யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இற்றைக்கு ஒரு தசாப்தகாலங்களுக்கும் மேலாகின்றது. யுத்தம் ஓய்ந்தாலும் இன்னும் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்தவகையில் காணாமல் போனோருக்கான நீதியை நிலைநாட்டுதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வாழ்வாதார பிரச்சினைகள், சமூக கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் இன்றும் கூட யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள் பல முரண்பாடுகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர்.

ஆட்சி மாறினாலும் வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் கணவன்மாரை இழந்த இளம் பெண்களின் வாழ்க்கை வறுமையின் பிடிக்குள் அகப்பட்ட அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் வடக்கு- கிழக்கில் மட்டும் 19 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என குறிப்பிடுகிறார்.

அதேபோல இன்று வடக்கு- கிழக்கு பகுதிகளில், 89,000 விதவைப் பெண்கள் வாழ்கின்றனர். அதில் 49,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  40 வயதுக்கும் குறைந்த பெண்கள் 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவியாக வாழ்க்கை நடாத்துகின்றனர்.

இதேவேளை வடமாகாண மகளிர் விவகார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின்படி கடந்தாண்டு வடக்கில் மட்டும் 7000 இற்கும் அதிகமான கணவனை இழந்த அதிகமான பெண்கள் வாழ்வாதார சிரமங்களுக்கு மத்தியில் குடும்பம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள் வடக்கிலே அதிகமாகக் காணப்படுவதுடன்  இவர்கள் அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல இன்னங்களை பொதுவெளியில் எடுத்துக்கூறினாலும் இவர்களுக்கான சரியானதொரு வேலைத்திட்டம் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதாக வடக்கில் உள்ள சமூக செயற்பாட்டாளரான அருட் சகோதரி ரசிகா பீரிஸ் கூறுகிறார்.

அதனால் இந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு வடக்கில் நாதியற்ற இந்தப் பெண்கள் விபசார விடுதிகள் நோக்கிக் கொண்டுச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் நுன்கடன்களாலும் கடன்தொகையை மீள செலுத்த முடியாமலும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எனினும் தற்போது வடக்கு மாகாணத்தில் அநேக பெண்கள் தங்களது கணவர்மாரை இழந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தங்கள் கணவன்மார் எங்கு இருக்கின்றார்கள் என்பதையும் அறியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் தங்கள் குழந்தைகளையும் முதியவர்களான பெற்றோர்களை பராமரிக்க வேண்டி கடமையையும் அவர்கள் கொண்டுள்ளார்கள்.

எனவே அவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித்தரும் முறையையும் கட்டமைக்க ஒரு வலுவான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இவர்களுக்காக உள, சமூக கட்டமைப்புக்களை மாற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையே என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொருத்தளவில் அவர்கள் வருமானத்திற்காக பாடுபடும் நிலைமையே இன்னமும்; காணப்படுகிறது.

வடக்கில் போரின் பின்பான நிலையில் தொழில்களுக்கான சந்தர்ப்பங்கள் கட்டியமைக்கப்படவில்லை. மாறாக விரிந்த நுகர்வுக் கலாசாரம் ஒன்றே பாதிக்கப்பட்டவர்களின் முன் தென்படுகின்றது.

இந்த இடத்தில் பெண் தலைமையுள்ள குடும்பங்கள் வருமான மீட்டத்திற்காக எங்கே போவது என்ற நிலையில் சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வங்கிகளாலும் வேறு நிறுவனங்களினாலும் பெண்தலைமையுள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் கடன்கள் வழங்கப்பட்டன.

எனினும், பாதிக்கப்பட்ட பெண்களிடத்தில் தொழில் முயற்சிகளைக் கொண்டு நடத்துவதற்கான அறிவூட்டல்கள் வழங்கப்படவில்லை. எனவே, இம் முயற்சிகளும் பெண் தலைமையுள்ளவர்களுக்கு வருவாயைக் கொடுக்கவில்லை. முதலில் இழப்புக்களையே கொடுத்தன எனவும் அவர் கூறுகின்றார்.

கடன்களை அளித்த நிறுவனங்களின் அறவீட்டாளர்கள் கடன்களை செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரினர் எனவும் பலக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வறுமை அவர்களை விபசாரத்தை நோக்கியோ அல்லது தற்கொலையை நோக்கியோ விரும்பியோ விரும்பாமலோ தள்ளுகின்றது என்று அருட்சகோதரி குறிப்பிடுகிறார்.

கணவனை இழந்த பெண்ணின் கதை

குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிடப்படாத கணவனை இழந்த பெண்ணொருவர் கூறுகிறார்.

உள்நாட்டில் ஏற்பட்ட மிக பயங்கர யுத்தத்தின் போது இள வயதிலேயே தனது கணவனை இழந்தாகவும் தனது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தாங்கள் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் காணிகளை விற்று தங்களின் பிள்ளைகளை படிபிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னும் வரைக்கும் வீட்டையும் வீட்டில் இருக்கும் இளம் பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டும். சரியான பாதுகாப்பில்லாத வீட்டிலும் வாழ்கின்றதாக அவர் கூறுகிறார்.

யுத்தத்தினால் கணவனை இழந்த பெணகள் சமூக பொருளாதார, உளவியல் பண்பாட்டு, நிறுவனக்கட்டடைப்பு ரீதியாக சமூகப்பாதுகாப்பு, குறித்து பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்கொள்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கணவனை இழந்த பெண்கள் வறுமை மட்டுமில்லாது அவர்களின் பாதுகாப்பதற்கான தேவை முக்கியமானதொன்றாக உணரப்பட்டு அவர்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பரிந்துரைகள் சமூக மட்டத்திலும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனக் கட்டமைப்பு தொடர்பாகவும் வலுவூட்டப்படவேண்டும்.

அரச தரப்பு

பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதார தேவைகளுக்காக 245 தொழில் முறைமைகளை  உருவாக்கியிருப்பதாக மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதில் கால்நடை வளர்ப்பு,  கைவினைப்பொருட்கள் தயாரித்தால், மட்பாண்டம், பொதியிடல், மெழுகுதிரி, உணவு தாயாரித்தல் (அம்மாச்சி உணவகம்) போன்ற தொழில்கள் கடந்த வருடத்தில் உருவாக்கப்பட்டன.

அதேபோல பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்காக கடந்த காலத்தில்  பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டாலும் வடமாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே வாழ்வாதார உதவிகளுக்காக ஒதுக்கப்பட்டன

அதுமட்டுமில்லாது தற்போதைய காலத்தில் முழுமையான ஆளணி இல்லை என்பதுடன் வடக்கில் விசேடமாக சமூக அமைப்புக்கள் மூலம் உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு அமைப்புகளின் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கின்றன, மற்றயவை தோல்விகண்டுள்ளன.

அதேநேரம் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதுபோல பிரதேச செயலகங்கள், மாகாண மட்டங்களின் மூலம் வேலைத்திட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதேவேளை இந்தவேலைத் திட்டத்தினூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைந்துள்ளார்கள் எனவும் அவர் மேலும், சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுபோல ”தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம் எனவும் 600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம”; என அண்மையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கணவனை இழந்த பெண்களுக்காக வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்றாலும்  இன்றும் தங்கள் வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமலே உள்ளன. அதற்கு உதாரணமாக நுன்கடன்கள் பெறுதலை குறிப்பிடலாம்.

வடக்கு மாகாணத்திற்கென தனியான ‘யுத்தம் மூலம் தங்களது கணவன்மாரை இழந்து நிற்கும் பெண்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக ஆட்சியிலிருக்கும் அரசாங்கம், ஊடகங்கள் மத்தியில் கூறினாலும் பின்தங்கியுள்ள பலரின் நிலை கேள்விக்குரியாகவே உள்ளதாக’ அருட்சகோதரி ரசிகா பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விதவைகளாக இருக்கும் பெண்கள் இன்னும் பல நலவாழ்வு அமைப்புக்களை நம்பியே வாழ்வாதாகவும், சிறு தொழில்கள் மூலமே வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் கூறுகிறார்

அதேநேரம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் பெண் நல்வாழ்வு அமைப்பு, கிறிஸ்தவ சமூக அமைப்பு, அரசு சார்பற்ற அமைப்புக்களின் ஊடாகவே உதவிகளைப் பெற்றுவருகின்றனர்.

அதுமட்டுமில்லாது கணவனை இழந்த பெண்கள் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்வாதாகவும் அவர் தெரிவிக்கிறார

தற்போதைய அரசு முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் என்ன?

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், பெண்களின் பங்குபற்றல் மற்றும் தலைமைதாங்குவதற்கான தந்திரோபாய வழிமுறைகளை கையாண்டு ஊக்குவித்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான திட்டங்களை இனங்கண்டு அமுல்படுத்தல், விசேட தேவையுடைய பெண்களின் உரிமையினை அரசியல், கலாச்சார வழிகளில் சர்வதேச தரத்திற்க உயர்த்தக்கூடிய திட்டங்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வடக்கு மாகாணத்திற்கென தனியாக அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டது.

எனினும் இந்த அமைச்சினூடாக கடந்த காலங்களில் சரியானதொரு நெறிமுறையில் செயற்படுத்தப்பட்டாலும் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமே வேலைத்திட்டங்களை செயற்படுத்த முடிகிறது என திருமதி ரூபினி வரதலிங்கம் குறிப்பிடுகின்றார்.

அதுபோல யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கென அமைக்கப்பட்ட இந்த அமைச்சின் ஊடாக பல பெண்கள் நன்மையடைந்துள்ளார்கள் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

இருந்த போதிலும் அரசு அவர்களுக்கான சிறுகுறு தொழில்களை முன்னெடுத்தாலும், தற்போதைய கொவிட் சூழல்,மற்றும் பொருளாதாரத்திற்கு மத்தியில் அவர்களால் அதனைய ஈடுகொடுக்க முடியவில்லை.

கடன் பிரச்சினை, பாலியல் ரீதியான பிரச்சினை, விபச்சார தொழில்களில் ஈடுபடுவது என தங்களது சமூக கட்டமைக்கு சவாலான வகையில், திசை மாறிச் செல்கின்றனர்.

அதுபோல பாலியல் சுரண்டல்களுக்கு இளம் விதவைப்பெண்கள் உள்ளாகுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இன்னும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்படுகின்றார்கள் அரசாங்கம் மாறினாலும் அரச இயந்திரமும் அரச அதிகாரிகளும் மாறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் ரூபினி வரதலிங்கம்  குறிப்பிடுகின்றார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களை பாதுகாப்பதற்குரிய முழு பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. வடகிழக்கில் வாழும் மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு அதற்காக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒருமித்து அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

ஆண்மையில்  ஜ.நா அமர்வு இடம்பெற்றுககாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அரசியல் கைதிகளை விடுவித்தல், போன்ற பிரச்சினைகைள சுட்டிக்காட்டி வடக்கு கிழக்கு மக்கள் தொடர்;ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

அதேவேளை, தமிழர்களிடத்திலும் பாரிய பொருளாதார சக்தியாக புலம்பெயர் சமூகம் இன்று உள்ளது. எனவே, புலம்பெயர் தமிழ் சமூகம்  நேரடியாகவே வடக்கு- கிழக்கில் உள்ள பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களை இனங்கண்டு உதவியளிக்க முடியும்.  இது தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் முயற்சியாகும்.

மக்களிடத்தில் நிலவும் வறுமையைத் தணிப்பதற்கு அரசு திட்டங்களை முன்வைக்கவேண்டும். அவற்றின் வெற்றியளிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைவிடுத்து வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என அரசியல் உரை பேசுவது சரியான முன்னேற்றத்திற்கான வழிவகையாக இருக்கப்போவதில்லை.

கணவனை இழந்த பெண்களுக்கான தேவை

முதலில் அவர்களுக்கு பசி, பட்டினி இல்லாத வாழ்வு, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், சரியான கல்வி வசதி, பொருளாதார வசதி உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் கௌரவமான பாதுக்காப்பான வாழ்க்கை. இதுவே அவர்களுக்கான தேவை.

யுத்தத்திற்குப் பின்னர் கணவனை இழந்து நிற்கும் பெண்களது பாதுகாப்பு, வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து, இதர நடவடிக்கைகள் என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல்போயுள்ள தமது உறவுகளைத் தேடும் அசாதாரண பொறுப்பும் பெண்களின் தலைகளியே அதிகமாகக் சுமத்தப்பட்டுள்ளன.

உண்மையில் வருமானத்திற்கான மார்க்கமின்றி உள்ள இந்தப் பெண்கள் மேற்குறிப்பிட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பணத்திற்காக எங்கே செல்வது எனத் திண்டாடுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேலாக இதுவரை இந்தப்பெண் குடும்பத்தலைவிகள் தொடர்பாக சரியானதொரு திட்டம் செயற்படுத்தப்படவில்லை எனக்கூறமுடியாது. சில நன்மை பயக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்தாலும் அதை திட்டமிட்;ட வகையில் முன்னெடுக்கப்படவில்லை

அதேபோல யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் விவகார அமைச்சின் கீழ் இன்னும் உள்வாங்கப்படவில்லை என்பதோடு உதவிகளை வழங்குவிலும் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்றைய உடனடி அன்றாட வாழ்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சரியான பொருளாதார வசதியும் வருவாயை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களும் மீண்டும் புத்தாக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் ‘அரசாங்கத்தின் நிர்வாக, சட்ட மற்றும் நீதித் துறைகள் தமது குடிமக்கள் அனைவருக்கும் பதிலளிக்கக் கூடியதாகவும், பொறுப்பானதாகவும் இருப்பதற்கு அரச நிறுவனங்களின் இயலுமையை வலுப்படுத்தலை உள்ளடக்கியதாக சமாதானத்தைக் கட்டியெழுப்பலின் பிரதான அங்கம் அமைந்துள்ளது.

குணவனை இழந்த பெண்களைப் பொறுத்தவரையில் உண்மையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு செய்யவேண்டிய விடயங்கள் அவர்களிடமும் உள்ளது.

அந்தவகையில், அடிமட்டத்தில் காணப்படுகின்ற யதார்த்தைத் உணர்ந்து அதுதொடர்பில் தீர்வுகளைத் தேடும் உறுதியான முன்முயற்சிகளை அவர்கள் எடுக்கவேண்டும்.

அதேபோல சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் கணவனை இழந்த பெண்கள் தாம் விரும்புகின்ற மாற்றத்தை தாமே முன்கொண்டுவருவதற்கான வலுவுள்ளவர்களாக திகழ வேண்டும்.

தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்ந்து தொழில்வாண்மைமிக்கவர்களாக உயர்வடைவதற்கு ஊக்கிகளாக திகழவேண்டும்

Previous article‘ஒரே நாடு ஒரே சட்டம்” ஞானசார தேரர் தலைமையில் புதிய ஜனாதிபதி செயலணி நியமனம்
Next articleகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிறிது சிறிதாய் சிதைந்து போன பூ வணிகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here