துமிந்தவுக்கான மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் செயல்;  ஐ.நா. மனித உரிமைகள்  ஆணைக் குழு

படு கொலை குற்றத்துக்கு குற்றவாளியாக காணப்பட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, பொது மன்னிப்பளித்த விவகாரமானது சட்டத்தின் மீதான ஆட்சியை பலவீனப்படுத்தும் செயல் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவமானது, பொறுப்புக் கூறலை கட்டுப்படுத்தும், தன்னிச்சையான மன்னிப்பளிப்புக்கு மற்றொரு உதாரணம் எனவும் அந்த ஆணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவைப் படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா பொசன்போயா தினமான,  நேற்று 24 ஆம் திகதி  ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்டார்.
துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்திவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையானது, அதன் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கிறது.
அரசியல்வாதியொருவரைப் படுகொலைசெய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, கைதிகளுக்கு விடுதலை வழங்குவதில் பக்கச்சார்புடைய தன்னிச்சையான போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றமைக்கு மற்றுமொரு உதாரணமாகும் என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும்  அதேவேளை, பொறுப்புக்கூறலையும் முழுமையாகப் புறந்தள்ளும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here