பொது மக்களை சங்கடத்துக்கு உட்படுத்துவதை உடன் நிறுத்துக: பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன உத்தரவு

கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பணிகளுக்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், வாகனங்கள் மற்றும் பொது மக்களை சோதனை செய்யும் போதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை அமுல் செய்யும் போதும் பொது மக்களை சங்கடப்படுத்தும் படியாக  நடந்துகொள்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பொது மக்கள் சங்கடப்படும்படியாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்வது, பொது மக்களின்  ஆத்ம கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என   பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறு பொது மக்களை சங்கடப்படுத்தும் போது அவர்களுக்கு பொலிஸார் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும் என  தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர், இதன் பிறகு பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடுவது தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியானால், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் பொலிசஸ் பிரிவுகளில், பலவீனமான மேற்பார்வை தொடர்பில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் செய்யும் போதும் , வாகனம், பொதுமக்களை பரிசோதிக்கும் நிலைமைகளின் போதும் பொது மக்கள் சங்கடங்களுக்கு உள்ளாக்கபப்டுவது தொடர்பில்  பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட  பிரதிப் பொலிசஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்,  கட்டளை அதிகாரிகள் / பணிப்பாளர்கள்,  பிரதேச பொலிஸ் வலய பொலிஸ் அத்தியட்சர்கள்,  உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள்/ பொறுப்பதிகாரிகளுக்கு  விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்தே மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த அறிவித்தல் வருமாறு:
‘ கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில்  பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் பொலிஸார், வீதிச் சோதனை சாவடிகளில் வாகனம், பொது மக்களை சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகின்றனர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல் செய்யும் போது சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் சங்கடப்படும்படியாக நடந்து கொள்ளும் காட்சிகள் அவ்வப்போது ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக சங்கடப்படும் நபர்களின் ஆத்ம கெளரவம் பாதிக்கப்படுவதுடன், அவ்வாறான செயர்பாடுகள் ஊடாக பொலிஸார் தொடர்பிலும்  தாக்கங்களே உருவாகும்.  அது பொலிஸாரின் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும்.
வாகனம், நபர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை தொடர வேண்டும். எனினும் பொது மக்களை குறைத்து மதிப்பிடும் அல்லது அவர்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கின்றேன்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும்  தெளிவுபடுத்தவும்.  பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சட்டைப் பை  பதிவுப் புத்தகத்திலும் பதிவிடப்பட்டிருத்தல் வேண்டும்.
தமது பிரிவுக்குள் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாரறு பதிவிட்டுள்ளதாக  பொலிசஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான  அத்தியட்சர்கள்,  மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்  மா அதிபர்களுக்கு அறிவிக்க வேண்டும்.  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தமது மாகாணத்தில் அனைத்து பொலிசாரும் குறித்த பதிவினை இட்டுள்ளதாக 20.05.2021  ஆம் திகதி 18.00 மணிக்கு முன்னர்  dig.staff@police.lk   எனும் மின்னஞ்சல் முகவரியூடாக எனக்கு அறிவிக்க வேண்டும்..
வாகன பரிசோதனைகள், பொது மக்கள் சோதனைகளின் போது பொது மக்கள்  சங்கடங்களுக்கு உள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்கள் இனி மேல் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தால், குறித்த  பொலிசஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், பலவீனமான மேற்பார்வை தொடர்பில் குறித்த உத்தியோகத்தரின் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous articleபிழையை ஒப்புக்கொண்ட சட்ட மா அதிபர் திணைக்களம்;  சர்ச்சைக்குரிய நினைவுப் பலகையினை அகற்றி தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை
Next articleரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து நீதியரசர் ஜனக்  விலகல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here