மனித படு கொலை குற்றத்துக்காக இரு நீதிமன்றங்களின் 7 நீதிபதிகள் குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா ஜனாதிபதியின் விஷேட பொது மன்னிப்பின் கீழ் நேற்று ( 24) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர உள்ளிட்ட நால்வர் படுகொலை தொடர்பில் குற்றவாளியாளியாக காணப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெலிக்கடை சிறையில் ( சிறைச்சாலை வைத்தியசாலையின் விஷேட பிரிவில்)தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலேயே நேற்று காலை அவரது விடுதலைக்கான ஜனாதிபதியின் கையொப்பம் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கிடைக்கப் பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். அதனையடுத்தே அவரை விடுதலை செய்ததாக அவர் கூறினார்.
பொது மன்னிப்பு குறித்த அரசியலமைப்பு விடயம்:
அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதிக்கு, குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதிக்கு குற்றவாளி ஒருவருக்கு பூரண மன்னிப்பு அளிக்கவும், சட்ட ரீதியிலான நிபந்தனைகளின் அடிப்படையில் மன்னிப்பு வழங்கவும், தண்டனையின் தன்மையை மாற்றவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவதானால், அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளின் அறிக்கையினைப் பெற்று, அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி அவரது அலோசனைகளை நீதி அமைச்சர் ஊடாக உறுதி செய்து ஜனாதிபதி பெற்றுக்கொண்ட பின்னரேயே வழங்க முடியும்.

இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்கு நேற்று பொசன் போயா தினத்தன்று பொது மன்னிப்பளித்துள்ளார். எனினும் இந்த படி முறை இதன்போது பின்பற்றப்பட்டதா என உறுதி செய்ய முடியவில்லை.
ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு:
கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகளில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது பொருத்தமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டு ஒரு பிரேரனையை ஜனாதிபதிக்கு கையளித்து துமிந்தவுக்கு பிணையளிக்க கோரியிருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே தற்போது அவருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது.
போயா தினத்தன்று விடுவிக்கப்பட்ட கைதிகள்:
நேற்றைய தினம் 16 அரசியல் கைதிகள் உட்பட 93 பேருக்கு பொது மன்னிப்பளிப்பதாகவே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு முதலில் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இந் நிலையிலேயேயே நேற்று காலை விஷேட மன்னிப்பாக துமிந்த சில்வவாவுக்கு மன்னிப்பளிப்பதற்கான அனுமதி அடங்கிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நேற்று 94 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணி சம்பவம்:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011 ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியா – ஹிம்புட்டான பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். மாகாண சபை தேர்தல் நடந்த குறித்த தினத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் துமிந்த சில்வாவும் படு காயமடைந்திருந்தார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர:
பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலன்னாவை நகர சபை ஊடாக தனது அரசியல் வாழ்வை 1979 இல் ஆரம்பித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாறிய பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர இலங்கை மக்கள் கட்சியின் ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன் அதன் கொலன்னாவை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1988 ஆம் ஆண்டின் இலங்கையின் முதலாவது மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர, மக்கள் கட்சியை பிரதி நிதித்துவம் செய்து ஐக்கிய சோஷலிச கூட்டணி சார்பில் மேல் மாகாண சபை உறுப்பினராக தெரிவானார். அதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டு அவர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர, 63421 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றுக்கு தெரிவானார். இதனையடுத்து கடந்த 2000, 2001 ஆம் ஆண்டுகளிலும் 2 ஆவது, மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றுக்கு தெரிவான பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் பாராளுமன்ற உறுப்பினரான வாழ்வு கடந்த 2004 ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து அவர் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

துமிந்த சில்வா:
இவ்வாறான பின்னணியிலேயே பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் அதிகார பகுதியாக இருந்த கொலன்னாவை பகுதியில் 2010 ஆம் ஆண்டு முதல் துமிந்த சில்வா அதிகாரத்தை கைப்பற்றினார்.
துமிந்த தனது அரசியல் வாழ்வை கடந்த 2004 இல் மேல் மாகாண சபை ஊடாக ஆரம்பித்திருந்தார். 2004 மற்றும் 2009 மாகாண சபை தேர்தல்களில் கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை துமிந்த சில்வாவே பெற்றிருந்தார்.
2004 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசிய கட்சி ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த துமிந்த சில்வாவுக்கு, மாகாண சபை உறுப்பினராக இருந்த போது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி துமிந்த சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்திருந்த பின்னணியில் வேறு காரணிகளையும் மையப்படுத்தி, துமிந்த சில்வா 2007 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கட்சி மாறினார்.
இந் நிலையில் பின்னர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸினால் வாபஸ் பெறப்பட்டது. 2003 ஆம் ஆண்டளவில் இடம்பெற்றதாக கூறப்பட்ட அந்த துஸ்பிரயோக சம்பவத்தை துமிந்த சில்வாவும் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.
இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில், சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றிருந்தால் அது தவறானது என குறிப்பிட்டிருந்தார்.
2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு 146333 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றுக்கு துமிந்த தெரிவாகியிருந்தார்.

துமிந்த சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்:
இதனைவிட துமிந்த சில்வாவுக்கு எதிராக கடந்த 2008 இல் பிரபல நடிகை அனார்கலி ஆகர்ஷா, தனக்கும் தனது தாய்க்கும் அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் பின்னர் துமிந்த சில்வா குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் துமிந்த சில்வாவுக்கு எதிராக கொலன்னாவை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பிரபல போதைப் பொருள் வர்த்தகர்களான வெலே சுதா, குடு லாலித்த ஆகியோரிடமிருந்து துமிந்த சில்வா பணம் பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில் அது குறித்து சி.ஐ.டி. பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பாரத லக்ஷ்மன் படுகொலை சம்பவம்:
கடந்த 2011 ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியா – ஹிம்புட்டான பகுதியில் வைத்து பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் அதில் காயமடைந்த துமிந்த சில்வா, மருத்துவ சிகிச்சைகளுக்காக 2011 நவம்பர் முதலாம் திகதி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதுடன், மீண்டும் 2013 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 349 எனும் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துமிந்த சில்வா பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
துமிந்தவின் கைது:
எனினும் அன்றைய தினமே குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சி.ஐ.டி. குழு துமிந்த சில்வாவை பாரத லக்ஷ்மன் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்தது.
2013. மார்ச் 5 ஆம் திகதி முற்பகல் 10.05 மணிக்கு கைதான துமிந்த சில்வாவை கைது செய்ததாக அப்போதைய சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சரும் பின்னர் பணிப்பாளராக இருந்து தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கொழும்பு மேலதிக நீதிவானாக கடமையாற்றியிருந்த சந்துன் விதானவுக்கு அறிவித்திருந்தார். துமிந்த சில்வா கைது செய்யப்பட்ட தயனியார் வைத்தியசாலையிலேயே பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக ஷானி அப்போது நீதிமன்றுக்கு தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற நீதிவான் துமிந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
பிணைப் பெற்றதும் குணமடைந்த துமிந்த:
பின்னர் பிணைப் பெற்றுக்கொண்ட துமிந்த சில்வா 2013 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி பிணைக் கையொப்பமிட்டு மறு நாள் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தார். இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த சி.ஐ.டி. யின் அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தலமையிலான குழு 13 பேரை சந்தேக நபர்களாக கருதி வழக்குத் தாக்கல் செய்ய சட்ட மா அதிபரிடம் கோரியது.
வழக்குத் தாக்கல்:
அதன்படி 2015 ஆட்சி மாற்றத்துடன் குறித்த 13 சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றின் விஷேட ட்ரயல் அட் பார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

அனுர துஷார டி மெல், ஹெட்டி கங்கானம்லாகே சந்தன ஜகத் குமர, சிரிநாயக்க பத்திரனகே சமிந்த ரவி ஜயநாத் எனும் தெமட்டகொட சமிந்த, கொடிப்பிலி ஆரச்சிகே லங்கா ரசாஞ்ஜன, விஜேசூரிய ஆரச்சிகே மாலக சமீர, விதான கமகே அமில, கோவில்லேகெதர திஸாநாயக்க முதியன்சலாகே சரத் பண்டார, மொரவக தேவகே சுரங்க பிரேமலால், சமிந்த சமன்குமார அபேவிக்ரம, திஸாநயக்க முதியன்சலாகே பிரியந்த ஜனக பண்டார கலகொட , அரமாதுர லோரன்ஸ் ரொமெலோ துமிந்த சில்வா, ரோஹன மாரசிங்க, நாகொட லியனாரச்சி காமிந்த ஆகியோருக்கு எதிராகவே சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
17 குற்றச்சாட்டுக்கள்:
2011 ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் கொழும்பு மேல் நீதிமன்ற அதிகாரப் பகுதிக்கு உட்பட்ட கொலன்னாவ, கொத்தட்டுவ, அங்கொட, சேதவத்த ஆகிய பகுதிகளில், முறைப்பாட்டாளர் அறியாத சிலருடன் சேர்ந்து பாரத லக்ஷமன் பிரேமசந்திர, தமிந்த தர்ஷன ஜயதிலக, ஜலாப்தீன் மொஹமெட் அஸ்மி மற்றும் மணி வேல் குமார சுவாமி ஆகியோரை படுகொலை செய்தமை, ரஜ்புரகே காமினி என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கடுங் காயத்தை ஏற்படுத்தியமை அவரை கொலை செய்ய முயற்சித்தமை, திட்டமிட்ட பலாத்காரம் ஊடாக கலகம் விலைவித்தல், சட்ட விரோத கூட்டம் ஒன்றின் அங்கத்தவர்களாக இருந்தமை ஆகியவற்றின் கீழ் தண்டனை சட்டக் கோவையின் 296, 140,146,147,486, 300 ஆம் அத்தியாயங்களை மையபப்டுத்தி 17 குற்றச் சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

நீதிமன்ற பிரசன்னம்:
அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே வழி நடாத்திய இந்த வழக்கை, அப்போது கொழும்பு மேல் நீதிமன்றில் கடமையாற்றிய ஷிரான் குணரத்ன ( தற்போது உயர் நீதிமன்ற் நீதியரசர்) தலமையிலான பத்மினி எஸ். ரணவக்க மற்றும் எம்.சி.பி.எஸ். மொறாயஸ் ஆகியோர் ( இருவரும் தற்போது ஓய்வு) அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் விசாரித்தது. 9 மாதங்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
ட்ரயல் அட் பார் நீதிமன்றின் தீர்ப்பு:
ட்ரயல் அட் பார் நீதிமன்றின் தீர்ப்பானது பிரிந்த தீர்ப்பாக இருந்தது. தலைமை நீதிபதியான ஷிரான் குணரத்ன தனது தீர்ப்பில், சந்தேக நபர்கள் 13 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை சட்ட மா அதிபர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி அவர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தார்.

எனினும் நீதிபதி பத்மினி எஸ். ரணவக்க தனது தீர்ப்பில், நீதிமன்றை புறக்கணித்து தலைமறைவாக இருக்கும் ஜானக பிரியந்த கலகொட எனும் நபருட சேர்த்து முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த அனுர துஷார டி மெல், 3 ஆவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவிநாத், 7 ஆவது பிரதிவாதியான சரத் பண்டார மற்றும் 11 ஆவது பிரதிவாதியான ஆர். துமிந்த சில்வாவை மட்டும் குற்றவாளியாக அறிவித்தார். ஏனையோரை விடுவித்தார். இவ்வாறு குற்றவாளியாக காணப்பட்ட ஐவருக்கும் மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
நீதிபதி பத்மினி எஸ். ரணவக்கவின் தீர்ப்புடன் ஒத்துப் போவதாக எம்.சி.பி.எஸ். மொராயஸ் நீதிபதியும் அறிவிக்கவே பெரும்பானமை அடிப்படையில் துமிந்த உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேன் முறையீடும் விசாரணைகளும்:
இந் நிலையில் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஆர். துமிந்த சில்வாவும், அவரது பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் உத்தியோகத்தரான அனுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த மற்றும் சரத் பண்டார ஆகியோர் உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்தனர். மேல் நீதிமன்றின் ட்ரயல் அட் பார் நீதிமன்றின் தீர்ப்பை ரத்து செய்து தம்மை விடுவிக்குமாறு அவர்கள் கோரிய நிலையில் 2017 நவம்பர் 27 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அந்த மேன் முறையீட்டை விசாரிக்க தீர்மானித்தது. அதன்படி 2018 மார்ச் 29 ஆம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பமாகின.
மேன் முறையீட்டை விசாரித்தவர்கள்:
அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹார, நலின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த விஷேட மேன் முறையீட்டை விசாரித்தது.

துமிந்த சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், அனுர துஷார டி மெல் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், தெமட்டகொட சமிந்த மற்றும் சரத் பண்டார ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சவேந்ர பெர்ணான்டோ மற்றும் அனுர மெத்தெகொட ஆகியோரும் உயர் நீதிமன்றில் முன்னிலையாகி வாதிட்டனர். இந்த மேன் முறையீட்டு மனு தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே ஆஜரானார்.
இந் நிலையில் சட்ட மா அதிரினதும், ஏனைய மேன் முறையீட்டாளர்களினதும் வாதங்கள் 6 நாட்கள் பூராக இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற வாதங்கள் கடந்த ஜூலை 5 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க அனைத்து தரப்புக்கும் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே வாதங்கள் சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் தலமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு கடந்த 2018 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 2.50 மணிக்கு தீர்ப்பறிவித்தது.
உயர் நீதிமன்றின் தீர்ப்பு:
ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் ஏகமனதான தீர்ப்பை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் வாசித்தார்.
முதலில் மேல் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட முதலாவது குற்றவாளியான பொலிஸ் உத்தியோகத்தர் அனுர துஷார டி மெல்லை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதாக பிரதம நீதியரசர் அறிவித்தார். அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்ற ரீதியில், ஏனைய குற்றவாளிகளுடன் இணைந்து பொது நோக்குடன் சட்ட விரோத குழுவில் அங்கத்தவராக இருந்து இச்சம்பவத்தை அரங்கேற்றினார் என கருத முடியாது என அவதானித்தே பிரதம நீதியரசர் அவரை விடுவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு எதிராக 17 ஆவது குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களில் இருந்து அனைத்து குற்றவாளிகளையும் பிரதம நீதியரசர் விடுவிப்பதாக அறிவித்தார்.
எனினும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக அறிவித்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், அதனால் சமிந்த ரவி ஜயநாத் அல்லது தெமட்டகொட சமிந்த , டி.எம்.சரத் குமார பண்டார மற்றும் ஆர். துமிந்த சில்வாவின் மேன் முறையீட்டை நிராகரிப்பதாக அறிவித்தார்.
அதன்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது.
