ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து நீதியரசர் ஜனக்  விலகல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து நீதியரசர் ஜனக் டி சில்வா  விலகியுள்ளார்..
ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்தமையினால் நீதியரசர் ஜனக் டீ சில்வா தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக இன்று மன்றில் அறிவித்தார்.
ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர்  தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து   உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது  உறுப்புரைக்கு அமைய,  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, அவர்கள்  தனித் தனியாக  தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று  உயர் நீதிமன்றில் நீதியரசர் விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது.
இதன் போது ரிஷாத் பதியுதீன் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டுடன் தான் ஆஜராவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா  நீதிமன்றுக்கு அறிவித்தார்.
ரியாஜ் பதியுதீன் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோருடன் தான் ஆஜராவதாக சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா முன்னிலையானார்.
 இந் நிலையில் இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வேண்டும் என சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டார்.
அதனை அனுமதித்த உயர் நீதிமன்றம் குறித்த இரு மனுக்கள் தொடர்பிலும் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அறிவித்தது.
இவ்வாறான நிலையிலேயே மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதக நீதியரசர் ஜனக் டி சில்வா அறிவித்த நிலையில்,  குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி நீதியரசர் ஜனக் டி சில்வா இல்லாத நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Previous articleபொது மக்களை சங்கடத்துக்கு உட்படுத்துவதை உடன் நிறுத்துக: பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன உத்தரவு
Next articleரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையிலிருந்து நீதியரசர் கோதாகொடவும் விலகல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here