சாட்சிகளின் சுருக்கத்தை மன்றில் சமர்ப்பிக்குக;  அஹ்னாப் விவகாரத்தில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க சி.ரி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சிகள் அனைத்தினதும் சுருக்கத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ரி.ஐ.டி. க்கு உத்தரவிட்டது. அத்துடன்  அஹ்னாபை நீதிமன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் விளக்கமளிக்குமாறும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு அது  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆஜராகிய சட்டத்தரணிகள்:

 இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள்,  விசாரணைக்கு வந்த போது, அஹ்னாப் ஜஸீம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ், சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர மற்றும்  சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
 இதன்போது மன்றில் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர வாதங்களை முன் வைத்தார்.
‘ கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறு நாள் சனிக் கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

 நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவது மறைக்கப்பட்டது:

அத்துடன் அஹ்னாப் ஜஸீமை நீதிமன்றில் ஆஜர் செய்வதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அவரது சட்டத்தரணிக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ கூட அறிவிக்கவில்லை . இதனால் அவர் சார்பில் மன்றில் முன் வைக்க வேண்டிய முக்கியமான விடயங்களை அன்றைய தினம் முன் வைக்க முடியாமல் போயுள்ளது.

 அஹ்னாப் ஜஸீமின் குடும்பத்தார்  கடந்த 12 ஆம் திகதி சனிக் கிழமை அவருடன் பேசுவதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ள போதும், அப்போது கூட ஒவ்வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்குமாறு தெரிவித்துள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதை அவர்கள் மறைத்துள்ளனர். 14 ஆம் திகதியே அஹ்னாப் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்துள்ளது.

 அடிப்படை உரிமை மீறல் மனு:

ஏற்கனவே அஹ்னாப் ஜஸீமின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்கத்தின் கீழ் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர்.இந் நிலையில் கடந்த 2020 மே 16 அம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதற்கான முயற்சி:

  தனக்கு எதிராகவே ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாபை சித்திரவதை செய்துள்ளனர்.
இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் , அஹ்னாபின் தந்தையிடம், சுய ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க அஹ்னாபை சம்மதிக்க வைக்குமாறு பேசியுள்ளார்.
 அத்துடன் அஹ்னாபை அவரது  குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் பார்வையிட  முதலில் அனுமதிக்கப்படாத நிலையில்,  பல்வேறு போராட்டங்களின் பின்னரேயே குடும்பத்தாருடன் பேச வாரத்தில் 3 நிமிடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் , உள ரீதியிலான சித்திரவதை:

அஹ்னாப், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்துள்ளார். இதனாலேயே நாம் உயர் நீதிமன்றினை நாடி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளோம்.

அஹ்னாபுக்கு அநீதி:

 இவ்வாறான நிலையிலேயே, அவரது பெற்றோர் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்காது கடந்த 12 ஆம் திகதி அவர் இம்மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஹ்னாப் தொடர்பில் உடல், உள ரீதியிலான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதால், அஹ்னாபின் மன நிலை தொடர்பில்  மருத்துவ அறிக்கையொன்றினை பெற்றுக்கொள்ள உத்தரவினைக் கோர, எமக்கு அறிவிக்காமல் அவர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டதால் முடியாமல் போனது. இது சந்தேக நபரான அஹ்னாபின் வழக்கு விசாரணைகளில் அவருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.

ஆஜர் செய்யப்பட்ட சட்ட பிரிவிலும் சிக்கல்:

 அஹ்னாப் ஜஸீமை பயங்கரவாத தடை சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர் அச்சட்டத்தின் 7 ( 1) ஆம் பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே அவரை ஆஜர் செய்துள்ளனர்.  தாம் கோரிய ஓப்புதல் வாக்கு மூலத்தை வழங்காமை காரணமாக, குறைந்த பட்ச நிவாரணம் கூட அஹ்னாபுக்கு கிடைத்துவிடக் கூடாது என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர்,. இந்த விடயத்தில் சட்ட மா அதிபரின்  நிலைப்பாட்டைக் கூட பெற்றுக்கொள்ளாமல் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்க கோரி அதனைப் பெற்றுக்கொண்டுள்ளனர்,

 புனித குர்ஆன், கவிதை தொகுப்புகள்:

அத்துடன் அஹ்னாப் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவரிடம் இருந்து புனித குர்ஆன் பிரதி ஒன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பில் இருந்த போது அவர் எழுதிய கவிதைகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.எனவே  அஹ்னாப் விடுவிக்கப்படும் வரை அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என  சி.ரி.ஐ.டி. மற்றும் சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட வேண்டும்.

சாட்சிகளின் சுருக்கம்:

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அஹ்னாப் ஜஸீம் சி.ரி.ஐ.டி.யினரால் தடுப்பில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு எதிரான சான்றுகள் ஏதேனும் வெளிப்பட்டிருந்தால், அது தொடர்பில் குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்தியாயத்தின் கீழ் அதன் சுருக்கத்தை மன்றுக்கு கையளிக்க உத்தரவிட வேண்டும்

சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும்:

 அதே போல், விளக்கமறியலில் உள்ள அஹ்னாபை பார்வையிட்டு அவருடன் சட்டத்தரணிகள் சந்தித்து கலந்துரையாட அவகாசம் ஏற்படுத்தித் தரல் வேண்டும்.’ என  சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர,  மன்றினை கோரினார்.
கோரிக்கைகளுக்கு அனுமதியளித்த நீதிவான் சந்திம லியனகே, இது குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின்  தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி
விளக்கமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
Previous articleஅசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இரு வாரங்களில் முடிவு
Next articleஅரசியலமைப்புக்கு உட்பட்டா  துமிந்தவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது? ; நீதிபதிகளின் பரிந்துரைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கேள்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here