பொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ ‘ திவயின ‘ பத்திரிகைக்கு தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி அவர் இன்று ( 10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

அவமதிக்கும் வகையில், அல்லது விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் பேச்சாளர் தம்மிடம் தெரிவித்ததாக திவயின பத்திரிகை கடந்த 3 ஆம் திகதி வெளியிட்டிருந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு ஆரம்பித்திருந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தலைமையிலான ஆணைக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ விசாரிக்கப்பட்டுள்ளார்.

திவயின பத்திரிகைக்கு அவ்வாறான கருத்தினை தான் கூறவில்லை என இந்த விசாரணையின் போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த செய்தியின் பின்னர், அதனை திருத்துமாறு கோரி அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு எழுத்து மூலம் தான் அறிவித்ததாகவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்துள்ள ஆணைக் குழு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சார் நிஹால் தல்துவவின் குறித்த நிலைப்பாடு தொடர்பில் சத்தியக் கடதாசி ஒன்றின் ஊடாக ஆணைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அறிவுத்தல் வழங்கியுள்ளது.

முன்பதாக அண்மையில் நுகேகொடை, மிரிஹான பகுதியினூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாகனத்தில் பயணிக்கும் வேளையில், அப்பகுதியில் பால்மாவுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் ஜனாதிபதியை பார்த்து ‘ஹூ..’ வைத்து கூச்சலிடும் வீடியோ பதிவொன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததற்காக, ஆஷா தில்ருக்ஷி பெரேரா எனும் பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டே பொலிஸ் பேச்சாளர் மேற்படி எச்சரிக்கையை வெளியிட்டிருந்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here