கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிறிது சிறிதாய் சிதைந்து போன பூ வணிகம்!

கொவிட்- 19 வைரஸ் தொற்றுப் பரவலும், நாம் தற்போது கடந்துகொண்டிருக்கும் அனுபவங்களும் யாருமே எதிர்பார்த்திராதவை
மிக மிக அதீதமாய் இயங்கிக்கொண்டிருந்த உலகத்துக்கு சற்று ஓய்வுகிடைத்ததும் இந்த கொரோனாவால் தான்.
நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட தீவிர நிலையாலும் அடிக்கடி போடப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறையாலும் அத்தனை தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டன.
கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு பொருளாதாரத்தை நேரடியாக பாதித்தது மட்டுமல்லாது, வியாபாரங்களைச் சார்ந்து இருக்கிற எத்தனையோ வியாபாரங்களுக்கும், தினக்கூலி பெறுவோரும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்ட கொரோனாத் தொற்றின் தீவிரத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால்  மிக மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் பூ வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் தான் என்பதை நாம் அறிய முடிந்தது.
பூ வணிகத்தில் ஈடுபடும் பலர் இந்த கொரோனாத் தொற்றினால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமில்லாது பூக்கள் பயிரிடப்படும் விவசாயிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் கால தனிமைப்படுத்தல் ஊரடங்கில் பூக்களின் பயன்பாடு இல்லாது போனதால் அதில் ஈடுபட்ட பல நிலைகளில் உள்ளவர்களுக்கும்  முற்றிலும் வருவாய் நின்று போனது.
இந்தளவு ஆனதற்கு காரணம் மலர்களை,  பூமாலைகளையும் பயன்படுத்தும் ஆலயங்களும், விழா மண்டபங்களும் மூடப்பட்டது மட்டுமின்றி மக்கள் வெளியில் செல்லாததால் வீடுகளுக்கு கூட பூ வாங்க தேவையின்றி போனதும் தான் முக்கிய காரணம்.
பூக்களின் தேவையை அதிகமாகக் கொண்டிருந்த ஆலயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது திறக்கப்பட்டுள்ளதாலும், விழா மண்டபங்கள் ஒரு சில விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையாலும் கூடவே மக்கள் நடமாட்டமும் இயல்பாகி வருவதாலும் இவர்களின் வாழ்வு இயல்புக்கு திரும்புமா என பார்க்கலாம்.
பூ வியாபாரம் என்பது பலதரப்பட்டவர்களை உள்ளடக்கிய ஒரு சங்கிலித்தொடராகும்.  பூ உற்பத்தி செய்பவர்கள், மொத்த வியாபாரிகள், கடைகாரர்கள், நடமாடும் வியாபாரிகள் மற்றும் கடைகாரர்களுக்கு பூ கட்டித் தருபவர்கள் என்று பெரும் எண்ணிக்கையானோர் பின்னணியில் உள்ளனர்.
குறிப்பாக சொன்னால் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஏராளமானோர் இந்தத் தொழில் சார்ந்து இருப்பதாகவும் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருவதாகவும் நவா எனும் பூ வியாபாரி குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள கோயிலுக்கு முன்பாக பூ தொடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களே அதிகம்.
அங்கு  எப்போதும் சிறு சிறு பெட்டிக்களைப்போல் அமைத்;து அவர்கள் பூ கட்டிக் கொண்டிருப்பதை காணமுடியும்.
அன்றாடம் பூ கட்டுவதில் கிடைக்கும் அந்த சிறிய வருமானத்தில்தான் அவர்களின் குடும்பத்தின் நகர்வு இருக்கின்றது.
ஒவ்வொரு பூக்கடைக்காரரும் கிட்டத்தட்ட 2, 3 குடும்பங்களுக்கு இவ்வாறான  பூ தொடுக்கும் வேலை வாய்ப்பு அளித்திருப்பதை அறிய முடிந்தது.
அப்படிப்பட்ட இவர்களின் வாழ்வு கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பால் வருவாயின்றி போனதால் பெரும் சவாலாகிப் போனது.
கொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கினால் மிகவும் அடிப்படையான தேவைகளுக்கே இவர்கள் அல்லாடினர்கள், கிடைத்த கூலிவேலைகளுக்கு சிலர் செல்ல ஆரம்பித்தனர்.
ஆனால், அங்கும் வேலைகளுக்கான தடை இருந்த சூழலால் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது.
எனவே, கடன் வாங்கி குடும்பத்தை நகர்த்துவதைத் தவிர வேறு வழி ஒன்றும் அவர்களால் காண முடியவில்லை.
எதிர்கால தேவைகளை விட தற்போது உணவுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். கொரோனா காலங்களில் பூந்தோட்டக்காரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உரத்தட்டுப்பாடு, விவசாயத்துக்கான மருந்து தட்டுப்பாடுகளினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாது, அவர்களுக்கான நிவாரணங்களும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறவில்லை.
கொரோனாவுக்கு முன்னைய காலப்பகுதியில் நாளொன்றுக்கு 10 கிலோ வகையில் பூக்கள் வியாபாராமாகும்.ஆனால் தற்போது அதாவது கொரோனா தளர்வுக்கு பின்னர் 25 சதவீதமாகத்தான் பூ வியாபாரம் இடம்பெறுவதாக பூ மாலை தொடுப்பவர் குறிப்பிடுகின்றார்.
அதிகளவான பூக்கள் புத்தளம் பகுதியில் அனுராதபுரம், பதுளை போன்ற பகுதிகளிலும், ஒவ்வொரு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சாமி ஊர்வலம், மலர் அலங்காரம் என களைகட்டும் காலம் இது. அதுபோன்றே அதைத் தொடர்ந்து முகூர்த்த காலம் வரும். மண்டபங்களில் பிரமாண்டமான மலர் அலங்காரம் இடம்பெறும்.
ஆனால், இந்த ஆண்டு இவை அத்தனையும் மொத்தமாய் இல்லாமல் போனது. ஆகவே, மேலதிக வருவாய் பார்ப்பவர்கள் உட்பட அன்றாட வருவாய் தேடுவோரும் அல்லல்பட்டுத் தான் போயினர்
பூந்தோட்டம் செய்கின்றவர் முதல் அதை கொழும்புக்கு கொண்டு சேர்ப்பதிலிந்து பல்வேறு கட்டமைப்புள்ளது.
முக்கியமாக வாகன போக்குவரத்து. ஊரடங்கு காலப்பகுதியில் பஸ் சேவைகள் முடங்கியிருந்ததால் தனிப்பட்ட முறையில் வாகனங்களில் கொள்வனவும் செய்யும் போது அதிகமான தொகை அறவிடப்பட்டது.
பூ, மாலை, மலரலங்காரம் என மொத்த சில்லறை வியாபாரம் சார்ந்த இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்கும் போது அதனை உற்பத்தி செய்பவர்கள் எந்த மாதிரியான அவலத்தை சந்தித்திருப்பார்கள்?
தற்போதைய ஊரடங்கு தளர்வில் கோயில்களைத் திறப்பதற்கும் மற்றும் பிற விழாக்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் இவர்களின் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
ஆலயங்கள் மற்றும் விழாக்களின் போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரே கலந்துகொள்ள முடியும் எனும் போது அதிகபட்ச  ஆலயங்களுக்கு கொண்டு செல்ல பூக்கள், மாலைகள் வாங்குவதில்லை.
மண்டபங்களில் நடைபெறும் விழாக்களிலும் குறிப்பிட்ட  எண்ணிக்கையினரே கலந்து கொள்ளலாமென்ற விதியால் யாரும் மண்டபங்களை நாடுவதில்லை பதிலாக அவரவர் வீட்டின் மொட்டை மாடிகளையோ சிறிய அரங்குகளையோ பயன்படுத்துவதால் பூக்களின் தேவை அதிகமாக குறைந்துள்ளது.
பூக்கள் தட்டுப்பாடு
கொரோனா கால ஊரடங்கின் போது, பூ உற்பத்தியில் ஈடுபடும் பூந்தோட்டக்காரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உரத்தட்டுப்பாட்டுக் காரணமாக பூ மர உற்பத்தியில் ஈடுபடவில்லை. அத்துடன் வேறு வேறு வியாபாரங்களுக்கு சென்றுவிட்டார்கள்.
எனினும்  அவர்கள் மீண்டும் பூ உற்பத்தி செய்தாலும் அது மீண்டும் உருவாகுவதற்கு 8 மாத காலங்கள் ஆகும்.
பூ பூப்பதற்கு 4 மாதங்களாகும். இதற்கிடையில் மழை போன்ற சீரற்ற காலநிலையால் இன்னும் பூ உற்பத்தி காலதாமதமாகும் போது பூ வணிகத்தில் ஈடுபடும் அத்தனை தரப்பினரும் பாதிக்கப்படுகின்றார்கள்.
பூக்கடை சங்கம்.
கொழும்பில் அதிகமாக பூ வியாபாரமாகும் கொச்சிக்கடை மற்றும் செட்டத்தெரு போன்ற பகுதிகளில் பூக்கடை சங்கம் என்று இயங்குகிறது.
இந்த சங்கத்தின் ஊடாக பூ வணிகளத்தில் ஈடுபடுபவர்களில் ஒருவர் இறந்தால் ஒரு சிறு நிதி இறந்த நபரின் குடும்பத்துக்காக ஒதுக்கப்படுகிறது. எனினும் தற்போது நடைமுறையில் இல்லை.
பூக்கள் என்றால் அழகு, புதுமை வண்ணமயம் என பல்வேறு விதத்தில் பூக்களை ரசித்தாலும், ஒரு பூ உற்பத்தியாகுவதிலிருந்து, இறுதி மரணத்தின் போது சென்றடையும் வரை பல்வேறு தரப்பினரின் உழைப்பும் வேதனையும் உள்ளதெனக் கூறலாம்.
சமூகத்தில் உள்ள பலதரப்பட்டோர் பலவிதமான பாதிப்புகளையும் சவால்களையும் சந்தித்து வருவது குறித்து பல்வேறு அனுபவப் பகிர்வுகளை நாம் கேட்டிருப்போம்.
இந்த பெருந்தொற்று அனைவருக்கும் ஏதோ ஒன்றை அறிவிக்க வந்ததாகவே கருதப்படுகிறது. எல்லோருமே இயல்பாகும் ஒர் காலத்தை எதிர்நோக்குவதே இப்போதைய எதிபார்ப்பாக இருக்கிறது.
எனினும் அது புதிய இயல்பாக கண்டுணரப்பட்ட புரிந்துணர்வுள்ள மனிதர்களால் நிகழப் போவதே எனும் உண்மையும் உறைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here