அனுராதபுரம் சிறை சம்பவம்: குற்றவியல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு; லொஹானுக்காக ஆஜராக மறுத்தார் சட்ட மா அதிபர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது.  இதற்காக சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளுமாறும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைத்துள்ள 8 அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றே,  உயர் நீதிமன்றம்  மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

மனு மீதான பரிசீலனை:

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று,  தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய சம்பவம் ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி,  குறித்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நேற்று 2 ஆவது  தடவையாக பரிசீலனைக்கு வந்தது.
நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான  நீதியரசர்களான  யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய  மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே  பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவினை பிறப்பித்தது.

கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றவும்   கட்டளை:

இதனைவிட  மனுதாரர்களான அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அனுராதபுரம் சிறையிலிருந்து உடனடியாக வடக்கு, கிழக்கின் ஏனைய சிறைகளுக்கு அவர்களது விருப்பத்தினைப் பெற்று மாற்றுமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

லொஹானை கைவிட்ட சட்ட மா அதிபர் :

இந்த மனு மீதான பரிசீலனைகளின் போது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் ஆகிய இரு பிரதிவாதிகள் தொடர்பில் மன்றில் பிரசன்னமாகாமல் இருக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார். எனவே அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி  இந்த அடிப்படை  உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பில்  மன்றில் விடயங்களை முன் வைக்குமாறு,  மனுவின் பிரதிவாதிகளான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உயர் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் :

நேற்றைய பரிசீலனைகளின் போது மனுதாரர்களான அரசியல் கைதிகளுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் விளக்கங்களை முன் வைத்தார்.
‘சிறைச்சாலைகள் சட்ட திட்டங்களுக்கு அமைய , சிறைச்சாலைகள் அதிகாரி ஒருவருக்கு கூட ஆயுதத்துடன் சிறைச்சாலைக்குள் உள் நுழைய முடியாது. அவ்வாறு ஆயுதத்தை சிறைச்சாலைக்குள் எடுத்து செல்ல வேண்டுமானால், அதற்கு முறையான  நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அவ்வாறான  சட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில்,  சிறைச்சாலைகள் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் எனும் ரீதியில் , லொஹான் ரத்வத்த தனது ஆயுதத்துடன் சிறைச்சாலைக்குள் நுழைந்து  அங்கிருந்த மனுதாரர்களான இந்த அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை மிகப் பாரதூரமான குற்றமாகும்.
இந்த சம்பவம் தொடர்பில், சிறைக் கைதிகளின் உறவினர்களிடம் கவலை தெரிவிப்பதாக நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் கவலை வெளியிட்டார்.
எனவே அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,  அவர்களை வடக்கு, கிழக்கில் உள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு  மாற்றும் இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும்.’ என   ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் கோரினார்..

பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக :

இதன்போது பிரதிவாதிகளான   சட்ட மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சர் சர்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  ரஜீவ குணதிலக,
‘ மனுதாரர்களில் இருவர் கொழும்பு சிறைக்கு மாறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் பாதுகாப்பு காரணங்களுக்காக  இந்த  கைதிகளை யாழ். சிறைக்கு மாற்ற வேண்டாம் என  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக  தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை வேறு சிறைகளுக்கு மாற்றுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை
‘ என்றார்.
நீதிமன்ற உத்தரவு :
இதனையடுத்தே, 8 அரசியல் கைதிகளையும் வடக்கு கிழக்கின் பொருத்தமான சிறைகளுக்கு மாற்றவும்,   லொஹான் ரத்வத்த தொடர்புபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை  எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.

மனுவின் பின்னணி :

முன்னதாக பூபாலசிங்கம் சூரியபாலன், மதியரசன் சுலக்ஷன்,கனேஷன் தர்ஷன்,கந்தப்பு கஜேந்ரன், இராசதுரை திருவருள்,கனேசமூர்த்தி சிதுர்ஷன்,மெய்யமுத்து சுதாகரன்,ரீ.கந்தரூபன் ஆகிய அரசியல் அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 126 ஆவது உறுப்புரை பிரகாரம், தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தல் சம்பவத்தை மையப்படுத்தி  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தனர். , சின்னதுரை சுந்தரலிங்கம் & பாலேந்ரா சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி ராஜ் மோஹன் பாலேந்ரா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகள் :

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் எம்.எச்.ஆர். அஜித்,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, நீதி அமைச்சர் அலி சப்றி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இம் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்ற விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையிலும் வவுனியா  நீதிவான் நீதிமன்றினாலும் வழங்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய தாம்  அனுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில்,  தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்த முதல் பிரதிவாதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தம்மை முழந்தாழிடச் செய்து மிக மோசமாக நடாத்தியதாக மனுதாரர்கள்  மனுவில் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் செயற்படும் பூரண அதிகாரத்தை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக முதல் பிரதிவாதி லொஹான் ரத்வத்த இதன்போது தெரிவித்ததாகவும், பின்னர்  பூபாலசிங்கம் சூரியபாலன் எனும் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாகவும் மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மீறப்பட்டுள்ளத்காக கூறப்படும் உரிமைகள்:

இதனால் அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமை மற்றும் சமத்துவத்துக்கன உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந் நிலையில் அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரையின் கூறப்பட்டுள்ள  எந்த ஒருவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது என்ற விடயம் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அதற்கு மேலதிகமாக அரசியலமைப்பின் 12 ( 1) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள  சட்டத்தின் முன் ஆட்கள் அனைவரும் சமமானவர்கள்;  அத்துடன் அவர்கள் சட்டத்தால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் என்ற விடயமும் 12 ( 2 ) ஆம் உறுப்புரையான  இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய  காரணங்களில் எந்தவொன்று காரணமாகவும் எந்த பிரஜையையும் ஓரங்கட்டுதல் ஆகாது என்ற உரிமையும் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந் நிலையில் தாம் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனுராத புரம் சிறையில் இருந்து யழ்ப்பாண சிறைச்சாலைக்கு உடனடியாக தங்களை மாற்ற இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் தம்மை பிணையில் விடுவிக்கும் இடைக்கால தீர்மானமொன்றினையும் அறிவித்து ஈற்றில் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும்  விடுவித்தும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் குறித்த மனு ஊடாக கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here