ஜனாதிபதியை அவமதித்தால் கைது : பொலிஸ் பேச்சாளர் ; அவ்வாறு முடியாது: சட்டத்தரணிகள்

(தர்ஷிகா )
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார்.
அண்மையில் நுகேகொடை, மிரிஹான பகுதியினூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாகனத்தில் பயணிக்கும் வேளையில், அப்பகுதியில் பால்மாவுக்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் ஜனாதிபதியை பார்த்து ‘ஹூ..’ வைத்து கூச்சலிடும் வீடியோ பதிவொன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததற்காக, ஆஷா தில்ருக்ஷி பெரேரா எனும் பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டே பொலிஸ் பேச்சாளர் மேற்படி எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.
உண்மையில் இந்த விசாரணைகள் எதற்காக, ஏன் முன்னெடுக்கப்பட்டது என ஆஷா தில்ருக்ஷி பெரேரா எனும் பெண் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஊடக சந்திப்பின் ஏற்பாடு :மனித உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட ஆஷா தில்ருக்ஷி பெரோரா, ஒரு குற்றவாளியைப் போல பொலிஸ் அதிகாரிகளால் தான் அழைத்துச் செல்லப்பட்டு நடாத்தப்பட்டமை ஒரு பெண்ணாக தனக்கு மிகவும் கவலையளிப்பதாக கூறினார்.
யர் இந்த ஆஷா தில்ருக்ஷி பெரோரா? :
ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கத்தின் பெண்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளரே ஆஷா தில்ருக்ஷி பெரோரா ஆவார்.
ஆஷா தில்ருக்ஷி பெரோரா கூறுவது என்ன ? :
‘நான் வேலை செய்துகொண்டிருக்கும் போது 15 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஒரு பெண் உத்தியோகத்தரும் வந்திருந்தார்..
அவர்கள் என்னுடைய கையடக்கத் தெலைபேசியை காட்டுமாறும் தங்களுடன் வருமாறும் கூறினார்கள்.
நான் எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்டபோது, அவர்கள் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளீர்கள், இது பாராதூரமான குற்றம். அது தொடர்பில் உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
எனக்கு தற்போது வர நேரம் இல்லை, நேரம் ஒன்றை தாருங்கள்.. வருகின்றேன் என நான் கூறினேன். இல்லை அப்படி முடியாது, இப்போது எங்களுடன் வாருங்கள் எனக்கூறி அழைத்துச்சென்றனர்.
எனது பின்னால் அவர்கள் வருகைத் தந்தனர். நான் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண்ணொருவரை அழைத்துச் செல்லும் முறையிலேயே அழைத்து செல்லப்பட்டேன். நான் தப்பித்து விடுவேனோ என அவர்கள் எனக்கு பின்னால் பாதுகாப்புக்கு வருவதைப் போல் உணர்ந்தேன்.
எனக்கு இந்த சம்பவம் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களின் போது பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக எமது அமைப்பு குரல் கொடுத்துள்ளது.
இந் நிலையில் எதற்கும் பிரயோசனம் இல்லாத பழைய வீடியோ போஸ்ட்களை பகிர்ந்ததற்காக என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கையடக்கத் தொலைபேசி தகவல்கள் பிரதியெடுப்பு :
இந்த விசாரணையின் போது, எனது கையடக்கத் தெலைபேசியில் உள்ள அனைத்து விடயங்களையும் பிரதி எடுத்துக்கொண்டதுடன் எதிர்காலத்தில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டேன்.
இப்போது எனக்கு மிகவும் பயமாகவுள்ளது. இதுபோன்ற சிறிய விடயங்களுக்காக விசாரணை செய்கின்றார்கள். ஆனால் இதை விட பாரிய தவறுகளை செய்துவிட்டு இலங்கையில் எத்தனை பேர் உள்ளனர்.
இந்த சமயல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்குப் பின்னால் எவ்வளவு தவறுகள் உள்ளன. அதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. எம்மைப் போன்ற பெண்களை கைது செய்து சிறை வைக்க எந்தநோக்கில் முயற்சிக்கின்றனர் என எனக்கு புரியவில்லை.
அதுமட்டுமல்லாது பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பற்றி பேசினால் கைது செய்து சிறை வைக்கும் கலாசாரத்தை இந்த அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்கிறது.
என்னை போன்ற பெண்களின் நீதி, பாதுகாப்பு சவாலுக்கு உட்பட்டுள்ளது ‘என ஆஷா தில்ருக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் :
எவ்வாறாயினும் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ கருத்துக்களை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை தண்டிப்பதை நிறுத்துங்கள்:
எனினும் அரச உயர் அதிகாரிகளை குறிப்பாக ஜனாதிபதியை விமர்சிக்கும், அவமதிக்கும் குற்றச்சாட்டின் கீழ் பொதுமக்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு சிரேஷ்ட சட்டத்தரணி திஷ்ய வேரகொட கோரியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவின் கருத்துக்கு பதலளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக உலகில், அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதும், கேலி செய்வதும், நகைச்சுவை செய்வதும் அல்லது பொது விமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் ஏற்கத்தக்கது.
சர்வாதிகாரம் அல்லது போலி சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே அரச தலைவரையோ அல்லது பிற செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளையோ கேலி செய்யும் மக்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறோம்.
ஜனாதிபதியை விமர்சனம் செய்வது குற்றமல்ல :
ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களை கைது செய்து தண்டிக்க பொலிஸார் முயற்சிப்பது இது முதல் தடவையல்ல. அரச தலைவர்களை விமர்சிப்பது, கேலி செய்வது குற்றவியல் குற்றமல்ல. ‘என சட்டத்தரணி திஷ்ய வேரகொட சுட்டிக்காட்டியதுடன் அது தொடர்பில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள வஹலதந்திரி எதிர் பொலிஸ் மா அதிபர் ( எஸ்.சி./எப்.ஆர். /768/2009) எனும் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பையும் ஆதரமாக முன் வைத்துள்ளார்.
குற்றவியல் அவமதிப்பு என ஒரு விடயம் இல்லை :
இவ்வாறான பின்னணியில், குற்றவியல் அவமதிப்பு என்ற ஒரு விடயம் தண்டனை சட்டக்கோவையில் ஒரு பிரிவாக இருந்ததாகவும் எனினும் அது 2001 ஆம் ஆண்டில் நிக்கப்பட்டுவிட்டதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், மீடியா எல்கே யிடம் தெரிவித்தார்.
அதற்கமைய பொதுமக்களை அவ்வாறான அவமதிப்பு செயற்பாடுகளுக்கு பொலிஸார் கைது செய்யமுடியாது என்பதுடன் அது குற்றவியல் விடயமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிழையாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸாரால் நினைத்தவாறு மக்களை கைது செய்யமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக நாடொன்றில் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் ஜனாதிபதி அல்லது அரச உயர் அதிகாரிக்ளை விமர்சிப்பதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
Previous articleகாதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப்
Next articleபொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here