‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதற்கமைய இலங்ரக அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரிமையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
13 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவிடம் கருத்தாக்கத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட இந்த செயலணியின் உறுப்பினர்களாக கலகொடஅத்தே ஞானசார தேரர் – (தலைவர்) பேராசிரியர் தயானந்த பண்டா, பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என்.பி. சுஜீவ பண்டிரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பானி வேவல, மொஹமட் மௌலவி, விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீல் ரஹ்மான், அசீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய செயலணி, இலங்கைக்குள் ஒரேநாடு ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவை தயாரித்து நீதி அமைச்சினால் ஊற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு மற்றும் பரீசீலனை செய்து திருத்தங்கள் உள்ளதா என தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாதத்திற்கு ஒருமுறையாவது ஜனாதிபதியிடம் அறிக்கைகளை சமர்ப்பித்து இறுதி அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்ல அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு செயலணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்;டுமில்லாது,இனம், மதம், குலம் பிறிதொரு காரணங்களால் தனிநபரும் சட்டத்தின் பாகுபாட்டிற்கு அல்லது விசேட சலுகைகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பது அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நூட்டில் குடிமக்கள் அனைவரும் சட்டவாட்சி கோட்பாட்டிற்கு அமைய சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் விவேகம், திறமை மற்றும் நாட்டின் பற்றுறுதி என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டு இந்த செயலணி உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டு வர்த்தமானி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இந்த புதிய செயலணியில் தமிழர் எவரும் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.