பிழையை ஒப்புக்கொண்ட சட்ட மா அதிபர் திணைக்களம்;  சர்ச்சைக்குரிய நினைவுப் பலகையினை அகற்றி தமிழ் மொழியை இணைக்க நடவடிக்கை

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகத்தின்  நினைவுப் பலகையில்  தமிழ் மொழி உள்வாங்கப்படாமை  சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், குறித்த நினைவுப் பலகை இன்று அகற்றப்பட்டது. சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின்  கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக அந்த  நினைவுப் பலகை அகற்றப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர்  அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
 இந் நிலையில் தமிழ் மொழியையும் உள் வாங்கி புதிய நினைவுப் பலகை மிக விரைவில் அங்கு காட்சிப் படுத்தப்படும் என அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

இலத்திரனியல் நூலகம்:

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகம் நேற்று  (21) திறந்து வைக்கப்பட்டது. சட்ட மா அதிபர் மற்றும் சீன தூதுவர் ஆகியோர் இணைந்து அதனை திறந்து வைத்தனர்.
அதன் நினைவுப் பலகையில்  விபரங்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனினும், அதில் தமிழ் மொழியில் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சமூக வலைத் தளங்களில் காட்டம்:

 குறிப்பாக அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்ட நிலையில், துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் இந்த விடயம் இணைத்து பேசப்பட்டது. சீனாவின் ஆதிக்கம் நாட்டில் ஆழமாக உள்ளதாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டன. இது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் உடனடியாக வெளிப்படையாக எவரும் கருத்து தெரிவிக்காத பின்னணியில், சீன தூதரகம் அதற்கு பதிலளித்தது.

சீன தூதரகத்தின் விளக்கம்:

சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் ஊடாக, சீன தூதுவர் கியூ சென்ஹொன் விளக்கமளித்திருந்தார்.
‘  இந்த இலத்திரனியல் நூலகம் சீன அரசாங்கம் மற்றும் மக்களின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மரியாதையாக சீன மொழி நினைவுப் பலகையில் பயன்படுத்தப்ப்ட்டுள்ளது.’ என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்ப்ட்டிருந்தது.

சட்ட மா அதிபர் மீதான விமர்சனம்:

இந்த விடயத்தில் சட்ட மா அதிபர் அரச மொழிக் கொல்கையை மீறிவிட்டதாக பரவாலன குற்றச்சாட்டு முன் வைக்கப்ப்ட்டது.
இலங்கையின் அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தின் கீழான மொழி எனும் தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள 18 ஆம் 19 ஆம் உறுப்புரைகளை சட்ட மா அதிபர் கருத்தில் கொள்ள வில்லை எனவும் பரவலகா குற்றம் சுமத்தப்பட்டது.
 இவ்வாறான நிலையிலேயே உடனடியாக  குறித்த நினைவுப் பலகை நீக்கப்பட்டு, தமிழ் மொழியை சேர்த்து மீள அப்பலகையை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரின் நிலைப்பாடு:

இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் வினவிய போது,
இந்த விடயம் தொடர்பில் தான் சீனாவின் உரிய அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய பின்னர் தற்போது அந்த பெயர்ப்பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Previous articleதுறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவளித்த இஷாக் ரஹ்மான், அலி சப்றி ரஹீம் அ.இ.ம.கா.விலிருந்து இடைநிறுத்தம்
Next articleபொது மக்களை சங்கடத்துக்கு உட்படுத்துவதை உடன் நிறுத்துக: பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here