பொலிஸ்மா அதிபரை நீக்குவது குறித்து நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானதென்று ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெளிவுபடுத்தினார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பொறுப்புக் கூறவேண்டுமென்று ஏதாவதொரு விதத்தில் உறுதியானாலும், தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் அவரை நீக்க சட்ட ஏற்பாடுகள் இல்லையென்று நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நீக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் போதியளவு இருக்கின்றதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன medialk.comக்கு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் ஏற்பாடுகள் குறித்து கலாநிதி ஜயம்பதி தெளிவுபடுத்தும் போது,
‘2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அதிகாரிகளை நீக்கும் சட்டத்தில், இதற்குத் தேவையான விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப சட்டமா அதிபர் அல்லது பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டொன்று இருப்பின், அவர்களிடம் சுதந்திரமாக கருத்துக் கோரி, அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் பதவி நீக்கலாம்.’
தற்போதைய ஆளும்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்தபோதே, இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கலாநிதி ஜயம்பதி சுட்டிக்காட்டினார்.