நவம்பர் 2- விடுபாட்டுரிமை கொண்ட குற்றவாளிகளுடனான பயணம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படாத நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தினமாக ,  ஐக்கிய நாடுகள் சபையினால் நவம்பர் 2 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.  இக்கட்டுரை  அதனை மையப்படுத்தியதாகும்.

குற்றங்கள்:

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான உறுதியான  தரவுத்தளம், அதுசார்ந்த எந்த நடவடிக்கைகளும்  இல்லாத பின்னணியிலேயே,  இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி நாங்கள் பேசுகிறோம்.சில ஊடக அமைப்புக்கள் இத்தகைய  தகவல்களை அறிக்கைகளாக  வெளியிட்டுருந்தாலும் கடந்த காலங்களில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவை உள்ளடக்கியிருக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க கடந்த 2016 நவம்பர் 19ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2006 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.87 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 5 ஊடகக நிறுவனங்களும் தாக்கப்பட்டுள்ளன.

“ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்” (JDஸ்) அமைப்பு  மூலம் வெளியிடப்பட்ட ‘மரணத்திற்கு ஒன்பது ஆண்டுகள்’ எனும் வெளியீட்டின் பிரகாரம்,  2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியுடன் தொடர்புடையவர்கள்  கொல்லப்பட்டதுடன் ஒன்பது ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன.

ஊடக கண்காட்சி:

2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக,  மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேறி  நடாத்திய  முதல் செய்தியாளர்  சந்திப்பில்,    ஊடகவியலாளர்களுக்கு  நீதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஊடக அடக்குமுறை இடம்பெற்ற காலப்பகுதியில்,  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க ,  தான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு  நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஊடகவியலாளர்கள் முன்  கூறினார்.எனினும் 2015 ஆம் ஆண்டில் மைத்திரி-ரணில் தலைமையில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எதனையும்  செய்யவில்லை.  ஊடக அமைப்புகளின்  அழுத்தம் காரணமாக, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒருசில விசாரணைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால்,  2016 ஆம் ஆண்டு சாகல ரத்நாயக்க அவர்களின் உரையின் அடிப்படையில் 126 குற்றச்செயல்கள் இருப்பினும் ஆறு சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டன. .  லசந்த விக்ரமதுங்க கொலை,பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை,கீத் நோயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை,உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை,நாமல் பெரேரா தாக்கப்பட்டமை மற்றும்  போத்தல ஜயந்த கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை  ஆகிய சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டன.  ஊடகவியலாளர்களுக்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து வேறு எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.

மேலே குறிப்பிட்ட சம்பவங்களில் கீத்  நோயார் மீதான தாக்குதல், உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை, நாமல் பெரரா தாக்கப்பட்டமை மற்றும் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பிலான சம்பவங்கள் குறித்த சந்தேகநபர்கள் மாத்திரமே கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினராவர்.
இந்த ஊடகவியலாளர்களுக்கும்,  தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களான  இராணுவ உறுப்பினர்களிடையே  தனிப்பட்ட பகைமை எதுவும்  இருந்திருக்கவில்லை. ,எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதற்கு யாரோ ஒருவரின் உத்தரவு அவசியம் என்பது மறைக்கப்பட்ட உண்மை. அவ்வாறான உத்தரவு பிறப்பித்த எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.மேலும் அந்த சம்பவங்களுடன் தொடர்பிலான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அது தொடர்பில் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சந்தேகநபர்கள் பிணையில் உள்ளனர்.

உத்தரவு பிறப்பித்தவர்கள்

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக எவரும்  கைது செய்யப்படவில்லை.ஒரு சில பொலிஸார் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டமை கொலை தொடர்பாக அல்ல. கொலைக்கான ஆதாரங்களை அழித்தமை அல்லது ஆதாரங்களை மாற்றுவது தொடர்பாக மட்டுமே அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் அப்போதைய பொலிஸ்மா அதிபரின் பெயரும்  இருந்த போதிலும் அவர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைதிலிருந்து தப்பினார்.

போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையின்போது அது தொடர்பிலான ஆதாரங்களை மறைத்ததற்காக அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த ஒரு பிரபலமான ஒரு பொலிஸ்  அதிகாரியை கைது செய்ய சி.ஐ.டி யினர் தயாராகி வந்தாலும் அவர் கைது செய்யப்படவில்லை.  அந்த பொலிஸ் அதிகாரி தற்போது பொலிஸ் மா அதிபர் கனவுடன் வலம் வரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  இருக்கின்றார்.

உதயன்,லங்கா ஈ நியூஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டன.எனினும் அது தொடர்பிலான எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களான  தர்மரத்தினம் சிவராம் ( தாரகி) , நடேசன், கே.பாலநடராஜா,ரேலங்கி செல்வராஜா, சுப்ரமணியன் சுகிர்தராஜன் , பி.ஜி.சகாய தாஸ், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ராஜிவர்மன், சகாதேவன் நிலக்சன், வடிவேலு நிமலராஜ்,பி தேவகுமார் உட்பட பலரின் கொலைகள் தொடர்பான விசாரணைகள் கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் என்று அழைத்துக்கொண்ட அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்கூட ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல குற்றங்கள் பதிவாகின. அதில் முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் பொது வெளியில் ஊடகவியலாளர் ஒருவர்  மீது தாக்குதல் நடாத்திய  சம்பவத்தை கூறலாம். இது  தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படாத அதேவேளை,குறித்த தளபதி  பின்னர் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக  பதவி உயர்த்தப்பட்டார்.

அங்கும் இலங்கையை ஒத்த நிலையே!!  

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்படாத நிலைமை உலகம் முழுதும் அவதானிக்கபப்டுகின்றது. .உதாரணமாக மாலைதீவின் அஹமத் ரில்வானின் விடயத்தை எடுத்துக்காட்டலாம். மாலத்தீவின்  பத்திரிக்கையாளர் அகமது கடத்தி கொலை செய்தது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடைபெற்று வருவதாகவும்,அது தொடர்பில்அழுத்தங்கள் எதுவும் இல்லை எனவும் அந் நாட்டின் தேசிய கொள்கை  ஆணைக் குழு,  2019ல் வலியுறுத்தியது.எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அதாவது 2014 ஆம் ஆண்டில் கடந்த அரசாங்க காலத்தில் கடத்தப்பட்ட ரில்வான் தொடர்பில்   விசாரணை முறையாக  நடாத்தப்படவில்லை என அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாலைத்தீவின் தற்போதைய அரசாங்கமோ தோற்கடிக்கப்பட்ட யமினின் அரசாங்கத்தின்   எந்த ஒரு அரசியல்வாதியோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ குறித்த விசாரணையில் தலையிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த ஆணை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு ரில்வான் கடத்தப்பட்டாலும் ஐந்து ஆண்டுகள் அவர் தொடர்பிலான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.இப்ராஹிம் முகம்மது சோலியின் புதிய மாலைதீவு அரசாங்கம் விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.இது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் நடந்த குற்றங்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் விசாரணை தொடங்கியது போன்றதாகும்.

ஊடகவியலாளர் அஹமத் ரில்வான் அப்துக்காஹ்  கடல் நடுவில் கொல்லப்பட்டார் என்பது அந்த விசாரணைகளின் போதே தெரிய வந்தது.
ரில்வான் அப்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்திய முன்னணி  ஊடகவியலாளர் ஆவார்.  இலங்கையில் ஊடகவியலாளர் கொலை தொடர்பாக நல்லாட்சியின் போது புலனாய்வுத்துறையினர் கண்டறிந்த விடயங்களை இந்த சம்பவமும் ஒத்துள்ளது.

ரில்வானை இஸ்லாமிய போராளிகள் படுகொலை செய்ததாக யமீன் அரசாங்கம் கூறியது. இது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் செய்யப்பட்ட கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை விடுதலைப் புலிகல் செய்ததாக பழி போடப்பட்டமையை ஒத்தது.

தன் சொந்த வீட்டின் அருகில் கடத்தப்பட்ட ரில்வான் மாலைத்தீவின் சுற்றுலா மையமாக கருதப்படும் ஹுல்ஹுமாலே தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,அங்கிருந்து படகின் மூலம் கடல் நடுவுக்கு  கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.குறித்த தீவானது சுற்றுலாப் பயணிகளினால் நிரம்பியிருக்கும் நிலையில்,  அப்பகுதி  அரச பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உட்படும் பிரதேசமாகும். லசந்த விக்கிரமதுங்க  அத்திட்டிய விமானப்படை முகாமிற்கு அருகில் கொலை செய்யப்பட்டமைய இது ஒத்துள்ளது. இவ்வாறான பின்னணியில் ரில்வான் கொலை செய்யப்பட்டமை மற்றும் குறித்த தீவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டமை,  யமீன் அரசாங்கத்திற்கும் அந்த கொலைக்கும் இடையிலான தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 ற்றவாளிகள் விடுதலை:

2014 செப்டெம்பர் மாதம் ரில்வான் கொலை சம்பந்தமாக இரு நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும்,அவர்கள் இருவரும் ஒரு வார காலத்தினுள் விடுதலை செய்யப்பட்டனர்.அப்போதைய மாலை தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இது தொடர்பில்  அழுத்தம் கொடுத்ததாக  விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.இந்த  சம்பவம்  நடந்து ஓராண்டுக்கு பின்னர் குறித்த அமைச்சர் மாலைதீவின் உப ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிலைமை இலங்கையிலிருந்து வேறுபட்டதா?

யாமினுக்கு எதிராக அரச பண மோசடி தொடர்பில் சோளியின் அரசாங்கம் வந்தவுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. யமீன் அரசாங்கத்தின்  ஊழல் மோசடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே சோளியின் பிரதான தேர்தல் முன்மொழிவாக இருந்தது .2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலம் மற்றும் அதன் பின்னரான சில மாதங்கள் உங்களுக்கு  ஞாபகத்தில் வரவேண்டும்.

அந்த குற்றங்களுக்கு நீதி வழங்குவதாக சோலியின் அரசாங்கம் கூறியிருந்தாலும், ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே இலங்கையைப் போன்று,  அவர்களே யமின் அரசாங்கத்தின் ஒரு சில முக்கிய நபர்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர். இன்று ரில்வான் விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும் அக்கொலைக்கான உத்தர்வுகளை வழங்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இது இலங்கையின் நிலைமைக்கு சமமானதே.

 நியாயம்  கிடைக்காத குற்றங்கள்

மேலும் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதியின் துணை தூதரகத்தில் படுகொலைசெய்யப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி விவகாரத்தில் சட்டத்தின் மீதான ஆட்சி வித்தியாசமாக செயற்பட்டது. .2018 அக்டோபர் இரண்டாம் திகதி படுகொலை செய்யப்பட்ட கஷோகி சம்பந்தப்பட்ட வழக்கு கடந்த மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  சில சந்தேக நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அது முடிவுறுத்தப்பட்டிருந்தது.

ஜமால் கஷோகி கொலை தொடர்பில் சவுதியின் முடிக்குரிய இளவரசர் சல்மானின் நெருங்கிய கூட்டாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தன. .அவர்கள் இளவரசர் சல்மானின் சிறப்புப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாவர். .ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை  வெளியிட்ட  தகவல்களின் அடிப்படையில் இளவரசர் சல்மானின் சிரேஷ்ட  ஆலோசகரான சவுத் அல் கத்தானி   ஸ்கைப்  தொழில்நுட்பம் மூலம் ஜமால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் கொலையுடன் தொடர்புபட்டவர்களுடன் உரையாடியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதன் போது அவர்  “அந்த நாயின் தலையை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று  கூறியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை  தகவல் வெளியிட்டது. எனினும் அந்த  உத்தரவு பிறப்பித்த நபர்கள் எவரும்  தண்டிக்கப்படவில்லை.

குற்றங்களுக்கு மக்கள் ஆதரவு

இந்த பூமியில் தனக்கான உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை உண்டு என நம்புகின்ற, அதற்காக  ஒன்றினைந்து போராடுகிற பெரும் சமூகம் ஒன்று உருவாக வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு விதமான குற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.

முதலாவதாக தவறான தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடுவதும் அந்த தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பலப்படுத்த எண்ணும் நபர்கள் தம் இலக்கை அடைந்து கொள்ள அத்தகவல்களை பயன்படுத்துவதாகவும். இதன்போது மக்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலேயே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படும்.

இரண்டாவதாக தவறான தகவல்களை ஏற்றுக்கொள்ளும் மக்களிடையே,  சரியான உண்மை தகவல்களை ஆய்வு செய்யும் பத்திரிகையாளர்களை அடக்குவதற்கும் படுகொலை செய்வதற்கும் காணாமல் ஆக்குவதற்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு வசதியாக அமைகிறது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விட கைப்பற்றிய  அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எந்தவொரு  குற்றத்தையும்  செய்ய துணியும் அரசாங்கம் ஊடாக,  அரச அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை போன்ற நாடுகளில்,   பயன்படுத்தப்படும்   பொது மக்களில் பெரும்பான்மையானோர்  நேராக நிற்கும் வரை  குற்றவாளிகளுக்கு விடுபாட்டுரிமை கிடைத்துக்கொண்டே இருக்கும்.

Previous articleஊடகத்துறையானது திரிபிடகம், அல் குர்ஆன் போன்று இருந்திருக்க வேண்டும் என முன்பு நம்பினோம்
Next articleநான்கு வர்த்தமானிகள் – அறிவித்தல் மட்டுமே! அரிசி விலை கட்டுப்பாட்டின் உண்மை கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here