ஊடகத்துறையானது திரிபிடகம், அல் குர்ஆன் போன்று இருந்திருக்க வேண்டும் என முன்பு நம்பினோம்

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உடனான நேர்காணலின் போதே பின்வரும் விடயங்களைத் தெரிவித்தார்.

கே:   ஊடகத்துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப:  எனது கருத்து என்னவென்றால் ஊடகத்துறையானது சட்டங்களினால் நடாத்தப்படக்கூடாது. இதனடிப்படையிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் நடந்து கொண்டுள்ளார். குற்றம் இழைத்த ஊடகவியலாளர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் எனும் சட்டங்களை தண்டனைக் குறியீடினுள் (Penal code) உள்வாங்கும் பணிகள் இடம்பெற்றிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தில் இவை நடைபெறப்படவில்லை.

நாம் அதற்கான விதிகளை நீக்கி உள்ளோம். எமது கருத்து என்னவென்றால், ஒவ்வொரு ஊடகவியலாளரும் தமது பிரச்சினைகளை  பத்திரிகை சபை(Press Council) மூலம் தீர்க்காமல் நெறிமுறைகளுக்கு(ethics) அமைவாக தீர்த்தல் நல்லது என்பதாகும். நாங்கள் அதற்கான சூழலையும் உருவாக்கி தந்துள்ளோம்.

இன்றைய ஊடகத்துறையின் செயற்பாட்டை எடுத்துக்கொண்டால், நாம் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் உயர் எதிர்பார்ப்புகள் நிவர்த்தி செய்யப் படுகின்றனவா என்பது தான். அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களும், பிரதான ஊடகங்களும் இந்த நம்பிக்கையை இன்றும் பேணுகின்றனவா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த நம்பிக்கையானது உடைக்கப்படும் போது அவ்வூடகத்தின் நிலைப்பாடும் நாட்டின் நலனும் பெருமளவில் பாதிக்கப்படும்.

பிரதான ஊடகமானது தனது நம்பகத்தன்மையை சரியாக பேணாது போனால், இன்றைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் சிக்குண்டு போகும் நிலைமை ஏற்படும். எனவே தமது கடமைகளை செய்வதும், நம்பகத்தன்மையை பேணுவதும் இன்றைய ஊடகங்களின் இன்றியமையாத பொறுப்பாகும்.

கே:  ஊடக நெறிமுறைகளையும் அவற்றை ஊடகங்கள் பின்பற்றுவதையும் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: ஊடகமானது தனது முடிவுகளை தானே எடுக்கத் தவறுமாயின், அவை அரசியல் அதிகாரங்களின் கைகளில் சென்றுவிடும். இதனால் அனைத்து முடிவுகளும் தலைகீழாகவே எடுக்கப்படும் என்பதில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும்.

எங்களிடத்தில் Bakeer Markar Centre for National Unity எனும் தேசிய சங்கம் ஒன்று உள்ளது. 12 வருடங்களுக்கு முன்னர் முக்கியமான ஊடக நிறுவனங்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பயிற்சிப்பட்டறையொன்று இதிலே இடம்பெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஊடகத் தலைவர்கள், ஊடக உரிமையாளர்கள் என பலரும் இணைந்து ஒரு அறிக்கையில் கையொப்பம் இடடனர். ஆனாலும் இன்றுவரை அவை எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இதனால் 9 மாவட்டங்களிலும் ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. எவ்வளவு தான் ஊடகவியலாளர்கள் சரியாக செயற்பட்ட போதிலும், தலைமைப் பொறுப்பில் உள்ள தொகுப்பாளர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கின்றனர் என அம்பாறையில் நடந்த நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே இது ஊடகத்துறையால் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை. இல்லையேல் இது ஊடகத்தினதும் நாட்டினதும் எதிர்காலத்தை பெருமளவு மாற்றத்திற்கு உள்ளாக்கும். ஏனென்றால் ஊடகத்தின் பல செயற்பாடுகளால் நாட்டில் இன்று பல பிரச்சனைகள் இடம்பெறுகின்றன. எதுவாக இருந்தாலும் மக்கள் ஊடகம் சார்ந்த விடயங்களில் இன்று மிகவும் விழிப்பாகவே உள்ளனர். ஊடகத்திற்கான சுதந்திரம் பெற்றுத்தரப்பட வேண்டும் என்பது எவ்வாறு கடமையாக இருக்கின்றதோ அதே போன்று கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை உரிய முறையில் பயன்படுத்துதலும் ஊடகத்தின் கடமையே.

கே:  அரசியலிற்கும் முதலாளித்துவ நடவடிக்கைகளுக்கும் இடையில் ஊடகத்துறையின் கடமைகள் யாவை?

ப:  நாங்கள் அரசியல் அல்லது உரிமையாளர் நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. சில ஊடகங்கள் தமக்கு சொந்தமான நிகழ்ச்சி நிரல்களை வைத்திருக்கையில் சில ஊடகங்கள் தமது தேவைகளை  அரசியல்வாதிகள் மூலம் நிவர்த்தி செய்வதற்காக ஒரு வியாபார நோக்கில் இயங்கி வருகின்றன. இன்றைய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களாலேயே மெருகூட்டப்பட்டுள்ளன.

ஊடகங்கள் தொடர்ந்தும் இவ்வாறே இயங்குமானால், இவை யாரால் இயங்குகின்றன என்பதை மக்கள் இலகுவில் இனங்கண்டுவிடுவார்கள்.

முந்தைய காலங்களில் ஊடகங்களை நாம் திரிபிடக, பைபிள், அல் குர்ஆன் போன்றே கருத்தினோம். பிரதான ஊடகம் எதை கூறுகிறதோ அதையே உண்மை என நம்பினோம். ஆனால் இன்றைய சமுதாயம் மிகவும் விழிப்பாக உள்ளது. 

பத்திரிகைகளை எடுத்தால் கூட இன்று மக்களுக்கு தெரியும் எந்தப்பத்திரிகை எந்த அரசியல்வாதிக்கு சார்பானது, எந்த அரசியல் கட்சியினுடையது, யார் இதற்கு அனுசரணை வழங்குகிறார்கள் என்று.

சில சமயங்களில் ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை ஆளுபவர்கள் மீதான பயத்தின் நிமித்தம் செய்கின்றன. உதாரணமாக ‘தவச’ பத்திரிகையானது தடை செய்யப்பட்டது, ‘தி டைம்ஸ்’, ‘லேக் ஹவுஸ்’ ஆகியவை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக சில ஊடகங்கள் இவ்வாறு நடக்கின்றன.

சில சமயங்களில் ஊடகவியலாளர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். இதன்போது நம்பகதன்மையானது தகர்ந்து போகலாம். எனவே ஊடகவியலாளர்கள் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். ஊடகவியலாளர்கள் எப்போதும் நடுநிலைமை பேண வேண்டும்.

ஊடகமானது நாட்டு மக்களிற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் பொறுப்பானது. இதை ஊடகங்கள் கட்டாயம் கருத்தில் எடுக்கவேண்டும். இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் சில நாட்களாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தால் அவை யாவும் அரசாங்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலேயே காணப்பட்டன.

என்னை ஒரு அரசியல் வாதியாக எண்ண வேண்டாம். முடிவு உங்களை பொறுத்தது. யார் இவ்வாறான விடயங்களை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவை நியாயமானவை அல்ல. எல்லோருமே சமமாக நடாத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஊடகங்கள் எவ்வாறு நடந்துகொண்டன என்றால் அச்சப்படுத்தக்கூடிய சூழலையே உருவாக்கியது எனலாம். இது தொடருமானால் சமூகவலைத்தளம் மீதான மக்களின் நாட்டம் தானாகவே அதிகரித்துவிடும்.

Previous articleகோப்ரல் எண் 01009 ; விநாசித்தம்பி வேல்நாயகத்திற்கு நடந்தது என்ன?
Next articleநவம்பர் 2- விடுபாட்டுரிமை கொண்ட குற்றவாளிகளுடனான பயணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here