சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு: கோட்டை நீதிவானின் வரலாற்றில் பதிய வேண்டிய உத்தரவு!

பயங்கரவாத தடை சட்டமானது குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை வலுவிழக்கச் செய்யாது என அறிவித்துள்ள கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே,  குற்றவியல் சட்டக் கோவையானது  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் பொருந்தும்  என இன்று  அறிவித்தார்.
இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் எழுதப்பட்ட ‘குற்றவியல் சட்டக் கோவை’   என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் நீதிவான் விஷேடமாக மேற்கோள்காட்டியமை விஷேட அம்சமாகும்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த விவகார வழக்கு விசாரணைகள் இன்று  விசாரணைக்கு வந்தன.
சட்டதரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , பதிவு செய்யப்பட்டுள்ள  சாட்சியங்களின் சுருக்கத் தொகுப்பை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் கோட்டை நீதிவான்  ரங்க திசாநாயக்க கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
எனினும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நீதிவான் ஒருவரால் மேற்பார்வை செய்ய முடியாது என்று சட்டமா அதிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பணம் முன்வைத்திருந்தார்.
பின்னர் ஹிஸ்புல்லாவின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டதரணிகள் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை ஆட்சேபித்து இடையீட்டு மனு தாக்கல் செய்து அதற்கு எதிரான வாதங்களை முன்வைத்தனர்.  விசேட சட்டங்களில் எதிர்மறையான விதிமுறைகள் காணப்படாவிட்டால் குற்றவியல் சட்டவிதிகள் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் ஏற்புடையது என்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டதரணிகள் இதன்போது வாதிட்டிருந்தனர்.
சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் ஜனாதிபதி சட்டதரணி நலிந்த இந்ரதிஸ்ஸ, ஹபீல் பாரிஸ் , தனுஷன் கனேஷயோகன் மற்றும் கவிந்து இந்ரதிஸ்ஸ ஆகியோர் ஆஜராகினர்.
இந் நிலையிலேயே ,பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புகாவல் உத்தரவானது , ஒரு நபர் மீதான விசாரணைக்கே தவிர அவருக்கான தண்டனையை வழங்குவதற்கானது அல்ல என்று தெரிவித்த நீதிவான் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான  அனைத்து வாக்குமூலங்களின் சுருக்கம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் மாதம் 24 ஆம் திகதி , நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.
Previous articleஷானி ஜனாதிபதி ஆணைக் குழுவில் கூறியதென்ன?
Next articleகுருந்தூர் மலையை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு கெடுபிடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here