுத்தியமையால் கைது செய்ய முடியாமல் போனது.’ என்றார்.
இதன்போது சஹ்ரான் குறித்த செயலியை பயன்படுத்துவது 21/4 தாக்குதல்களுக்கு முன்னரே சி.ஐ.டி. அறிந்திருந்ததா, அவ்வாறு எனில் ஏன் தொழில்நுட்ப உதவிகளைப் பெறவில்லை எனவும் ஆணைக் குழு கேள்வி எழுப்பியது. அதர்கு பதிலளித்த ஷானி அபேசேகர,
‘ ஆம்.. சி.ஐ.டி. 21/4 தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் ’திரிமா’ செயலியைப் பயன்படுத்துவதை அறிந்திருந்தது. அது குறித்து நாம் தொழில் நுட்ப உதவிகளைப் பெற போதுமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அதற்கான கோரிக்கைகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்தன.  எனினும் அந்த செயலியை உடைத்து சஹ்ரான் இருக்குமிடத்தை கண்டறிய, உரிய உதவிகள் கிடைக்கவில்லை. அந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் தோல்வி கண்டன எனத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, வனாத்துவில்லு வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவரை விடுவித்தமை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த  ஷானி அபேசேகர, ‘ இது குறித்து  2019 பெப்ரவரி அல்லது மார்ச் முதல் பகுதியில் பாதுகாப்பு செயலரின் கீழ் கலந்துரையாடல் ஒன்று நடந்தது. அதில்  முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும் இருந்தனர். இதில் குறித்த நவீட், நப்ரிஸ் எனும் சந்தேக நபர்கள்  எந்த தொடர்பும் அற்றவர்கள் என்பதால் அவர்களை விடுவிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நான் அப்போது அக்கோரிக்கையை நிராகரித்தேன். அவர்கள் தடுப்புக் காவலில் உள்ளதால், விசாரணை நிறைவடையும் வரை அது குறித்து தீர்மானம் எடுக்க முடியாது என நான் திட்டவட்டமாக அறிவித்தேன். அதன் பின்னர் என்னுடன் அது குறித்து யாரும் தொலைபேசியில் கூட பேசவில்லை.  பின்னர் விசாரணை அதிகாரியான மாரசிங்கவின் முன் மொழிவுகள், உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் முன் மொழிவுகளை அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லாமையால் அவர்களை நிபந்தனையின் கீழ் விடுவிக்க பரிந்துரைத்தேன். அதனை சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பி,  8 நிபந்தனைகளின் கீழ் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அரசியல் தலையீடு உள்ளதாக பலரும் கூறினாலும், நான் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை எதனையும் கேட்பவனும் அல்ல. அவ்விருவரும் , இதுவரை  இந்த தாக்குதல் குறித்தோ ஏனைய அடிப்படைவாத விடயங்கள் குறித்தோ கைது செய்யப்படவும் இல்லை. அவ்விருவரும் இன்றும் குறித்த நிபந்தனைகளின் படி சி.ஐ.டி.க்கு வந்து கையொப்பமிட்டு செல்கின்றனர். எனவே அரசியல் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகளை விடுவித்ததாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.’ என குறிப்பிட்டார்.
இதன்போது, தாக்குதல் நடாத்தப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கணினி, தொலைபேசி, பென் ட்ரைவ் உள்ளிட்ட சான்றுப் பொருட்களை  வெளிநாட்டு உளவுச் சேவை,  விசாரணையாளர்களுக்கு பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் எப்.பி.ஐ., இஸ்ரேலின் மொசாட், இந்தியாவின் ரோ, அவுஸ்திரேலியாவின் ஏ.எப்.பி, பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட் யார்ட் உள்ளிட்ட விசாரணை, உளவுச் சேவைகள் விசாரணைக்கு உதவ அவர்களது குழுவினருடன் இலங்கை வந்திருந்தனர். அவர்கள்,சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட வழக்குப் பொருட்களை பகுப்பாய்வு செய்ய கோரிக்கை முன்வைத்தனர். நான் அதனை வன்மையாக எதிர்த்தேன். பின்னர் அது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தேன். வழக்கு பொருட்களை நீதிமன்ற அனுமதியின்றி மூன்றாம் தரப்புக்கு வழங்க நான்  ஒப்புக் கொள்ளவில்லை.
பின்னர் பிரதான நீதிவான்,  குறித்த வெளிநாட்டு உளவுச் சேவைகள் விசாரணைப் பிரிவுகளின் அதிகாரிகளையும், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளையும் அழைத்து அவர்கள் அனைவரதும் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பகுப்பாய்வு செய்ய அனுமதியளித்தார்.
இது குறித்து சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க இவ்வாணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தை மையப்படுத்தி இரு ஊடகங்கள், நான் அமெரிக்காவுக்கு சான்றுப் பொருட்களை விற்றதாக செய்தி வெளியிட்டிருந்தன. இது முற்றிலும் தவறானது என உணர்வு பூர்வமாக பதிலளித்தார்.
தொடர்ந்தும் கண்ணீர் மல்க பதிலளித்த  ஷானி அபேசேகர, ‘ நான் எந்த தவறும் செய்யாதவன். எனக்கு நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்துவிட்டது. இனிமேல் மரணத்தை கூட நான் சந்தோஷமாக ஏற்க தயாராகவே உள்ளேன். அப்பாவி மக்களுக்காகவே எனது தொழிலை நான் செய்தேன். இன்று எனது பிள்ளைகள், மனைவிக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பணம் பெற்றமை,  சித்திரவதை செய்தமை, பெண்களுக்கு தொல்லை கொடுத்தமை போன்ற முறைப்பாடுகளே கிடைக்கும். ஆனால் எனக்கு எதிராக அவ்வாறான எந்த முறைப்பாடும் இல்லை என்பதையிட்டு சந்தோஷமடைகின்றேன். நான் எனது கடமையை செய்தமைக்காகவே இன்று இந் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளேன்.’ என கண்ணீர் மல்க கூறினார்.
சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, வர்த்தகர் சியாம் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பான விசாரணைகளின்போது புதிய சாட்சியங்களை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2020 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு தற்போதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous articleஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக பிரிட்டன் தூதுவர் ருவிட்டர் செய்தி
Next articleசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு: கோட்டை நீதிவானின் வரலாற்றில் பதிய வேண்டிய உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here