குருந்தூர் மலையை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு கெடுபிடி!

(வன்னி செய்தியாளர்)
வடக்கினை சேர்ந்த  சைவ சமய அமைப்புக்கள்  முல்லைத்தீவு  குருந்தூர் மலைக்கு சென்ற போது, அவர்களை இரண்டுமணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.
இன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் குருந்தூர் மலைக்கு சென்றனர்.அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த  குழு காக்க வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்கு செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது , கற்பூரம் கொண்டு செல்ல முடியாது ,பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது “ஓம் நமசிவாய ” என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.
வந்தவர்களை  சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர். அங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர்.
வருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.புலனாய்வாளர்கள் ,இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த இடமானது தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பொலிஸார் மூலமே நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கும் இராணுவத்தினருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதாகவும் தெரிவித்தார்.
இந்த குருந்தூர் மலைப் பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ  தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க  ,மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின்  செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இதன்போது அங்கிருந்த ஆதி ஐயனார் சூலமொன்றும் உடைத்தெறியப்பட்டதாக கிராமிய மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.அதே நேரம் புத்தர்சிலை ஒன்றும்  இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டதனால் பதட்டமான சூழ்நிலையொன்றும் ஏற்பட்டிருந்தது.
Previous articleசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு: கோட்டை நீதிவானின் வரலாற்றில் பதிய வேண்டிய உத்தரவு!
Next articleஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த சந்தேக நபரான மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவு சேவை அதிகாரியின் தொடர்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here