18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு ஹிஜாஸுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை செய்யப்பட்ட சுல்தான்; நீதிவானிடம் முறைப்பாடு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்கக் கோரி தொடர்ச்சியாக 18 மாதங்களாக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயிடம் திறந்த மன்றில் முறையிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், கோட்டை நீதிமன்றின் விசாரணையின் கீழ் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டல் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்குக் கோவையின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரே நீதிவானிடம் இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.
யார் அவர்?:
‘ சேவ் த பேர்ள்’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் கடமையாற்றிவந்த நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சாவுல் ஹமீட் மொஹம்மட் சுல்தான் எனும் சந்தேக நபரே இதனை தெரிவித்துள்ளார்.
கைதும் தடுப்புக் காவலும் :
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து குறித்த நபர், கடந்த 2020 மே 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுது முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்ளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தடுப்புக் காவல் உத்தரவில் கைதி ஒருவரை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்க முடியுமான உச்ச வரம்பு 18 மாதங்களகும். அதன்படி அவர் தொடர்ந்து 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27 ஆம் திகதி கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்ட்டார்.
சட்டத்தரணிகள் ஆஜர் :
இதன்போது, சந்தேக நபருக்காக சட்டத்தரணிகளான நிரான் அங்கிடெல், கனேஷ யோகன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு மன்றில் ஆஜராகியுள்ளது.
திறந்த மன்றில் பேசிய சுல்தான் :
இதன்போதே திறந்த மன்றில், சந்தேக நபரான சுல்தான் நீதிவானிடம் தன் மீதான சித்திரவதைகள் தொடர்பில் முறையிட்டுள்ளார்.
கடந்த 18 மாதங்களில் , சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்கக் கோரி தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அதனால் தன்னால் தற்போது நிமிர்ந்து நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதை செய்தோரையும் பெயரிட்ட சுல்தான்:
தன்னை தொடர்ச்சியாக சித்திரவதை செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பெயர்களையும் அவர் நீதிவானிடம் கூறியுள்ளார்.
நீதிவானின் விசாரணை உத்தரவு :
இதனையடுத்து, சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றினை முன்னெடுத்து மன்றுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில், குறித்த சந்தேக நபருக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது சேவை பெறுநர் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட்டமைக்கான எந்த தகவலும் பொலிசாரின் அறிக்கையில் இல்லாமையால் அவரை விடுவிக்க வேண்டும் என கோரினர்.
அத்துடன் கடந்த 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் வழக்கொன்றினை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பதைக் கூட அதிகாரிகள் கூறாமல் இருப்பது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா? :
இந் நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, சந்தேக நபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறதா இல்லையா என்பதை சட்ட மா அதிபரிடமும் கலந்தாலோசித்த பின்னர் மன்றுக்கு அறிவிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கு முன்னரும் ஹிஜாஸின் பெயரை சொல்லக் கோரி சித்திரவதைகள் :
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, புத்தளம் – கரை தீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் ஆசிரியர்களாக செயற்பட்டதாக கூறப்படும் 26,27 வயதுகளை உடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகியோர் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் கடந்த மே 31 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அவர்கள் சார்பில் ஆஜராகியிருந்தார். அவ்விருவரும் ஹிஜாஸுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்க வற்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பில் இரகசிய வாக்கு மூலம் வழங்கவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கோரியிருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதித்து வாக்கு மூலமும் பெற்றிருந்தது.
அத்துடன் அவ்விருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார். அம்மனுக்கள் பரிசீலனையின் கீழ் உள்ளன.
மூன்று சிறுவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் :
பெற்றோரின் பொறுப்பில் இருந்த மூன்று சிறுவர்களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்சுறுத்தி ஆவணங்களில் பலாத்காரமாக கையெழுத்து வாங்கியதாக கூறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று கடந்த 2020 மே மாத ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த மூன்று சிறுவர்களையும் மனுதாரர்களாக கொண்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அவர்களது பெற்றோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மனுவானது சட்டத்தரணி பிரபுத்திகா திசேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன ( அப்போது) மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கரை தீவு அல் சுஹைரியா அரபுக் கலூரியில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதா, அங்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதா என சி.ஐ.டி. எனக் கூறிக் கொண்ட குழுவினர் தம்மிடம் விசாரணை நடாத்தியதாகவும், தாம் கல்வி கற்ற காலப்பகுதியில் அப்படி ஒன்றும் இடம்பெறவில்லை என பதிலளித்த போது, தம்மை அச்சுறுத்தி பலாத்காரமாக அவர்கள் சில தாள்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு 15 ஐ சேர்ந்த சிறுவர்கள் மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அரச்நியலமைப்பின் 11, 12(2), 13(1), 13(2), 14(1), (2) ஆம் சரத்துக்கள் ஊடாக வழ்னக்கப்ப்ட்டுள்ள அடிப்படை உரிமைகள் பிரதிவாதிகளின் செயற்பாடு காரணமாக மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மனுதாரர்களான தாம் 2013 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து சில வருடங்களில் பொருளாதார சிக்கல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் கைவிட்டதாகவும், இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மட்டக்குள் ஜும் ஆ பள்ளிவசல் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, எழிய பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சுஹைரியா அரபுக் கல்லூரியில் சேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கு அரபு கற்கைகளுக்கு மேலதிகமாக கணிதம், ஆங்கிலம், கணினி ஆகியவற்றையும் தாம் கற்றதாகவும் எனினும் ஒரு போதும் ஆயுத பயிற்சிகளையோ, அடிப்படைவாத போதனைகளோ தமக்கு வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த 2020 ஏப்ரல் 26 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் தமது வீட்டுக்கு வந்த சி.ஐ.டி. என கூறிக்கொண்ட குழுவினர், சில புகைப்படங்களைக் காட்டி, அவர்கள் தாம் கற்ற அரபுக் கல்லூரிக்கு வந்து அடிப்படை வாதத்தை போதித்து ஆயுத பயிற்சி அளித்ததாக கூற வற்புறுத்தியதாக மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்கடடியுள்ளனர்.
பெற்றோர் உள்ளிட்ட எவரும் இல்லாத இடத்தில் வைத்து அச்சுறுத்தி விசாரிக்கப்பட்டு பலாத்காரமாக கையெழுத்தும் பெறப்பட்டுளள சூழலில் குறித்த சிறுவர்கள் உள ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே மனுதாரர்கள் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் கூறபப்டும் சம்பவமும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்ட விடயதானத்துடன் தொடர்புபட்ட சம்பவமாகும்.
சி.ஐ.டி.யின் வற்புறுத்தல் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதிமன்றில் தெரிவித்தது :
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான புத்தளம் மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த ஜூன் 11 ஆம் திகதி முதல் தடவையாக விசாரணைக்கு வந்திருந்தது.
அப்போது ஹிஜாஸுக்காக மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள பின் வருமாறு நீதிபதி குமாரி அபேரத்னவிடம் குறிப்பிட்டிருந்தார்.
‘ தற்போதும் விளக்கமறியலில் உள்ள பிரதிவாதிகளுக்கு குறிப்பாக வழக்கின் முதல் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, இவ்வழக்குடன் தொடர்புபடாத எனினும் எதிர்காலத்தில் இவ்வழக்கின் சாட்சியாளர்களாக மாற வாய்ப்புள்ள நபர்கள் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அது குறித்து உயர் நீதிமன்றிலும் மனு தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை உடன் ஆரம்பிக்கவும் அவரை மன்றுக்கு அழைத்து குற்றப் பத்திரிகையை கையளிக்கவும் கோருகின்றேன்.’ என தெரிவித்திருந்தார்.
ஹிஜாஸின் வழக்கு:
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கு தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்காக திகதி குறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி இவ்வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Previous articleகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிறிது சிறிதாய் சிதைந்து போன பூ வணிகம்!
Next articleகரன்னாகொடவுக்கு எதிரான குற்ற பகிர்வு பத்திரத்தை வாபஸ் பெறக் காரணமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் இரகசிய அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here