Home செய்தி உரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராக 54 அமைப்புக்கள் 72 செயற்பாட்டாளர்கள் கைகோர்ப்பு

உரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராக 54 அமைப்புக்கள் 72 செயற்பாட்டாளர்கள் கைகோர்ப்பு

உரிமைகள் மீறப்படுகின்றமைக்கு எதிராக 54 அமைப்புக்கள் 72 செயற்பாட்டாளர்கள் கைகோர்ப்பு

கருத்து, கருத்து  வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் நாட்டில் தீவிரமடைந்துவரும் தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில்  அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தரப்பினரை பாதுகாக்குமாறு  54 அமைப்புக்களும் 72 செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தீவிரமடையும்  கொரோனா பரவல், மீறப்பட்டு வரும் உரிமைகள்,  வீழ்ச்சியடைந்துள்ள சட்டத்தின் மீதான ஆட்சி தொடர்பில்  குறித்த அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் தமது கவலையை ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர்கள், அவர்களது குடும்பத்தார், அரச ஊழியர்கள் மற்றும் மேலும் பலருக்கு கடந்த நாட்களில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்தும் போதும் அவர்களது கடமைகளை முன்னெடுக்கும் போதும் முன்னெடுக்கப்பட்ட தடைகள் தொடர்பில் குறித்த அறிக்கை விரிவாக ஆராய்ந்துள்ளது. அத்துடன் நீண்ட நாட்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடர்பிலும் இதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கம், இலங்கை சுற்றாடல் கற்கைநெறியகம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், சமூகம் மற்றும் மதம் தொடர்பான நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு, காணாமல்போனோரின் உறவினர்கள், தேசிய சமாதானப்பேரவை, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளடங்கலாக 54 அமைப்புக்களும் அம்பிகா சற்குணநாதன், ரனிதா ஞானராஜா, மரிசா டி சில்வா, இஷாரா தனசேகர உள்ளடங்கலாக 72 தனிநபர்களும் இணைந்து இந்த  கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை சுருக்கமாக வருமாறு:

தற்போது தீவிரமடைந்துவரும் தொற்றுநோய்ப்பரவல் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு ஆகிய விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.  பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் சுகாதாரப்பிரிவினரையும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஏனைய தரப்பினரையும் பாராட்டுகின்றோம்.
தடுப்பூசி வழங்கல் தொடர்பில் தெளிவான முன்னுரிமை அடிப்படை மற்றும் சீரான திட்டமிடல் இன்மை, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்கும் நோக்கில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், சுகாதாரப்பணியாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஒத்துழைப்பைப்பெற்று செயற்படாமை ஆகிய விடயங்கள் பெரிதும் விசனமளிக்கின்றன. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படும் தரப்பினருக்கு முதலில் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது.
அதேவேளை வீடுகளில் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் போன்றவை முறையாகப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அத்தோடு தனிமைப்படுத்தல் விதிமுறைகளும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களைக் கைதுசெய்தல் தொடர்பான செயன்முறைகளும் பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுகின்றமையானது பெரிதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அண்மைக்காலத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களினதும் அதனால் ஏற்படும் மரணங்களினதும் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும் அதேவேளை, இவற்றுக்கு மத்தியில் கருத்துச்சுதந்திரத்தை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையையும் பரவலாக அவதானிக்கமுடிந்தது. குறிப்பாக ஊடகங்களுக்குக் கருத்துவெளியிடும் சுகாதாரப்பணியாளர்கள் மீது நடவடிக்கை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதுமாத்திரமன்றி தமது கருத்துக்களை சுதந்திரமான வெளிப்படுத்தியமைக்காக அண்மையில் பல நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சிலர் மிரட்டல்களுக்கும் உள்ளானார்கள்.
வெகுவான இராணுவமயமாக்கலுக்கு உள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிராமத்தில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நோக்கில் ஸ்தாபிக்கப்படவிருந்த நினைவுச்சின்னமானது இராணுவ இருப்பிற்கு மத்தியில் ஒரே இரவில் காணாமல்போனோது.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே அவ்விடத்திலிருந்த நினைவுச்சின்னம் அதே இரவில் சேதமடைந்தது.
சிலாவத்துறையைச் சேர்ந்த 26 வயதான முஸ்லிம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம்  ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கோ அல்லது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்கோ அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் அவர் பாரபட்சமாகவும் இழிவாகவும் நடத்தப்படுகின்றார். அதேபோன்று மனித உரிமை ஆர்வலரும் சட்டத்தரணியுமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சுமார் 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஹிஜாஸுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுமாறு தாம் வற்புறுத்தப்பட்டதாகக்கூறி சிறுவர்களும் இரண்டு ஆசிரியர்களும் அடிப்படை உரிமைமீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிவற்றின்போது சிறைக்கைதிகள், தொழிற்சாலை ஊழியர்கள், அன்றாடக்கூலித்தொழிலாளர்கள் போன்ற – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உயர்வாக உள்ள தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இதுபோன்ற அவசரகாலப்பகுதிகளில் அச்சூடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக தொற்றுநோய் தொடர்பான அனைத்துவித தகவல்களையும் பெறுவதற்கான உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது. அதேபோன்று உண்மையான தகவல்களை வெளியிடுகின்ற, மாற்றுக்கருத்தக்களை முன்வைக்கின்ற, விமர்சனம் செய்கின்ற எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் எவ்வித பழிவாங்கல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படக்கூடாது . என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here