‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின் முழு விபரம்

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான பரிசீலனைகள் எதிர்வரும் 2022 ஜனவரி 10,12 மற்றும் 13ஆம் திகதிகளில் மீள இடம்பெறவுள்ளன. கடந்த 16 வியாழன் மற்றும் 17 வெள்ளிக் கிழமைகளில் மனுதாரர் தரப்பினரின் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் , சட்ட மா அதிபர் சார்பில் ஆட்சேபனைகளும் முன் வைக்கப்பட்டன. தற்போது பிரதிவாதிகளான அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா வாதங்களை முன் வைத்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணம், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோரின் வாதங்களும் இடம்பெறும். அதன் பின்னர் மீள விடயங்களை முன் வைக்க மனுதாரர் தரப்புக்கு அனுமதியளிக்கப்படும்.

முதல் நாள் பரிசீலனை :

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், 16 ஆம் திகதி வியாழனன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதிவாதிகள் :

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் 27 பேர், இலங்கை மின்சார சபை, வெஸ்ட் கோஸ்ட் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கொள்வனவு செய்யும் அமரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரிஸ் எனர்ஜி, நிதி,மின்சார, வலு சக்தி அமைச்சுக்களின் செயலர்கள், அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமைச்சரவை அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்காக சட்ட மா அதிபர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராகும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் ( ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா)ஆஜராகிறார். மேலும் சில பிரதிவாதிகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகிறார்.

இவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் முதல் தடவையாக டிசம்பர் 16 வியாழக் கிழமை உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

மனு விபரம் :

தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் , கெரவலப்பிட்டி யுகதநவி மின் உற்பத்தி நிலையத்தின், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளில் 40 வீதத்தை பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் நியாயமானது அல்ல என மனுதாரர்கள் தமது மனுக்கள் ஊடாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த பிரதிவாதியான அமைச்சரவை தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் எரிவாயு உற்பத்தியின் ஏகபோக உரிமையானது உரிய பரிமாற்ற நடவடிக்கையின் ஊடாக பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குகளை வழங்குவதில் முறையான விலைமனு கோரல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்த பங்குகளை கையளிக்கும் நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்புவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, எந்த ஒரு நியாயமான ஆய்வும் இன்றி உரிய பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கப் பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் இந்த மனுக்கள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்ட மா அதிபரின் ஆட்சேபனை :

மனுக்கள் மீதான பரிசீலனையின் ஆரம்பத்திலேயே, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், மனுக்கள் தொடர்பில் அடிப்படை ஆட்சேபனங்களை முன் வைப்பதாக கூறினார். அதற்கான அவகாசம் நீதிமன்றால் அவருக்கு வழங்கப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என இதன்போது வாதங்களை முன் வைத்த சட்ட மா அதிபர், அதற்கான காரணிகளையும் குறிப்பிட்டார்.

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்ய, அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள கால வரைக்கு அப்பால் சென்று இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இதன்போது சட்ட மா அதிபர் குறிப்பிட்டார்.
பிரதிவாதி பட்டியலில் உள்ளடங்கும் அமரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரிஸ் எனர்ஜி நிறுவனத்தின் பணிப்பளர் சபை உறுப்பினர்கள், மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்படாமை இம்மனுக்களின் பாரிய குறைப்பாடு என சட்ட மா அதிபர் குறிப்பிட்டார்.

அத்துடன் மின் சக்தி தொடர்பிலான விடயத்தில், கொள்முதல் செயல்முறையை பின்பற்றுவது அவசியமற்றது என ஏற்பாடுகள் உள்ளதால், இம்மனுக்கள் எந்த சட்ட தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை எனவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் வர்த்தக நடவடிக்கையொன்று மட்டுமே என சுட்டிக்காட்டிய சட்ட மா அதிபர், அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது என வாதங்களை முன்வைத்தார்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யுமாறு கோரினார்.

இதன்போது சட்ட மா அதிபரால், அமைச்சர்வை பத்திரம், ஒப்பந்தம், சட்ட மூலம் உள்ளிட்டவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதங்கள் :

சட்ட மா அதிபரின் அடிப்படை ஆட்சேபணத்தை தொடர்ந்து மனுதாரர் தரப்புக்கு வாதங்களை முன் வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து முதலில், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா வாதங்களை முன் வைத்தார்.

‘ ஊழல் அரச அதிகாரிகள் ஊடாக நோக்கத்தை அடைந்துகொள்ள அமெரிக்க தூதுவர் முயன்றுள்ளார்’ :

‘கனம் நீதியரசர்களே……இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் முதன்முதலாக 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதியே முன்வைக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் ஜூன் 22ஆம் திகதி நாட்டிலுள்ள அமெரிக்க தூதுவரால் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.இது நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்யும் நாகரீகமற்ற இராஜதந்திர தலையீடாகும்.நாட்டிலுள்ள ஊழல் அரச அதிகாரிகள்ஊடாக தங்களின் நோக்கங்களை அடைந்துக் கொள்வதற்கு இந்த கடிதம் ஊடாக அமெரிக்க தூதுவர் முதற்சித்துள்ளார் என்பது தெளிவாகிறது.
இந்த ஒப்பந்தம் ஊடாக எரிவாயு தொடர்பிலான தனியுரிமையை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுமிக பயங்கரமான நிலைமை. இதனூடாக இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும். இலங்கையை அமெரிக்காவிற்கு காட்டிக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையே இது. இதனால் தேசிய பாதுகாப்பிற்கும் மிக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இதனூடாக கொழும்பு நகருக்கும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் அண்மித்த கடற்பகுதியில் பாரிய எரிவாயு வளாகத்தினை கட்டமைக்க பிரதிவாதி அமெரிக்க நிறுவனத்திற்கு இயலுமை கிடைக்கப் பெறுகிறது.அதனூடாக வெளிநாட்டு யுத்தக் கப்பல்களுக்கு உதவிகளை செய்ய அமெரிக்க நிறுவனத்திற்கு இயலுமை ஏற்படும். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.

எரிவாயு வர்த்தகம் குறித்த முன்னனுபவம் இல்லை :

பிரதிவாதியான இந்த அமெரிக்க நிறுவனம் எரிவாயு வர்த்தகம் தொடர்பில் பிரபல்யமான நிறுவனமல்ல. தங்களுக்கு எரிவாவு வர்த்தகம் தொடர்பில் நீண்ட கால அனுபவம்,பிரபல்யம் இருப்பதாக பொய்யான விடயங்களை முன்வைத்தே இந்த அமெரிக்க நிறுவனம் அமைச்சரவையையும்,உயர் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளனர். அது ஒரு குற்றவியல் குற்றமாகும்.

இந்த பங்குகளின் உரிமை கைமாற்றம் தொடர்பில் ஒப்பந்தத்திற்கு கடந்த ஜூலை மாதம் 07ஆம் திகதியே இருதரப்பும் இணங்கியுள்ளனர்.எனினும் இந்த பங்குகளின் பெறுமதியை குறிக்கும் அரசின் பிரதான மதிப்பீட்டாளரின் அறிக்கை ஜூலை மாதம் 14ஆம் திகதியே கிடைத்துள்ளது.அரச மதிப்பீட்டாளரின் அறிக்கை கிடைக்கும் முன்னரே எப்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம்.அவ்வாறாயின் குறித்த பங்குகளின் உண்மை பெறுமதி சரியான முறையில் மதிப்பிடப்படாத நிலையிலேயே அல்லது உண்மை பெறுமதியை அறியாத நிலையிலேயே அரசாங்கம் இந்த பங்கு உரிமை கைமாற்றத்தை செய்துள்ளது.’ என வாதிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலையீடு :

இதன்போது பிரதிவாதிகள் தரப்பிற்காக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா முன்வைத்த பங்கு மதிப்பீடு தொடர்பிலான விடயத்தை மறுத்துரைத்தார்.பங்கு உரிமை கைமாற்றத்திற்கு முன்பதாக உரிய முறையில் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தொடர்ந்தும் மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா இந்த ஒப்பந்தம் ஊடாக அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறும் அதனால் அவ்வொப்பந்தத்தை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளிக்குமாறும் கோரினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் :

இதனையடுத்து மற்றொரு அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்,எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வாதங்களை முன்வைத்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய ஒப்பந்தமானது அவசர அவசரமாக செய்யப்பட்ட தூரநோக்கற்ற ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.அடிப்படை ஆட்சேபனத்தின் போது சட்டமா அதிபர் இந்த ஒப்பந்தத்தை ஒரு வர்த்தக நடவடிக்கை என குறிப்பிட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட அவர் இந்த கொடுக்கல் வாங்களில் அரசு விலைமனு முறைமையை கடைப்பிடிப்பதில் இருந்து முற்றாக விலகி செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

விமல், கம்மன்பில, வாசுதேவ அமைச்சுப் பதவிகளில் இருந்து ஏன் நீக்கப்படவில்லை :

இதன் போது தொடர்ந்து மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அமைச்சரவை அமைச்சர்களான உதயகம்மன்பில,விமல் வீரவன்ச ,வாசுதேச நாணயகக்கார ஆகியோர் மனுதாரர்களுக்கு சார்பாக சத்திய கடதாசிகளை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதனால் பிதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கண்டிப்பாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ,எனினும் இதுவரை அது நடக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிய எல்லா சந்தர்ப்பங்களிலும் அவ்வாறானவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.1947ஆம் ஆண்டு அரசின் வரவு-செலவு திட்டத்தை விமர்சித்த அமைச்சர் எம்.டி.எச் ஜயவர்தன அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் கொள்கையை விமர்சித்த லலில் அத்துலத்முதலி,காமினி திஸாநாயக்க,மற்றும் ஜி.எம் பிரேமசந்திர ஆகியோர் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அரசியல் வரலாறு உள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும் இம்முறை யுகதனவி மின்நிலைய பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாற்றப்படுவது தொடர்பில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிய மூன்று அமைச்சர்கள் நீதிமன்றிற்கு சத்திய கடதாசி கையளித்துள்ள நிலையிலும் எந்த பதவி நீக்கங்களும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் வாதங்கள் நிறைவடைந்ததும் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை 17 ஆம் திகதி வெள்ளிக் கிழமை முற்பகல் 10.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

2 ஆம் நாள் பரிசீலனை :

மனுமீதான பரிசீலனைகள் 2 ஆம் நாள் ( 17 ஆம் திகதி) ஆரம்பிக்கப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆதரித்து அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் விஜயகுணவர்தன வாதங்களை முன்வைத்தார்.மனுவுடன் தொடர்புடைய ஒப்பந்தம் ஊடாக தேசிய வலுசக்தி கொள்கை மீறப்பட்டுள்ளதாக அவர் தனது வாதத்தின் ஊடாக குற்றஞ்சுமத்தினார்.

எரிவாயு தொடர்பிலான தேசிய கொள்கைக்கு முரண் :

‘கனம் நீதியரசர்களே …..இந்த ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு அரசு தயாரித்த இயற்கை எரிவாயு தொடர்பிலான தேசிய கொள்கைக்கு முரணானதாகும்.அந்த கொள்கைக்கமைய எரிவாயு தொடர்பிலான ஒப்பந்தம் தூரநோக்குடன் கூடியதாக அமைய வேண்டும் என்பதுடன் உரிய விலைமனு நடவடிக்கைகளுக்கு அமையவும் இடம்பெற வேண்டும்.எனினும் இந்த ஒப்பந்தம் உரிய விலைமனு நடைமுறைகளை பின்பற்றாது கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு கூட போதிய தெளிவில்லை.

இந்த பங்கு உரிமை கைமாற்றத்திற்கு முன்னர் அரசு அவற்றின் பெறுமதி தொடர்பில் உரிய பெறுமதி மதிப்பீடுகளை முன்னெடுக்கவில்லை.அமைச்சரவையும் அது தொடர்பில் உரிய அவதானத்தை செலுத்தவில்லை.அமைச்சரவை இந்த ஒப்பந்தம் தொடர்பில் சரியாக எதனையும் அறியாமலேயே தீர்மானத்திற்கு வந்துள்ளது.அதனூடாக இந்நாட்டு மக்களுக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அமைச்சரவை எப்போதும் மக்கள் சார்பானதாக செயற்பட வேண்டும்.எனினும் இந்த கொடுக்கல் வாங்கலின் போது அமைச்சரவை அந்த பொறுப்பை மீறி செயற்ப்பட்டுள்ளது.அமைச்சரவை எப்போதும் பொதுமக்கள் நலனுக்காக செயற்பட வேண்டுமேயன்றி பிறிதொருவரின் நலனுக்காக செயற்பட கூடாது.

இந்த ஒப்பந்தம் ஊடாக எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை ஐந்து வருடங்களுக்கு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது பிரச்சினைக்குரியது.விலைமனுகோரல் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நாட்டின் எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது.

இரு வருடங்களுக்கு ஒப்பந்தத்தை வெளிப்படுத்த முடியாது :

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் வரை அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க இலங்கை அரசாங்கமும்,பிரதிவாதி அமெரிக்க நிறுவனமும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.இது மிக பயங்கரமான நிலைமை.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை மறைக்க முடியாது.அவை தொடர்பில் பொது மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றம் அதனை அறிய வேண்டும்.இந்த ஒப்பந்தம் ஊடாக குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு பாரிய வரிச்சலுகைகளை வழங்க அரசு இணங்கியுள்ளது.இதனூடாக பொது மக்களின வரிப்பணம் பாரியளவில் விரயமாகும்.

அமைச்சரவை செயலரின் கடிதம் :

இந்த ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை என மூன்று அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.அமைச்சரவையின் செயலாளர் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றில் ‘இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக கருதி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகிறது’என குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரவை செயலாளரின் இந்த அறிவித்தல் ஊடாக குறித்த ஒப்பந்தம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக அல்லது அவ்வொப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக எந்த உறுதியான விடயங்களும் குறிப்பிடப்படவில்லை.அதனால் இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை உண்மையிலேயே அனுமதி வழங்கியதா?அது தொடர்பிலான விடயங்கள் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதா ? என்பது தொடர்பில் நியாயமான சந்தேகம் எழுகிறது’என குறிப்பிட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும :

இதனையடுத்து அனைத்து நிறுவன சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட மின்சக்தி தொழிற்சங்கங்களுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும விடயங்களை முன்வைத்தார்.அரசாங்கம் தேசிய வலுசக்தி கொள்கைகளை மீறி இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை செயலர் கூறுவது பொய்யா?

‘கனம் நீதியரசர்களே…..வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவது மிக பாரதூரமானது என கருத்து வெளியிட்டிருந்தார்.அதனூடாக இலாபமான விலைகளின் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதாகவும் அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.அதேபோல் யுகதனவி பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு கைமாற்றுவது தொடர்பாக ஆராய்வதற்க நிதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு வலுசக்தி அமைச்சின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் தனது அவதானிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்.அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இந்த ஒப்பந்தம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என கருத்து வெளியிட்டுள்ளார்.அவ்வாறாயின் இந்த ஒப்பந்தம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது அல்லது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது என அமைச்சரவை செயலாளர் நீதிமன்றில் முன்வைத்துள்ள விடயங்கள் பொய்யானதா ?என சந்தேகம் எழுகிறது.அமைச்சர் விமல் வீரவன்சவும் இந்த ஒப்பந்தம் மக்களாணையை மீறியது என குறிப்பிட்டுள்ளார்’என சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும குறிப்பிட்டார்.

விமல், கம்மன்பில, வாசுதேவவின் சத்தியக் கடதாசிக்கு சட்ட மா அதிபர் ஆட்சேபனை :

அதன்பின்னர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்கும் அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா மன்றில் விடயங்களை முன்வைக்க தயாரானார்.இதன்போது குறுக்கீடு செய்த சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்னம் இந்த மூன்று அமைச்சர்களும் உயர்நீதிமன்றிற்கு முன்வைத்துள்ள சத்திய கடதாசிகள் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

அரசியலமைப்பை மீறும் செயல் :

‘கனம் நீதியரசர்களே….இந்த மூன்று அமைச்சர்களும் முன்வைத்துள்ள சத்திய கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.அரசியலமைப்பின் பிரகாரம் இவர்கள் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது தொடர்பில் பிணைந்துள்ளனர்.அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியபிரமாணம் செய்திருக்கும் இந்த அமைச்சர்கள் அரசியலமைப்பை மீறி இந்த சத்தியகடதாசிகளை முன்வைத்துள்ளனர்’ என சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்னம் குறிப்பிட்டார்.

இதன்போது இந்த ஆட்சேபனைகளை உங்களுக்கான வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பத்தில் முன்வைக்க முடியும் என நீதியரசர்கள் குழாம் சட்டமா அதிபருக்கு அறிவித்தது.அதன் பின்னர் அமைச்சர்களான விமல்,வாசு,கம்மன்பில சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தனது தரப்பு விடயங்களை மன்றில் முன்வைக்க நீதியரசர்கள் குழாம் அனுமதித்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா :

இதனையடுத்து மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தனது சேவை பெறுநர்களான இந்த மூன்று அமைச்சர்களும் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பில் திறந்த வெளியில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்திருந்ததாக தெரிவித்தார்.எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் பிரசித்தமாக உண்மை நிலைமையை சமூகத்திற்கு தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படவில்லை என தனது சேவைபெறுநர்களான அமைச்சர்கள் குறிப்பிடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா குறிப்பிட்டார்.

செப்டம்பர் 6 அமைச்சரவை கூட்டம் :

‘ கனம் நீதியரசர்களே….கடந்த செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் வீடியோ தொழினுட்ப முறைமை ஊடாகவே இடம்பெற்றது.அந்த கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை.அவ்வாறானதொரு அமைச்சரவை பத்திரத்தை எனது சேவை பெறுநர்கள் மூவரும் காணவே இல்லை.அதன் பிரதிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. அக்கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பில் எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப்படவுமில்லை.

நிறைவேற்றப்படாத அல்லது அனுமதியளிக்கப்படாத இந்த அமைச்சரவை யோசனை தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்துரையாடல் ஒன்றினை நிதியமைச்சரிடம் கோரியிருந்தார்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறி உயர்நீதிமன்றில் சத்தியக்கடதாசிகளை முன்வைத்தமை தொடர்பில் எனது சேவைபெறுநர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் இந்த நீதிமன்றில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து நினைத்தவாறு நீக்க முடியாது :

எனது சேவை பெறுநர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தே அரசாங்கத்துடன் தொடர்பு பட்டுள்ளனர்.அக்கட்சிகள் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கு அமைய அமைச்சு பதவிகளில் இருந்து அவர்களை நினைத்தவாறு நீக்க முடியாது ‘என ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா குறிப்பிட்டார்.

அதன்பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவாவின் மேலதிக வாதங்களை அடுத்த தவணை வரை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

Previous article3 ஆவது பிணை முறி மோசாடி : 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து ரவி , அர்ஜுன மகேந்ரன் உட்பட 10 பேர் விடுதலை
Next articleகாதி நீதிமன்றங்களை நீக்கினால் அதை விட சிறந்ததொரு முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here