மீண்டும் சட்ட விரோத யானை குட்டி வர்த்தகம்? : ஹபரனையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு  அதிகாரி மீது இராணுவ மேஜர் ஜெனரால் தாக்குதல்

மின்னேரிய – ஹபரனை  தேசிய வன விலங்குகள் பூங்காவின்  ஒரு பகுதியில், சட்ட விரோதமாக யானை குட்டியொன்றினை பிடிக்கும் நடவடிக்கைகள் இடபெறுவதாக, வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்துக்கு இடமான முறையில் வனப்பகுதியிலிருந்து சென்ற இராணுவ வாகனங்கள் இரண்டை நிறுத்த முயன்றமையை மையப்படுத்தி வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  இச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடாத்தியதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள், அனுராதபுரம் கட்டளை தளபதியாக செயற்படுவதாக கூறப்படும் மேஜர் ஜெனரால்  மொஹான் ரத்நாயக்கவுக்கு எதிராக ஹபரனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

 இது தொடர்பில் ஹபரனை பொலிஸாரிடம் வினவிய போது, வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தரப்பிலிருந்தும் இராணுவ தரப்பிலிருந்தும் இரு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெயர் பெற்ற பிரபல நபர்:

 யானைக் குட்டிகளை கடத்துவது தொடர்பில் பெயர் பெற்ற, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ள பிரபல நபர் ஒருவர்  மின்னேரியா வன விலங்குகள் சரணாலயம் அருகே உள்ள ஓரிடத்தில் முகாமிட்டுள்ளதாகவும்,  அவருடன் குழுவொன்று அடிக்கடி காட்டுக்குள் சென்று வருவதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வன விலங்குகள் பூங்காவுக்குள் இருந்து வெளியேற முடியுமான அனைத்து வாயில்களிலும் விஷேட காவல் அரண்களை ஏற்படுத்தி, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் விஷேட சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்தின் இரு வாகனங்கள் :

இதன்போதே, மின்னேரிய வன  விலங்குகள் சரணாலயத்தின்  மேற்கு எல்லையை ஒட்டிய ஹபரனை பகுதியில், சரணலயத்தில் இருந்து வந்த  இரு வாகனங்களை முதல் காவலரணில் இருந்த அதிகாரிகள் மறித்துள்ளனர். எனினும் அவை குறித்த கட்டளையை மீறி வேகமாக பயணித்துள்ள நிலையில், ஏனைய வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகரிகளினால் ஏற்படுத்தப்பட்டிருந்த காவலரண்களிலும் கட்டளையை மீறி பயணித்துள்ளன.
இதனையடுத்து  கெப் ரக வாகனங்கள்  இரண்டினையும் வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போது அவை இராணுவ வாகனங்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் , கல்குளம் இராணுவ பொலிஸ் காவல் மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

அதை நிறுத்த முடியாது; பயணிப்பவர் மேஜர் ஜெனரல் :

 இதன்போது அந்த வாகனத்தை நிறுத்த முடியாது எனவும், அது மேஜர் ஜெனரல் பயணிக்கும் வாகனம் என அங்கிருந்து பதில் கிடைத்ததாக வன ஜீவராசிகள்  பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் அவ்விரு வாகனங்களையும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போதும், அவை அனுராதபுரம்  21 ஆம்  கட்டளை தலைமையகத்துக்குள் சென்றுள்ளது.
இந் நிலையில், இராணுவ முகாமுக்குள் செல்ல வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், அவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

இரு தரப்பினரும் முறைப்பாடு:

இந் நிலையில், திரும்பிக்கொண்டிருந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை ஹபரனை –  பளுகஸ்வெவ பகுதியில் வைத்து இராணுவ சோதனை சாவடியில் இராணுவத்தினர் மறைத்துள்ளனர். இதன்போது வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வாகனத்தை நிறுத்தவே, அவர்களை பின் தொடர்ந்து வந்த  இராணுவ வாகங்களில் இருந்து இராணுவத்தினர் சிலர் இறங்கி வந்துள்ளனர்.

‘ நான் தான் மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க’ :

அதிலிருந்த உயர் அதிகாரி ஒருவர் ‘ நான்தான் அனுராதபுரம் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க, உங்களால் என்னை நிறுத்த முடியாது. உங்களை தூக்கிவிடுவேன். கவனம்…’ எனவும் மேலும் சில கெட்ட வார்த்தைகளைக் கொண்டும்  மிக பாரதூரமாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது வன ஜீவராசிகள்  பாதுகாப்பு அதிகாரிகளும் அவ்விடத்தில் தமது நியாயங்களை முன் வைக்கும் போது, அது வாய்த்தர்க்கமாக மாறி, இராணுவ மேஜர் ஜெனரலினால் தாக்குதல் நடாத்தப்பட்டு, அதிகாரிகளின் தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புபு அதிகாரிகளின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது என்.டப்ளியூ.கே. வாசல எனும் அதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தலையீடு செய்த ஹபரனை பொலிஸ் பொறுப்பதிகாரி :

 எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் போது ஸ்தலத்துக்கு ஹபரனை பொலிஸ் பொறுப்பதிகாரியும் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதுடன், வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது கடமையினையே செய்துள்ளதாகவும், இவ்வாறு மோசமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் மேஜர் ஜெனரலுக்கு தெரிவித்து தொலைபேசிகளை அவர்களிடம் கையளிக்குமாறும் கூறியுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையிலேயே இரு தரப்பினராலும் ஹபரனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நற் பெயருக்கு சிக்கல் – இராணுவம் :

 இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவிய போது,
அனுராதபுரம் 21 அவது கட்டளை மையத்தின் பிரதானி மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க ஹபரனை பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி வரும் போது  இரு வாகனங்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளன என தெரிவித்தார். அத்துடன் மேஜர் ஜெனரல், முகாமுக்குள் நுழைந்ததும், பின் தொடர்ந்து வந்தவர்கள் முகாம் வாயிலில் , மேஜர் ஜெனரலின் வாகனத்தில் யானைக் குட்டி இருப்பதாக கூறிவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.  தனது நற்பெயருக்கு இவ்வாறு கலங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க ஹபரனை பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.  அங்கு எந்த தாக்குதல் சம்பவங்களும் நடக்கவில்லை. என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.

விசாரணை நடக்கிறது – வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்:

 இது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன  சூரிய பண்டாரவிடம் வினவியபோது,  சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்தார். இது தொடர்பில் திணைக்களத்தின் பொலன்னறுவை மாவட்ட  உதவி பணிப்பாளர் டப்ளியூ.என்.கே.எஸ். சந்ர ரத்னவின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை தமக்கு எதுவும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவர் யார்?:

 இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கலுக்கு அமைய, சம்பவத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி  அண்மையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மிகவும் பேசப்பட்ட ஒருவர் என அறிய முடிகிரது.  சோமாவதி சரணாலயத்துக்குள் சட்ட விரோதமாக மாடுகளை  மேய்ச்சலுக்கு விடப்படுவதற்கு எதிராக  வன ஜீவிகள் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கவுடன்  ஏற்பட்ட வாதத்தை அடுத்து, மின்னேரிய வன ஜீவராசிகள்  பாதுகாப்பு அலுவலகத்துக்கு மற்றப்பட்ட அதிகாரியே அவர் என தகவல்கள் தெரிவித்தன.

அறிக்கையை சமர்ப்பிக்கவும்; கெக்கிராவை நீதிமன்றம்:

 எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கெக்கிராவை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  தமது பணிகளுக்கு இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்னேரிய வன விலங்குகள் சரணாலய பொறுப்பதிகாரி பாத்திய மடுகல்ல ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பீ அறிக்கை குறித்து கெக்கிராவை நீதிவான் நீதிமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி  இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கெக்கிராவை நீதிவான் சமன் வெரனிகொட உத்தரவிட்டுள்ளார்.

 அமைச்சரவை பேச்சாளரின் விளக்கம்:

 இந் நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மின்னேரிய வன விலங்குகள் சரணாலயத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் யானைக் குட்டி கடத்தல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினர். விரைவில் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleஅசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு; பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிகை
Next articleஅனுராதபுரம் சிறை சம்பவம்: குற்றவியல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு; லொஹானுக்காக ஆஜராக மறுத்தார் சட்ட மா அதிபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here