இறுதி முடிவு உங்களுடையது எனில் சட்டம் எதற்கு? அநீதியான  மன்னிப்பளிப்பு குறித்து ஹிருனிகா பிரேமசந்ர ஜனாதிபதிக்கு கடிதம்

மேல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றின் நீதிபதிகள் 7 பேர் வழங்கிய தீர்ப்பை  குப்பையில் வீசிவிட்டு, இறுதி முடிவை எடுத்தது நீங்கள் எனில்,  இந் நாட்டில் சட்டம் எதற்கு ? என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ர  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தந்தையின் கொலையாளியான துமிந்த சில்வாவுக்கு, அநீதியான முறையில் பொது மன்னிப்பளித்தமை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதிலளிக்க வேண்டும் என  தெரிவித்து  ஹிருனிகா பிரேமசந்ர நேற்றைய தினம் (24)மாலை ஜனாதிபதிக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதிலேயே மேற்படி கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

தனது இளம் பராயம் முழுவதும் கொலைக்காரர்களுடன் போராடி பெற்ற நீதி தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக ஹிருனிகா பிரேமசந்ர குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும்  தொனிப் பொருளில் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அது தேர்தலை இலக்காக கொண்ட வெறும் வசனம் மட்டுமே என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக ஹிருனிகா பிரேமசந்ர குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து பக்கங்களைக் கொண்ட குறித்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
 நான் உங்கள் சகோதரரின் தொழிற்சங்க ஆலோசகரின் மகள்:
நான் உங்களுடைய சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளாவேன்.
எனது தந்தை 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் :
மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவரால் வழங்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக 5 பேரடங்கிய நீதியரசர் குழாமினால் உறுதிப்படுத்தப்பட்ட குப்பையில் வீசியெறிந்துவிட்டு, இன்று உங்களால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உள்ளிட்ட குழுவினரால் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சுமார் 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுடப்பட்டு மிகமோசமாகப் படுகொலை செய்யப்பட்டவரே எனது அன்பிற்குரிய தந்தையாவார்.
அடிக்கடி வந்த அழைப்புக்கள்:
அந்த நாளில் எமது வீட்டுத்தொலைபேசி மூலம் வந்த அழைப்பில் தெரியப்படுத்தப்பட்ட விடயம் எனது தந்தை துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிவிட்டார் என்பதேயாகும். அப்போது வீட்டில் நானும் எனது அம்மாவும் மட்டுமே இருந்தோம். அந்தத் தொலைபேசி அழைப்பை நாம் பெரிதும் கவனத்தில் கொள்ளவில்லை. அக்காலப்பகுதியில் இத்தகைய தொலைபேசி அழைப்புக்கள் அடிக்கடி வந்தவண்ணம் இருந்ததுடன், அவைகுறித்து நாம் ஆராந்துபார்த்த வேளைகளில் எனது தந்தை நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருந்தமையே அதற்கான காரணமாகும்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இறுதி ஜனாதிபதித்தேர்தல் கூட்டத்தை கடந்த 1999 ஆம் ஆண்டில் பொரளையில் ஏற்பாடு செய்தவர் எனது  தந்தையே. . அந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், எமது வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய எனது தந்தை, தான் நலமுடன் இருப்பதாகத் தெரியப்படுத்தினார். நானும் எனது தம்பியும் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர் எமது தந்தையை வணங்கச்சென்றபோது இரத்தம் தோய்ந்த உடையினால் சூழ்ந்திருந்த காட்சி இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.
எனது தந்தையின் 30 வருடகால அரசியல் வாழ்வில் இத்தகைய பல சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றிருந்தமையால் அன்றைய தினம் நாங்கள் பதற்றமடையவில்லை. எனினும் தொலைபேசி அழைப்புக்கள் ஓய்வின்றி வந்ததைத் தொடர்ந்து நானும் எனது தாயாரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் செல்லத்தயாரானோம். அதன் பின்னர் பிணவறைக்கு வருமாறு எமக்குக் கூறப்பட்டது. அந்தச் சம்பவம் இடம்பெற்று 10 வருடங்கள் கடந்த பின்னரும்கூட, அது எனது நினைவலைகளின் வருகின்ற
ஒவ்வொரு தடவையும் என்னுடைய ஒட்டுமொத்த உலகமும் நொருங்குவதை போன்று உணர்கின்றேன்.
23 வயது முதல் நீதிக்காக அழைந்தேன்:
எனது தந்தை படுகொலை செய்யப்பட்டபோது எனது வயது 23 ஆகும். எக்காலத்திலும் நீதிமன்றத்தில் கால்பதித்திருக்காத நானும் எனது தாயாரும் எனது தந்தை உட்பட கொல்லப்பட்டவர்கள் தொடர்பான வழக்கிற்காக சுமார் 5 வருடகாலமாக நீதிமன்றத்திற்கு அழைந்தோம்.
மகிழ்வாக இருக்க வேண்டிய காலப்பகுதியில் கொலைக்காரர்களுடன் போராடிக்கொண்டிருந்தேன்:
எந்தவொரு பெண்ணும் மகிழ்ச்சியுடன் கழிக்கவேண்டிய காலப்பகுதியை, நான் பல கொலைகாரர்களுடன் போராடுவதிலேயே கழித்தேன். பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவிற்கு மகளொருவர் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறியாமல் இருந்தவர்கள்கூட, ஒரே இரவில் என்னை அறிந்துகொண்டார்கள். எனது தந்தையின் வழக்கை நான் தொடர்ந்து முன்னெடுத்துச்சென்றமையால் பலர் எனக்கு எதிரிகளானார்கள்.
ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒருமுறைகூட துமிந்த சில்வா சிறையில் அடைக்கப்படவில்லை. பலர் படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் அந்தப் படுகொலைகளுக்குத் தலைமை தாங்கி, அதனை இயக்கிய நபர் ஒருதடவைகூட சிறைப்படுத்தப்படவில்லை.
ஷானி பக்கச்ச்சார்பின்றி விசாரித்ததால் இன்று அவர் மீதும் வேட்டை:
குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பிரதானி ஷானி அபேசேகர உள்ளிட்ட குழுவினர் இச்சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனமாக சேகரித்து, விசாரணைகளை முன்னெடுத்தார்கள். கடந்த காலத்தில் ஷானி அபேசேகர பக்கச்சார்பற்ற வகையில் நியாயமாகத் தனது கடமைகளை முன்னெடுத்ததன் காரணமாகவே இன்று அவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டிருக்கிறது.
தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட நீங்கள் வரவில்லை :
எனது தந்தை உயிரிழந்தபோது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளடங்கலாக அனைத்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகைதந்த போதிலும், நீங்கள் வந்திருக்கவில்லை.
துமிந்த சிங்கப்பூர் செல்ல ஹெலிகப்டர் வழங்கினீர்கள் :
மாறாக ஹெலிகப்டர் ஒன்றை வரவழைத்து துமிந்த சில்வாவை சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்வதற்கு அவசியமான நடவடிக்கைகளையே நீங்கள் மேற்கொண்டீர்கள். மகிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்பத்தைச்சேர்ந்த அனைவரும் எனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருதைதந்தபோதிலும், நீங்கள் வரவில்லை. நீங்கள் ஸ்ரீஜயவர்தனபுர வைத்திசாலையில் துமிந்த சில்வாவுடன் இருந்தீர்கள்.
டீ.பி.இலங்கரத்னவின் வழிகாட்டலில் 1977 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, அதன்பின்னர் விஜய குமாரதுங்கவுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்சியின் ஆரம்ப உறுப்பினராக செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான எனது தந்தை 1996 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க வழிகாட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார். கொழும்பில் நீலக்கொடியைப் பறக்கவிடுவதற்கு 10 பேர்கூட இல்லாத காலப்பகுதியிலேயே எனது தந்தை அக்கட்சியில் இணைந்தார். அவர் பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காக கொழும்பு மாவட்டத்தில் தனியாகப் போராடினார்.
‘மகிந்த அய்யா’  :
 மகிந்த ராஜபக்ஷவை ‘மகிந்த அய்யா’ (மகிந்த அண்ணா) என்று அழைத்த எனது தந்தை, அதனை வெறுமனே வாய்வார்த்தையுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் உண்மையிலேயே சகோதரப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார். இன்பத்திலும் துன்பத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகிந்த ராஜபக்ஷவுடன் எனது தந்தை உடனிருந்தார். எதிர்க்கட்சித்தலைவர் பதவியை சந்திரிகா குமாரதுங்க வேறொருவருக்கு வழங்க முற்பட்டபோது, அந்தத் தீர்மானத்திற்கு எதிராக எனது தந்தையே போராடினார். அதுமாத்திரமன்றி மகிந்தவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு எதிராக எனது தந்தை போராடினார். வரலாற்றை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர்கள் அல்லாதோர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிப்போர் அனைவரிடமும் நீங்கள் இந்த வரலாற்றைக் கேட்டறிந்துகொள்ளலாம். பிரதமரிடம் இதனைக் கேட்டறிந்துகொள்ளுங்கள். மனதிற்கு சரியென்று தோன்றுகின்ற இடத்தையே எனது தந்தை எப்போதும் தெரிவுசெய்தார். தனது நீண்டகால நண்பனும் சகோதரனுமான ஒருவருக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எந்தவொரு காலத்திலும் அவர் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் சாதாரண மனிதர்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் குரலெழுப்பினார்.
‘ பாதுகாப்புச்செயலாளரான ஜனாதிபதியின் சகோதரரின் துணையுடன் கொலன்னாவ தொகுதியின் அமைப்பாளர் இங்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுகின்றார்.’ :
எனினும் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, பொதுமேடையொன்றில்வைத்து அவரது வாயிலிருந்து தவறான வசனமொன்று வெளியானது. ‘பாதுகாப்புச்செயலாளரான ஜனாதிபதியின் சகோதரரின் துணையுடன் கொலன்னாவ தொகுதியின் அமைப்பாளர் இங்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுகின்றார். அதுவே எனது கவலையாகும். இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் நாமனைவரும் இணைந்து பிரசன்னவை வெற்றிபெறச்செய்வது மாத்திரமன்றி, நாம் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்டியெழுப்பிய ராஜபக்ஷ வம்சத்தை இந்த போதைப்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கும் போராடுவோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகி;ன்றேன்’ என்று குறிப்பிட்டார். இந்த வசனங்களே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
இந்த வசனங்கள் நிகழ்காலத்தில் எந்தளவுதூரம் உண்மையானவையாக மாறியிருக்கின்றன என்பது குறித்து நீங்கள் தனியாக சிந்தித்துப்பாருங்கள். எனது தந்தையின் படுகொலையானது 10 வருடங்கள் கடந்தும் மிகவும் மோசமானதொரு சம்பவமாக எனது நினைவுகளில் நன்கு பதிந்திருக்கிறது.
மருத்துவ உதவியை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளேன் :
அவற்றிலிருந்து மீள்வதற்காக அவ்வப்போது மருத்துவ உதவியை நாடவேண்டிய நிலைக்கும் நான் தள்ளப்பட்டிருக்கிறேன். மூன்று குழந்தைகளின் தாயார் என்ற வகையில் என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், எனது தந்தையின் இழப்பு அவ்வப்போது என்னைப் வெகுவாகத் தாக்குகின்றது. திடீரென்று தமது குடும்பத்தில் ஒருவரை இழந்த அனைவருக்கும் என்னுடைய உணர்வுகள் மிகவும் இயல்பானவை என்பது புரியும்.
பிரகீத், லசந்த, தாஜுதீனின் குடும்பத்தினருக்கும் இதே கஷ்டம் இருக்கும் :
 கடந்த காலத்தில் இத்தகைய சம்பவங்களுக்கு இலக்கான ஊடகவியலாளர்களான பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க, ரக்பி விளையாட்டுவீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரின் குடும்பத்தினரும் இவ்வாறான வேதனையுடனேயே வாழ்ந்துவருகின்றனர். அவர்களுடைய வாழ்வில் எவை கிடைக்கப்பெற்றாலும் எவற்றை இழந்தாலும், ஒரு வெற்றிடம் மாத்திரமே நிலையாக உணரப்படும். அவர்களுக்கு இன்னமும் சட்டத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்படவில்லை. தம்முடைய தந்தை அல்லது உறவினர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை அறிந்துகொள்வதற்கும் அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி நியாயமான வழக்குவிசாரணைகள் நடைபெறுவதைப் பார்ப்பதற்கும் இந்த நாட்டின் பிரஜைகள் என்றவகையில் அவர்களுக்க உரிமை இருக்கின்றது.
‘ ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது வெறும் வாய் வார்த்தை ‘ :
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற  தொனிப்பொருளின் அடிப்படையிலேயே நீங்கள் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றியடைந்தீர்கள். எனினும் அது வெறுமனே தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் பயன்படுது;தப்பட்ட வாய்வார்த்தை என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது. ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக்கொண்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகள் அனைவரும் பொதுமன்னிப்பு வழங்குமாறு உங்களிடம் கோரினால் அதனை நிறைவேற்றுவதற்கு உங்களால் இயலாதுபோகும்.
சட்டம் எதற்கு? :
 ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் குற்றவாளிகளை இவ்வாறு நினைத்தவாறு விடுதலை செய்யமுடியும் என்றால், சிறைச்சாலைகள் எதற்கு? சட்டம் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? எவ்வித அடிப்படைகளுமற்ற உங்களுடைய தீர்மானத்தின் காரணமாக இன்று இந்த இலங்கையானது சட்டக்கோட்பாடுகளற்ற ஒரு நாடு என்ற நிலையை அடைந்திருக்கின்றது.
நாட்டை ஆட்சி செய்வது நீங்கள் அல்ல:
இன்று நாட்டை ஆட்சிசெய்வது நீங்கள் அல்ல. அதனை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சிலரின் கைப்பாவையாக மாறியிருக்கிறீர்கள். இனியும் நாட்டுமக்கள் உங்களிடமிருந்து நன்மையை எதிர்பார்க்கமுடியாது. அதனைக் ஒருவருடம் என்ற மிகக்குறுகிய காலத்திலேயே உங்களுடைய செயற்பாடுகள் மூலம் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. மஹதீர் மொஹமட், லீ க்வான் யூ, புட்டின் ஆகியோரின் வழியில் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் 69 இலட்சம்பேர் இணைந்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். கைப்பாவையாக இல்லாமல், நாட்டுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உங்களுக்கு இன்னும் தேவையாக இருப்பது என்ன?
எனது தந்தை  ஓர் வரலாறு:
எனது தந்தை இப்போது வரலாறாகிவிட்டார். என்றேனும் ஓர்நாள் எனது பிள்ளைகள் அவர்களது பாட்டனாரை நினைத்துப் பெருமைகொள்ளக்கூடிய வகையில், எனது தந்தை பல்வேறு விடயங்களைச் செய்திருக்கிறார்.
உங்கள் பேத்தி உங்களை நினைத்து பெருமை கொள்வதற்கு என்ன செய்துள்ளீர்கள்? :
எனினும் நீங்கள் எந்த அடிப்படையில் வரலாறாக விரும்புகின்றீர்கள்? அண்மையில் பிறந்த உங்களுடைய பேத்தி, எதிர்காலத்தில் உங்களை நினைத்துப் பெருமைகொள்வதற்கு நீங்கள் எதனை விட்டுச்செல்லப்போகின்றீர்கள்?
நான் பின்பற்றுகின்ற பௌத்த தர்மத்தின் அடிப்படையில் துமிந்த சில்வாவிற்கு நான் மன்னிப்பு வழங்கிவிட்டேன். அதேவேளை பௌத்த போதனைகளுக்கு அமைவாக நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். ஆனால் உங்களுடைய செயற்பாடுகள் நாட்டின் சட்டதிட்டங்களைப் புறக்கணித்துள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகள்  இருவரால் துமிந்த சில்வா குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு மரணதண்டனை வழங்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்கள். அங்கு பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக ஐவர்கொண்ட நீதியரசர் குழாமினால் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. எனது தந்தை உள்ளிட்ட தரப்பினரைப் படுகொலை செய்வதற்கான சட்டவிரோத ஒன்றுகூடலுக்கு துமிந்த சில்வாவே தலைமைதாங்கினார் என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்தது. அவ்வாறு 7 நீதியரசர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தூக்கிவீசியெறிந்துவிட்டு, இறுதித்தீர்மானம் மேற்கொள்வது நீங்களானால் நாட்டில் சட்டம் என்பது எதற்காக இருக்கின்றது? உங்கள்மீது நம்பிக்கைவைத்து, உங்களை ஜனாதிபதியாக்குவதற்குத் தீர்மானித்த 69 இலட்சம் பேருக்கு பதில்கூறுவதற்கு நீங்கள் தயாராகுங்கள். உங்களுடைய செயற்பாடுகளின் காரணமாக, உங்களின் பின்னர் நாட்டை ஆட்சிசெய்வதற்கு மற்றுமொரு ராஜபக்ஷவைத் தெரிவுசெய்வதற்கு மக்கள் முன்வரமாட்டார்கள்.
உங்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் :
நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்பைப் புறந்தள்ளி உங்களால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா, எதிர்வரும் காலங்களில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டாலோ அல்லது அரசியலில் பிரவேசித்து வெற்றியடைந்தாலோ, அதுகுறித்து நான் ஆச்சரியமடைய மாட்டேன். நாட்டுமக்கள் இத்தகைய அநீதிகளை நீண்டகாலத்திற்குப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். உங்களுடைய காலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், எவ்வித அடிப்படைகளுமின்றி சட்டத்திற்கு மதிப்பளிக்காமல் செயற்படும் உங்களைப்போன்ற நபர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது இருக்காது. என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
Previous articleதுமிந்தவுக்கான மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் செயல்;  ஐ.நா. மனித உரிமைகள்  ஆணைக் குழு
Next articleஅசாத் சாலிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு; பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here